Tuesday, November 26, 2013

பண நெருக்கடிகளைத் தீர்க்கும் ஸ்ரீகாலபைரவ வழிபாடு!!!

தினமும் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது;விலைவாசி உயர்வால்,சம்பளம் வாங்குபவர்களின் நிலையோ பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது;இல்லத்தரசிகளில் நிலையோ இன்னும் பரிதாபமே!! 

வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுப்பதில் குளறுபடியோ,குறைவோ வந்தால் தான் பெரும்பாலான தம்பதிகளுக்குள் சண்டை வருகிறது;இந்த சண்டையால் குழந்தைகளின் ஆளுமைத் திறன் பாதிக்கப்படுகிறது;ஆளுமைத் திறன் பாதிப்பால் சராசரிக்குழந்தைகள் எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்களாகவோ,எதற்கும் துணிந்த முரடர்களாகவோ மாறுகிறார்கள்;தனது தரப்புக்கு நியாயம் கேட்கச் செல்லும் தம்பதிகள் பிறரின் ஆலோசனைகளைப் பின்பற்ற ஆரம்பித்து நிரந்தரமாகப் பிரியும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.இந்த சூழ்நிலையில் பிரச்னையின் ஆரம்பப் புள்ளி போதுமான வருமானம் வராதது தான்!

இதைச் சரி செய்வதற்காக நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் ஒரு எளிய அதே சமயம் சக்தி வாய்ந்த சுயவழிபாட்டைத் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து 6புதன்கிழமைகளுக்கு மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் ஸ்ரீகால பைரவ சன்னதிக்குச் செல்ல வேண்டும்;அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித் தைலம் இவைகளைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்;

27 உளுந்து வடைகளால் ஒரு மாலையை அணிவிக்க வேண்டும்;உளுந்து வடைகளை நமது வீட்டில் தயார் செய்து கொண்டு வர வேண்டும்; மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;பாசிப்பயறு சுண்டல் வீட்டில் அவித்து ஸ்ரீகாலபைரவப்பெருமானுக்குப் படையல் இட வேண்டும்;நமது பெயருக்கும்,நமது குடும்பத்தாரின் பெயருக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு,படையல்களை அங்கே வருபவர்களுக்குப் பகிர்ந்து தர வேண்டும்;நாமும் சாப்பிடலாம்;வீட்டிற்குக் கொண்டுச் சென்று நமது ரத்த உறவுகளுக்கும்,அண்டைவீட்டார்,நட்பு வட்டத்தினருக்கும் தரலாம்.

நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியிருக்க வேண்டும்;தமிழ்ப் பண்பாடான ஒருவனுக்கு ஒருத்தி,ஒருத்திக்கு ஒருவன் என்ற கொள்கையை விடாப்பிடியாக பின்பற்ற வேண்டும்;மது,போதைப் பழக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்.இந்த மூன்று கொள்கைகளை முழுமையாகப் பின்பற்றுபவர்களுக்கு இந்த கால பைரவ வழிபாடு ஆறாவது புதன் கிழமையில் இருந்து 90 நாட்களுக்குள் அபரிதமான பலன்களை வாரி வழங்கும்;ஆமாம்! (சொர்ண ஆகர்ஷணத்தை)பணப்புழக்கம் இவர்களுக்கு படிப்படியாக உயர்ந்து,வளமான வாழ்க்கையை அடைவார்கள்!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


Monday, November 4, 2013

பைரவ அருளை வாரி வழங்கும் வழிபாட்டு (பூஜை) பொருள்கள்:


பைரவருக்கு பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புணுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக் காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் வருடக் கணக்கில் ஒரு கோடி வருடம் பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரச அபிஷேகமும் மிக விசேஷம்.
 பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள் செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.

 பைரவப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், பானகம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல்வேறு பழ வகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

வளம் பெற வயிரவன் வழிபாடு-ஸ்ரீ பைரவர்


பைரவ காயத்ரி:
சுவாநத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய
தீமஹி தன்னோ பைரவ ப்ரசோதயாத்
பைரவ மூல மந்திரம்:

ஏக சஷ்டி அட்சரம் மந்திரம் லகுசித்திப்ரதாயகம்
ஏக சஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்த்ரஸ்ய சித்தயே
ஸ்ரீ பைரவ உபாசகர்கள் முதலில் மூல மந்திரத்தில் சித்தி பெற்ற பிறகே பிற பைரவ காரிய சித்தி மந்திரங்களை பிரயோகிக்க வேண்டும். அப்பொழுது தான் அம்மந்திரம் வேலை செய்யும்..

