Monday, October 7, 2013

ஒரு பொக்லைன் டிரைவரும்,ஸ்ரீ கால பைரவரின் மந்திரத்தின் சக்தியும்!!!

தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியைச் சேர்ந்த வளர்ந்து வரும் நகரம் அது.அங்கே ஒரு நண்பர் அறிமுகமானார்;அவருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களைப் பற்றிய விளக்கங்களைச் சொல்லி,அவரை சைவ உணவாளராக மாற்றுவதற்கு எமக்கு பைரவரின் திருவருளால் சுமார் 15 மாதங்கள் ஆனது.அவர் பொக்லைன் டிரைவராக பணிபுரிகிறார்.
15 மாதங்களுக்குப்பிறகு ஜீவசமாதி வழிபாடு செய்ய அவரைத் தயார் செய்யத் துவங்கினோம்.ஒரு பவுர்ணமியன்று அவரது கிராமத்துக்கு அருகில் இருக்கும் ஜீவசமாதிக்கு அழைத்துச் சென்று எப்படி ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்? என்பதை நேரடியாக செயல்முறை விளக்கம் செய்து காட்டினோம்.தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் ஜீவசமாதி வழிபாடு செய்தார்.எட்டாவது சனிக்கிழமை நிறைவடைந்த ஒன்பதாவது நாள் அவரது கடன்களைத் தீர்க்கும் விதமாக அவருக்கு அவர் பணிபுரியும் நிறுவனத்தில் ஊக்கத்தொகை கிடைத்தது.அப்படி ஊக்கத் தொகை கிடைத்ததை அவரால் இன்னும் நம்ப முடியவில்லை; ஏனெனில்,அவர் மது அருந்தும் பழக்கம் உடையவர்;மது அருந்தியதும் அவரது மனதில் இருக்கும் வெறுப்புகள் அனைத்தும் வெளிப்பட்டுவிடும்.ஆனால்,நேர்மையானவர்;பிறரது பணத்துக்கு ஆசைப்படாதவர்;ஒழுக்கமானவர்;அவரது காதலி அவரை விட்டுப் பிரிந்து போனதால் மதுவுக்குள் வீழ்ந்தவர்தான்.இவர் மது அருந்தியதும் சக ஊழியரைப்பற்றியும்,தனது மேலதிகாரி மற்றும் முதலாளி பற்றியும் சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்த்துவிடுவார்.எனவே,இதை அறிந்து இவரை எட்டு வாரத்துக்கு மது அருந்தக் கூடாது என்று இவரது  குல தெய்வம் கோவிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் வாங்கினோம்.வாங்கிய கையோடு, ‘நீ இந்த எட்டு வாரத்தில் ஒரே ஒரு முறை ஒரே ஒரு சொட்டு மது அருந்தினாலும் எனக்கு உயிருக்கு ஆபத்து வரும்;அதுவும் உனது குல தெய்வத்தால் வரும்’ என்று  மிரட்டினோம்.அன்றோடு அவர் மது அருந்துவதை நிறுத்திவிட்டார்.
அவருக்கு ஊக்கத்தொகை கிடைத்ததும்,எம்மை,எமது ஜோதிடப்புலமையை முழுமையாக நம்ப ஆரம்பித்துவிட்டார்.எமது ஜோதிட ஆலோசனைப்படி அவரது வாழ்க்கையை அமைக்கத் துவங்கிவிட்டார்.
ஒரு நாள்,அவரை அவரது முதலாளி 20 கி.மீ.தூரத்தில் இருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு பொக்லைனைக்கொண்டு செல்லும்படி பணித்தார்.அது பகல் நேரம்.அந்த தொழிற்சாலைக்கு  துணை தேசிய நெடுஞ்சாலை வழியாகத் தான் பொக்லைனைக் கொண்டு செல்ல முடியும்.ஆனால்,அந்த துணை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட பகுதி வரையிலும் பகலில் பொக்லைன் போன்றவைகள் கொண்டு பயணிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.