Monday, October 7, 2013

திருவிற்குடி வீரட்டானத்தின் பெருமைகள்!!!


அட்டவீரட்டானங்களில் ஐந்தாவதாக இருப்பது திருவிற்குடி ஆகும்.இந்த வீரட்டானம் திருவாரூரில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் இருக்கிறது.விற்குடி என்ற பெயரோடு இந்தக் கோவிலின் சிறப்புகளை மிகுந்த போராட்டம் மற்றும் மிக நீண்ட தேடல்களுக்குப் பிறகே கிடைத்திருக்கிறது.அப்படி தேடக் காரணம்,திருவிற்குடிக்கு ஒருமுறை சென்று வழிபட்ட அன்று,அந்த கோவிலுக்குள் இருந்த போது ஏற்பட்ட சில உணர்வுகளும்,காட்சிகளுமே காரணம் ஆகும்.(அட்ட வீரட்டானங்களில் மூலவராக சிவலிங்க வடிவத்தில் இருப்பவர் ஸ்ரீகால பைரவப் பெருமானே என்பதை நினைவிற்கொள்ளவும்)
சதாசிவம்,ஸ்ரீகாலபைரவர் மற்றும் 64 விதமான பைரவர்கள் இவர்களைத் தவிர அனைத்து தெய்வங்களுமே பதவிகள் தான் என்பது திருவிற்குடியில் இருக்கும்போதுதான் உணர முடிந்தது.பல ஆயிரம் அல்லது லட்சம் தடவை மனிதனாகப்பிறந்து,ஒவ்வொரு பிறவி முழுவதும் ஸ்ரீபைரவர் வழிபாடு செய்துகொண்டே வந்தால்,நமது ஆத்ம சக்தியைப் பொறுத்து தெய்வப் பதவியை அடையலாம்.பூமியில் 432 கோடி வருடங்கள் ஆனால்,நம்மை படைத்த பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும்.பிரம்மாவுக்கு இப்படி நூறு வயது ஆனதும்,அடுத்த பிரம்மா பொறுப்புக்கு வருகிறார்.இதேபோலத்தான்  முமூர்த்திகளும்! இந்த மும்மூர்த்திகளில் பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்பதே பொருத்தமான வரிசை ஆகும்.நாம் பிரம்மா,விஷ்ணு,சிவன் என்று பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
ஒரு பிரளயம் ஏற்பட பல ஆயிரக்கணக்கான கோடி வருடங்கள் ஆகும்.பிரளயம் ஏற்பட்ட பிறகு,அடுத்த படைப்பு ஏற்பட மீண்டும் மும்மூர்த்திகள் பதவிக்கு மனிதர்களில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.சாதாரண மனிதன்,ஜோதிடம் அறிந்த மனிதன்,துறவு வாழ்க்கை வாழும் மனிதன்,துறவியாகவே வாழப் பிறப்பு எடுக்கும் மனிதன்,பிறப்பே இல்லாமல் தேவைப்படும்போது பூமிக்கு வரும் சித்தர்கள்,கந்தர்வர்கள்,தேவர்கள்,யட்சர்கள்(இந்த யட்சர் இனத்தைச் சேர்ந்தவரே செல்வத்து அதிபதியான குபேரன்),நாக கன்னிகள்,நாக ராஜாக்கள்,நாக தேவதைகள்,அரக்கர்கள்,அசுரர்கள்,அஷ்ட திக் பாலகர்கள்,வானில் இருக்கும் நட்சத்திரங்கள்(இவர்கள் அனைவருமே புண்ணிய ஆத்மாக்கள்=நாம் இரவில் செய்யும் பாவ புண்ணியங்களை அஷ்ட திக் பாலகர்களிடம் ஒப்படைத்து,நமது மரணத்துக்குப்பிறகு எமதர்மராஜாவால் தீர்ப்பு சொல்லக் காரணமாக இருப்பவர்கள்=முழு விபரமறிய தினத்தந்தியில் வெளிவந்த அதிசய சித்தர்கள் என்ற தொடரை வாசிக்கவும்),துருவ நட்சத்திரம் என்று ஆன்மீகப் பதவிகள் படிப்படியாக விரிகின்றன.மேலே கூறிய வரிசையில் முதலில் இருப்பவனே சராசரி மனிதன்.அடுத்தடுத்து அவனது ஆன்மீக வளர்ச்சியை பட்டியலிட்டு இருக்கிறோம்.
 இவர்கள் அனைவருமே பூமியில் திரும்பத் திரும்ப பிறந்து,இறந்து,பிறந்து,இறந்து தமது ஆத்ம சக்தியை அதிகரித்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல வானுலகப்பதவிகளை அடைந்திருக்கின்றனர்.பல நூறு பிரம்மாக்களை பார்த்த சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆவார்.இவர் இந்த அதிசயத்திலும் அதிசயமான சித்து சக்தியை ஸ்ரீகால பைரவர் மற்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டின் மூலமாக பெற்றார்.