பைரவ தீபம்: பைரவப்பெருமானுக்கு சிறுதுணியில் மிளகை சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.

பைரவ வழிபாடு: பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்தி நிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப்பெருமானை அடையும் சாகாக் கல்வியும்,
மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டும்.
பைரவ பெருமானுக்குள் பஞ்ச பூதங்கள், நவக்கோள்கள், ராசிகள், நட்சத்திரங்கள், பத்துத் திசைகள் என சர்வமும் அடங்கி இருப்பதால் அவரை வணங்கி வர அனைத்து நன்மைகளும் நிறையும். நல்ல கல்வி அறிவும், செல்வ வளமும் பெருகும். ஏவல், பில்லி, சூனியங்களில் இருந்தும், சர்வ பாப, தோசங்களிலிருந்தும் விடுதலையும், திருமண, மாங்கல்ய பாக்கியம், சந்தான பாக்கியம், நல் வேலை வாய்ப்பு என மக்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றித் தருவார். உண்மை அன்பும் நல் தூய்மையும், நன்னம்பிக்கையும் இவருடைய வழிப்பாட்டில் மிக மிக அவசியமான ஒன்றாகும்.

Sunday, November 3, 2013

பைரவர் அருளை நமக்கு அருளும் பைரவ சஷ்டி!!!
ஆன்மீகக்கடலின் அத்தனை பதிவுகளையும் வாசித்துவிட்டவர்கள் இந்தப்பதிவின் மூலமாக வழிகாட்டப்பட்டிருக்கும் ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டைப் பின்பற்றலாம்.மற்றவர்கள் தயவு செய்து மட்டுமல்ல;அருள் கூர்ந்து ஆன்மீகக்கடலின் 2008 ஆம் ஆண்டின் முதல் பதிவிலிருந்து இன்றைய பதிவு வரை அனைத்தையும் வாசித்துவிட்டு பிறகு செயலில் இறங்கவும்.
ஒரு புதிய திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் சீனுக்கு வந்தால் எப்படி இருக்கும்? அதைப்போலவே,இந்தப் பதிவினை வாசித்தால் நீங்கள் அதுபோன்ற உணர்வை எட்டுவீர்கள்.பழைய மற்றும் நீண்டகால வாசக,வாசகிகளுக்காக நமது ஆன்மீக குருவும்,பல ஆன்மீக விருதுகள் பெற்றவரும்,மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுட்காலச் சீடருமான திரு.சிவமாரியப்பன் அவர்களிடம் பலமுறை வலியுறுத்தி வேண்டி, இந்தப் பதிவினை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
ஸ்ரீகால பைரவரின் அருள் சுலபமாக நமக்குக் கிடைக்கவும்,நமது முற்பிறவி கர்மாக்கள் முழுமையாக விலகவும் தொடர்ந்து ஆறு பைரவ சஷ்டி நாட்களில் இந்த ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்ய ஆரம்பிக்கும் முன்பு நாம் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக்கைவிட வேண்டும்;முறையற்ற உறவு இருந்தால் அதையும் நிரந்தரமாகக் கைவிட வேண்டும்.இந்த இரண்டையும் கண்டிப்பாக பின்பற்றினால் மட்டுமே ஸ்ரீகால பைரவரின் அருள் நமக்குக் கிட்டும்.இந்த வழிபாட்டை 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே பின்பற்ற வேண்டும்.
உங்கள் ஊரில் இருக்கும் பழைமையான சிவாலயத்தில் இருக்கும் ஸ்ரீகால பைரவரின் சன்னதிக்கு தொடர்ந்து ஆறு தேய்பிறை சஷ்டிகளுக்கு பின்வரும் பொருட்களை வாங்கிக்கொண்டு  செல்ல வேண்டும். அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை போன்றவைகளுடன் சென்று அபிஷேகம் செய்ய வேண்டும்.(நண்பர்கள் சேர்ந்து கூட்டாகவும் செய்யலாம்)அபிஷேகம் முடிந்ததும்,உங்கள் குடும்பத்தாரின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.