இவர் அந்த பாதையில் பொக்லைனை ஓட்டிக் கொண்டு செல்ல, போக்குவரத்துக் காவல் துறை இவரை பிடித்துவிட்டது;இவரிடம் அப்போது ஓட்டுநர் உரிமம் இல்லை;இவரது வாகனத்தில் ஆர்.சி.புக்,இன்ஷீரன்ஸ் இல்லை;அதன் நகலும் இல்லை; இதை அறிந்த  போக்குவரத்துக் காவல் துறையினர் இவரிடம் இவரது முதலாளியை வரச் சொல்ல பணித்தனர்.அபராதத்தொகையை கொண்டு வரச் சொல்லினர்.இவரும் செல்மூலமாக,தகவல் தெரிவித்தார்.
இவரை பொக்லைனை விட்டு இறங்க வைத்த போக்குவரத்துக்காவலர்கள்,இவரை சாலையோரமாக காத்திருக்க வைத்துவிட்டு,வேறு பல வாகனங்களையும் பிடிக்கும் மும்முரத்தில் இருந்தனர்.இந்த சூழ்நிலையில் இவருக்கு நாம் போதித்த விஷயங்கள் நினைவுக்கு வந்தன:
“எப்போது உங்களுக்கு நெருக்கடியான சூழ்நிலை வருகிறதோ,அப்போது 12 தடவை ஓம்சிவசிவஓம் ஜபியுங்கள்;அந்த 12 தடவை ஜபித்து முடித்ததும்,அந்த எதிரான சூழ்நிலை மாறவில்லை எனில்,இன்னும் 12 தடவை ஓம்சிவசிவஓம் ஜபியுங்கள்.அப்படி ஜபிக்கும்போது நீங்கள்  ஏதாவது ஒரு பலகை அல்லது தரை அல்லாத உயரமான இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும்;காலில் செருப்பு அணிந்திருக்க வேண்டும்.ஓம்சிவசிவஓம் ஒரு ஆபத்துக்கால மந்திரம்”
அவருக்கு அந்த பதட்டத்தாலும்,இந்த சம்பவம் நடப்பதற்கு  முந்திய தினத்தன்று தேய்பிறை அஷ்டமி கால பைரவர் வழிபாட்டில் கலந்து கொண்டிருந்ததாலும்,அவர் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்குப்பதிலாக ஸ்ரீகால பைரவர் மூல மந்திரத்தை அருகில் இருக்கும் கருங்கல் மீது அமர்ந்து (காலில் செருப்பு அணிந்தவாறு)18 தடவை ஜபித்திருக்கிறார்.16 வது தடவை ஜபிக்க ஆரம்பித்ததும்,இவரை போக்குவரத்துக் காவலர்களின் தலைமை அதிகாரி அழைத்தார். ‘நீ உடனே உன் வண்டியை எடுத்துகிட்டு கிளம்பு’ என்று கூறினார்.இவருக்கு அதிர்ச்சி! ஆனால், அதை வெளியில் காட்டாமல் “சார். . .” என்று இழுக்க, அந்த அதிகாரி “ம் கிளம்பு,கிளம்பு” என்று அதட்ட இவரோ உடனே பொக்லைனில் ஏறி புறப்பட்டுப் போய்விட்டார். சுமார் 1 கி.மீ.தூரம் போன பிறகு,தனது முதலாளிக்கு  போன் செய்து நடந்ததைக்கூறி,அவரையும் வர வேண்டாம் என்று கூறிவிட்டார்.அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த ஆச்சரியத்தை எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டார்.
அந்த பொக்லைன் டிரைவர் வசிக்கும் ஊரில் மதம் மாறிய இந்துக்களே அதிகம் வாழ்ந்து வருகிறார்கள்.இப்பொழுது அவர் தனது திருமணம் ஸ்ரீகால பைரவரின் சன்னதியில் தன் நடைபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
அந்த ஸ்ரீகால பைரவ மந்திரம் இதுதான்:
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ!!!

No comments:

Post a Comment