ஆக,நாமெல்லாம் ஸ்ரீபைரவர் வழிபாடு செய்ய புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அட்ட வீரட்டானங்களில் நிகழ்ந்த பல நிகழ்வுகள்,நடக்கும்போது விநாயகரும்,முருகக்கடவுளும் பிறக்கவே இல்லை;என்பதை வாசிக்கும் போது எத்தனைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த பைரவ திருவிளையாடல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.இந்த அட்டவீரட்டானங்களுமே நமது தமிழ் நாட்டில் இருப்பது நாம் பல யுகங்களாக செய்த புண்ணியம் என்றே எண்ணத் தோன்றுகிறது.இல்லையா?!!! அது மட்டுமா? இவைகளை நாம் வாசிக்க என்ன தவம் செய்தோமோ?
புராணங்கள் அனைத்துமே உண்மை என்பதை எதிர்கால விஞ்ஞானம் தமது அறிவு மற்றும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கும்.அப்படி நிரூபிக்கும்போது நாத்திகத்தின் மூச்சுக்காற்று கூட இந்த பூமியில் இருக்காது என்பது சர்வ நிச்சயம்.இராமாயணமும்,மஹாபாராதமும் உண்மை என்பதற்கான ஆதாரங்கள் இந்தியா நெடுக இருக்கின்றன.அதே போல இந்த திருவிற்குடியில் நிகழ்ந்த சம்பவங்களும் உண்மை என்பதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.
அட்டவீரட்டானங்கள் என்ற பெயரில் இது வரையிலும் 12 விதமான புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.அவைகளில் ஒன்றிரண்டு மட்டுமே பொருத்தமில்லாத கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றன.மற்றவைகள் அனைத்துமே சைவ சமயத்தின் ரகசிய உண்மைகளை நம்முள்ளே விண்டு வைக்கின்றன.இவைகளில் உண்மைத் தன்மையைத் தேடி ஒப்பிட்டுப் பார்த்தப்பின்னரே,உங்களுக்கு இந்தப் பதிவாக வெளியிடுகிறோம்.
சகல தெய்வங்களும்,தேவர்களும் விஷ்ணுவிற்கு துளசித் தீர்த்தம் அளித்து அவருடைய மயக்கத்தை நீக்கியதால்,இன்றும் அதே நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருவிற்குடி வீரட்டேஸ்வரரின் திருக்கரத்தில் இருந்த சுதர்ஸன சக்கரத்தின் சக்தியை அறிந்த மஹா விஷ்ணு அந்த அற்புத சக்கரத்தை அடைய விரும்பினார்.லிங்கப் பரம்பொருளை பிரதிட்டை செய்தார்.வைகுண்டத்திலிருந்து விமானம் கொண்டு வந்து அமைத்து நாள்தோறும் சிவசகஸ்ரநாமம் ஓதி சிவபூஜை செய்தார்.வானகத்திலிருந்து விமானம் பூமிக்கு வந்ததால் இத்தலம் வீழிமிழலை என்று பெயர் பெற்றது.திருவாரூரை அடுத்துள்ள பூந்தோட்டம் என்ற இடத்திற்கு அருகே உள்ளது.மஹாவிஷ்ணு ஓம்நமச்சிவாய மகாமந்திரம் ஓதி நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு ஆயிரம் தாமரை மலர்களால் ஆயிரம் சிவநாமம் ஓதி நியமம் தவறாமல் அர்ச்சனை செய்தார்.பல யுகங்கள் இவ்வாறு தினமும் சிவபூஜை செய்து வரும்போது,ஒரு நாள் ஒரு தாமரை மலர் குறைந்து போனது.இதைக் கவனித்த மஹாவிஷ்ணு தமது கண்களில் ஒன்றைப் பறித்து வைத்து,ஈசனுக்கு அர்ப்பணித்து பூஜையை நிறைவு செய்தார்.இதனால் தான் திருமாலுக்கு கமலக் கண்ணன் என்ற பெயர் வந்தது.
பக்தியுடனும்,சிரத்தையுடனும்(சிரத்தை=சின்சியாரிட்டி)திருமால் செய்த சிவபூஜையின் விளைவாக பரமேஸ்வரன் சுதர்ஸன சக்கரத்தை மஹாவிஷ்ணுவுக்கு வழங்கி அருளினார்.அவர் இழந்த கண்ணையும் அருளிச் செய்தார்.இதனால்,சதாசிவக் கடவுளுக்கு கண்ணீந்தப் பெருமான்,ஆழியீந்த பெருமான் என்ற திருநாமங்கள் உண்டாயின.லிங்கப் பரம்பொருளை வலம் வந்து விழுந்து வணங்கிப் போற்றி எழுந்த விஷ்ணு சுதர்சனச் சக்கரத்தைப் பெற்றுக்கொண்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்.