ஒவ்வொரு தேய்பிறை சஷ்டியின் போதும் இவ்வாறு அபிஷேகம் முடிந்தப்பின்னர்,அந்தக்  கோவிலின் வாசலில் குறைந்தது ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.இவ்வாறு அன்னதானம் செய்து முடித்தப்பின்னர்,நேராக அவரவர் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.வேறு எந்தக்கோவிலுக்கோ/பிறரது வீடுகளுக்கோ செல்லக் கூடாது.அடுத்து வர இருக்கும் தேய்பிறை சஷ்டிகளும்,அந்த நாட்களில் வர இருக்கும் ராகு காலமும்:-
4.11.12 ஞாயிறு காலை 11.10 முதல் 5.11.12 திங்கள் மதியம் 12.30 வரை(4.11.12 ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரை அல்லது 5.11.12 திங்கள் காலை 7.30 முதல் 9 வரை)
4.12.12 செவ்வாய்(மதியம் 3 முதல் 4.30க்குள்)
3.1.13 வியாழன் இரவு 7.02 வரை(மதியம் 1.30 முதல் 3 வரை)
1.2.13 வெள்ளி காலை 9.12 முதல் 2.2.13 சனி காலை 7.40 வரை(.1.2.13 வெள்ளி காலை 10.30 முதல் 12 வரை)
2.3.13 சனி இரவு 8.42 முதல் 3.3.13 ஞாயிறு மாலை 6.34 வரை(3.3.13 ஞாயிறு மாலை 4.30 முதல் 6 வரை)
3.4.13 புதன்(மதியம் 12 முதல் 1.30 வரை)
இவை நந்தன வருடத்தின் தேய்பிறை சஷ்டிகள் ஆகும்.அடுத்து வரும் விஜய ஆண்டின் தேய்பிறை சஷ்டி நாட்கள் ஜனவரி 2013 இல் நமது ஆன்மீகக்கடலில் வெளியாகும்.


இந்த ஆறு தேய்பிறை சஷ்டிகளில் தொடர்ந்து ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்து முடித்தால்,அதன்பிறகு நமது மன உளைச்சல்கள் தீர்ந்திருக்கும்.நமது நீண்டகாலப்பிரச்னைகள் தீர்வதற்கு வழி கிடைத்திருக்கும்.சிலருக்கு கனவில் ஸ்ரீகாலபைரவரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கும் என்பது அனுபவ உண்மை ஆகும்.


வீட்டில் தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வருபவர்கள் இந்த வழிபாட்டு முறையைப்பின்பற்றலாம்.
வீட்டில் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களும் இந்த வழிபாட்டுமுறையைப்பின்பற்ற எந்தத் தடையும் இல்லை;
அவரவர் சொந்த ஊர்களில் இருக்கும் புராதனமான சிவாலயத்தில் இருக்கும் ஸ்ரீகால பைரவர் சன்னதியில் இந்த வழிபாட்டைப்பின்பற்றினாலே போதுமானது;ஒரு எச்சரிக்கை:எந்த கோவிலில் தேய்பிறை சஷ்டிக்கு ஸ்ரீகால பைரவரை வழிபட  ஆரம்பிக்கிறோமோ அந்தக் கோவிலில் மட்டுமே ஆறு தேய்பிறை சஷ்டிக்கும்  சென்று வழிபாடு செய்ய வேண்டும்;கோவிலை மாற்றினால் எதிர்விளைவு ஏற்படும்.
முடிந்தால்,ஸ்ரீகாலபைரவரின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அட்டவீரட்டானங்களில் ஏதாவது ஒரு வீரட்டானத்திற்குச் சென்று ஆறு தேய்பிறை சஷ்டிக்கும் இவ்வாறு வழிபாடு செய்தால்,கிடைக்கும் புண்ணியப்பலன்களை விளக்க இந்த ஒரு ஆன்மீகக்கடல் போதாது;
மயிலாடுதுறையிலும் அதைச் சுற்றிலும் இருப்பவர்கள் வழுவூர் வீரட்டானம்,கொறுக்கை வீரட்டானம்,திருப்பறியலூர் வீரட்டானம் இவைகளில் ஏதாவது ஒரு வீரட்டானத்தில் வழிபாடு செய்யலாம்.
திருவாரூர் மற்றும் அதன் அருகில் வசிப்பவர்கள் திருவிற்குடி வீரட்டானத்தில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.
தஞ்சாவூர் மற்றும் அதன் அருகில் வாழ்ந்து வருபவர்கள் திருக்கண்டியூர் வீரட்டானத்தில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.
பண்ருட்டி மற்றும் அதன் அருகில் இருப்பவர்கள் திருவதிகை வீரட்டானத்தில் இந்த வழிபாட்டையும்,திரு அண்ணாமலைக்கு அருகில் இருப்பவர்கள் திருக்கோவிலூர் வீரட்டானத்திலும் இந்த வழிபாட்டை பின்பற்றலாம்.
நாகை மாவட்டத்தில் வசிப்பவர்கள் திருக்கடையூர் வீரட்டானத்தில் இந்த வழிபாட்டைப்பின்பற்றலாம்.
 
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