நீற்றினை நிறைய பூசி நித்தம் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றழி ஒருநாள் ஒன்று குறைய கண் நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே (அப்பர்)
என்று திருவீழிமிழலை வரலாறு முழுவதையும் இத்தலத்துக்குரிய தேவாரப்பதிகங்களும் பிற பதிகங்களின் பாடல்களும் போற்றுகின்றன.
திருவீழி மிழலையில் சிவ பூஜை செய்து சுதர்ஸனச் சக்கரத்தைப் பெற்றுக்கொண்ட நாராயணனால் அளவு கடந்த சக்தி கொண்ட அந்தச் சக்கரத்தைத் தாங்க முடியவில்லை;மஹாவிஷ்ணு சக்கரத்தை கையில் வைத்துக்கொள்ள முடியாமல் தவித்துத் தடுமாறினார்.லிங்கப் பரம்பொருளைப் பிரதிட்டை செய்து மீண்டும் பரப்பிரும்மத்தை வழிபட்டார்.


பரமேஸ்வரன் சக்கரத்தின் சக்தியை பின்னமாக்கி குறைத்து அருளினார்.திருமால் சக்கரத்தைத் தரிக்கும் பேறு பெற்று சக்கரதாரியானார்.இதனால் இந்தத் தலம் திருமாற்பேறு என்று பெயர் பெற்றது. திருமால் சக்கரம் தாங்கும் பேறு பெற்றுச் சக்கரதாரியான இந்த வரலாற்றை
சக்கரம் பெற்ற தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைத் தரிக்க ஒண்ணாமையால்
மிக்கு அரன் தன்னை விருப்புடன் அருச்சிக்க
தக்க நல் சத்தியைக் கூறு செய்ததே
என்று மண்ணிலே பிறக்காமல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து சென்ற திருமூலமுனிவரின் திருமந்திர ஆகமநூல் கூறுகின்றது.சக்கரப்பேறு என்ரா தனியதிகாரத்தில் இதைத் திருமூலர் பாடுகின்றார்.


திருமால் சிவபூஜை செய்து சக்கரப்பேறு பெற்ற திருமாற்பேறு என்ற இத்தலம் தொண்டை நாட்டில் காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ளது.தற்காலத்தில் இத்திருத்தலம் திருமால்பூர் என்று வழங்கப்படுகிறது.சென்னையிலிருந்து திருமால்பூருக்கு தொடர்வண்டி வசதி இருக்கிறது.


திருமால் திருநீறு அணிந்து கொண்டு சிவபக்தராக விளங்குவதை நம்மாழ்வார் தனது திவ்விய பிரபந்தத்தில் போற்றிப்பாடியிருக்கிறார்.
கரிய மேனி வெளிய நீறு
சிறிதே இடும் கோலத் தடங்கண்ணன்
திருவீழிமிழலைத் திருத்தலத்தில் சங்கு சக்கரம் இல்லாமல் கைகூப்பி சிவபூஜை செய்யும் விஷ்ணுவின் உற்சவமுர்த்தி உள்ளது.
தொடர்ந்து ஏழு மனிதப் பிறவிகளில் ஸ்ரீபைரவர் வழிபாடு செய்து வந்தால்,எட்டாவது பிறவியில் ஸ்ரீபைரவரே நமக்கு ஆன்மீக குருவாக தேடி வருவார் என்பது தேவரகசியம் ஆகும்.அதே சமயம்,ஒரு பிறவி முழுவதும் ஸ்ரீபைரவர் வழிபாடு செய்து வந்தாலே,நமக்கு அடுத்த பிறவியில் ஸ்ரீபைரவரை நேரடியாக தரிசனம் செய்தவர் ஆன்மீக வழிகாட்டியாக அமைவார் என்பது இதுவரை வெளியே தெரியாத ஆன்மீக ரகசியம் ஆகும்.இந்த திருவிற்குடியில் தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்குச் சென்று மூலவரை வழிபாடு செய்ய வேண்டும்;


தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலத்தில் இங்கே இருக்கும் வீரட்டேஸ்வரருக்கு அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,   வில்வமாலை,சிவமணி,பால் போன்றவைகளால் அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகம் நிகழ்ந்துகொண்டிருக்கும் போது ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய போற்றி என்ற மந்திரத்தை மனதுக்குள் வடக்கு நோக்கியவாறு அமர்ந்து ஜபிக்க வேண்டும்.அபிஷேகம் நிறைவடைந்தப்பின்னர்,அபிஷேக நீரையே அருந்த வேண்டும்.திருவாரூருக்குத்  திரும்பியப்பின்னர்,ஒரு இளநீர் அருந்த வேண்டும்.பிறகு,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமல்,யாருடைய வீட்டிற்கும் செல்லாமல் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படிச் செய்வதால்,எப்பேர்ப்பட்ட கடுமையான கர்மவினைகளும் தீர்ந்துவிடும்;மேலும்,நாம் ஏழு பிறவிகளில்(புல்,பூண்டு,பறவை,விலங்கு,மனிதன்) முதன்முதலில் மனிதப் பிறவி எடுத்ததிலிருந்து இந்த மனிதப்பிறவி வரை எத்தனை மனிதப் பிறவிகள் எடுத்தோம்? எந்தெந்த மனிதப்பிறவிகளில் என்னென்ன தவறுகள் மற்றும் புண்ணியம் செய்தோம் என்பதை அடுத்த சில மாதங்களில் அறிந்துகொள்வோம்;இந்த குப்தக் கலையை நமக்கு அருளிய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்களுக்கு கூகுள் கூகுள் நன்றிகள்!!!

ஆதாரம் மற்றும் நன்றிகள்:அட்டவீரட்டானங்கள்,பக்கங்கள் 122,123,126,127.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment