Saturday, December 21, 2013

கடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள் தெரிவிக்கும் ஆன்மீக உபதேசம்!!!


முற்பிறப்பு கர்மாக்கள் அல்லது கவனக்குறைவு அல்லது ஏழரைச்சனி/அஷ்டமச்சனி அல்லது அளவற்ற கருணையால் தவறான ஆட்களுக்கு ஜாமீன் ஏற்றல்,குடும்பப் பொறுப்பை தன் மீது சுமத்திக் கொள்ளுதல் போன்றவற்றாலும்,வேறு பல சொல்லமுடியாத காரணங்களாலும் தனி மனிதர்கள்  கடன் என்ற மோகினியிடம் சிக்கிக் கொள்கின்றனர்;பலவிதமான பரிகாரங்கள்,வழிபாடுகள் செய்தாலும் கடன் குறைவதற்கான வழிகளே தெரியவில்லை; என்றும் தெரிவிக்கின்றனர்;ருணவிமோசன வழிபாடுகள் செய்தும் தீரவில்லை எனில் கடுமையான கர்மவினையால் இந்தக் கடன்கள் நமக்கு உருவாகியிருக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பைரவ பரிகாரத்தைச் செய்ய விரும்புவோர் முதலில் அசைவம் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும் நிரந்தரமாகக் கைவிடவேண்டும்;ஏனெனில்,தினமும் மது அருந்துபவர்களின் ஜாதகம் இயங்காது;அடிக்கடி அசைவம் சாப்பிடுபவர்களின் இறைவழிபாடு அவர்களுக்கே பலன்கள் தருவதில்லை;

யாருக்கு கடன் இருக்கிறதோ அவர்கள் தமது பழைய பனியன்/வேட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும்;(கணவனின் கடன் தீர மனைவி இந்த வழிபாட்டைச் செய்யலாம்;அப்பா சார்பாக மகளோ,சகோதரன் சார்பாக சகோதரியோ இதைச் செய்யக் கூடாது.நண்பனுக்காக பெண் தோழியோ இதைச் செய்யக் கூடாது;தனித்து வாழும் ஆண்கள் தாமாகவே செய்ய வேண்டும்).நீண்டகாலமாக பயன்படுத்திய பனியன்/வேட்டியை சுத்தமாக்கிக்கொள்ள வேண்டும்;(துவைத்து காய வைத்தப்பின்னர் இதைச் செயல்படுத்தவும்) பத்து செண்டிமீட்டர் நீளமும் பத்து செண்டிமீட்டர் அகலமும் உடைய 16 சம சதுரத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்;கூடவே,கறுப்பு நூல்கண்டு ஒன்றும் கொஞ்சம் மிளகும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்;(சமையலறையில் இருக்கும் மிளகைப் பயன்படுத்தக்கூடாது; தனியாக கடையில் வாங்கிக் கொள்வது அவசியம்)

ஒரு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் இந்த 16 சம சதுரத் துண்டுகளில் இரண்டை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்;அதில் ஒவ்வொன்றிலும் 27 மிளகுகளை வைத்து கறுப்பு நூலால் கட்டிக் கொள்ள வேண்டும்;ஒரு தேங்காய் வாங்கி,அதை உடைத்துவிட்டு,உள்பகுதியில் ஈரமில்லாமல் துடைத்து வைத்துக் கொண்டு தேங்காயின் உள்பகுதியில் இந்த  27மிளகுகளைக் கொண்ட கறுப்புநூலால் கட்டப்பட்ட சிறுபொட்டலத்தை வைக்க வேண்டும்;ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தேங்காய் மூடியினுள்(உள்ளே தேங்காய் இருக்கவேண்டும்) வைத்து,அந்த தேங்காயில் சுத்தமான  நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.

பைரவப் பெருமானின் சன்னிதியில்,இந்த தேங்காய்த் துண்டுகளை பைரவப்பெருமானின் முன்பாக வைக்க வேண்டும்;(சில கோவில்களில் பைரவரின் முன்பாக வைக்க அனுமதிப்பதில்லை;அவர் இருக்கும் பகுதியில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்)வைக்கும்போது அங்கே இருக்கும் காலியான அகல்விளக்கின்(இல்லாவிட்டால் கடையில் வாங்கி வரவும்) மீது தேங்காயின் கூர்மையான கீழ்ப்பகுதி இருப்பது போல நிலைநிறுத்திவைக்க வேண்டும்;

பைரவப் பெருமானிடம் மனப்பூர்வமாக தனது கடன்கள் விரைவாக தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த இரண்டு தேங்காய்களிலும் இருக்கும் மிளகுப்பொட்டலத்தின் மீதும் தீபமேற்ற வேண்டும்.
இது போல தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு செய்ய வேண்டும்.தீட்டு,வேலைப்பளு போன்ற காரணங்களால் தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் செய்ய முடியாத நிலை வந்தாலும்,விட்டுவிட்டாவது எட்டே எட்டு சனிக்கிழமைகள் மட்டும் இம்மாதிரியான வழிபாடு செய்ய வேண்டும்.எட்டாவது சனிக்கிழமை நிறைவடைந்தது முதல் 90 நாட்களுக்குள் எவ்வளவு பெரிய கடன் தொகையாக இருந்தாலும் அவை தீர எதிர்பாராத உதவியை பைரவப் பெருமான் அருளுவார்;கடந்த 25 ஆண்டுகளாக இந்த சுயபரிகாரமுறையைப் பின்பற்றி ஏராளமானவர்கள் தமது கடன்களில் இருந்து மீண்டிருக்கின்றனர்.தனித்து வாழ்ந்து வரும் பெண்கள் தமது சக்திக்கு மீறிய கடன்களில் சிக்கியிருந்தால் கடையில் கிடைக்கும் கைத்தறி காடாத் துணியை வாங்கி அதில் மேலே கூறியது போல 27 மிளகு வைத்து வழிபாடு செய்ய கடன்கள் தீரும்.

இந்த அரிய பைரவ உண்மையை  18 சித்தர்கள் அரிய கிரிவல நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நமது ஆன்மீக வழிகாட்டி சகஸ்ரவடுகர் அவர்கள் கழுகுமலை கழுகாச்சலமூர்த்தி கோவில் வளாகத்தில் 16.12.2013 மதியம் 2.45க்குத் தெரிவித்தார்.இதற்குப்பெயரே நீராஞ்சனம்!!!

ஏராளமான வாசக,வாசகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் அறிவித்த  பைரவ ரகசியம் தற்போது நமது ஆன்மீகக்கடலில்  வெளியிடப்படுகிறது.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

திருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்!!!

ஆண் எனில் அதிகபட்சமாக 29 வயதுக்குள்ளாகவும்,பெண் எனில் அதிகபட்சமாக 27 வயதுக்குள்ளாகவும் திருமணம் செய்வது அவசியம்;பிறந்த ஜாதகப்படி கோடி இளைஞர்களில் ஒருவருக்கு மட்டுமே துறவறமாகும் தகுதி இருக்கும்;மற்றவர்கள் எனக்கு திருமணம் வேண்டாம் என்று பிடிவாதத்தால் வியாழ நோக்கம் வரும் போது இருந்து விட்டு,முதுமையின் ஆரம்பத்தில் வரன் தேடுவது சர்வசாதாரணமாகிவிட்டது;

இன்றைய கலியுகத்தில் மகன்/மகளின் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் வாழ்க்கைத்துணை தேடும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.சாஃப்ட்வேர் அல்லது அரசுப்பணியில் அல்லது நல்ல சம்பளத்தில் தனது மகனோ/மகளோ இருந்துவிட்டால் அவன்/ளிடமிருந்து முடிந்தவரையிலும் சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு தனது முதுமைக்கால பாதுகாப்பிற்கு அதை சேமிக்கிறார்கள்;அவ்வாறு சேமித்து, அவர்களின் திருமணத்தின் மீது சிறிதும் அக்கறையில்லாமல் இருக்கும் தமிழ்நாட்டு பெற்றோர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்க சதவீதத்தை எட்டத் துவங்கியிருக்கிறது.பணம்,பணத்துக்காக இப்படி பெற்றோர்கள் இருந்தால் அவர்களின் மகன்/மகளில் பெரும்பாலானவர்கள் நமது பெற்றோர்கள் இப்படி இருப்பார்களா? என்பதை நம்பாமல் இருந்து இளமையை பன்னாட்டு நிறுவனங்களுக்கும்,தமது அலுவலக வளர்ச்சிக்கும் தாரை வார்த்துவிட்டு வாழ்க்கையை பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சில பெற்றோர்கள் தமது மகன்/ளின் திருமண வாழ்க்கைக்கான எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை முழுமையாக அறிந்து கொண்டு அதற்கு எதிரான வாழ்க்கைத் துணையை அமைக்கும் கொடூரமும் தமிழ்நாட்டிலும்,தமிழ் மக்களிடமும் பரவலாகிக் கொண்டிருக்கிறது.எப்படிப் பார்த்தாலும்,வீட்டில் திருமணம் ஆகாமல் மகனோ/மகளோ 30 வயதைக் கடந்தாலோ அது குடும்பத்திற்கு சுமையையும்,பெற்றோர்களுக்கு கடினமான பாவத்தையுமே தந்து கொண்டிருக்கிறது.

நீண்டகாலமாக திருமண வாழ்க்கை அமையாமல் இருந்து வரும் இளம் பெண்கள்,இளைஞர்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமைய ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் ஒரு சக்திவாய்ந்த பைரவ வழிபாட்டை கழுகுமலை 18 சித்தர்கள் கிரிவல நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 16.12.2013 திங்கட்கிழமை மதியம் 2.55க்குத் தெரிவித்தார்.ஏராளமான வாசக,வாசகிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஆன்மீகக்கடல் மூலமாக ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தெரிவிக்கிறார்.

இந்த பைரவ வழிபாட்டை யாருக்கு திருமணம் தாமதமாகிறதோ அந்த கன்னிப்பெண்/இளைஞர் மட்டுமே செய்ய வேண்டும்;அவர்கள் சார்பாக யார் செய்தாலும் பலன் தராது.

யாருக்கு திருமணத் தடை இருக்கிறதோ அவருக்கு என்ன திசை நடைபெறுகிறது ? என்பதை உரிய ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்;அந்த திசையின் கிழமையில் வாரம் ஒரு கிழமை வீதம் ஏழு கிழமை மட்டும் இந்த பைரவ வழிபாட்டைப் பின்பற்ற வேண்டும்.

சூரிய மஹாதிசை நடைபெற்றால் ஏழு ஞாயிற்றுக்கிழமைகளும்
சந்திரமஹாதிசை நடைபெற்றால் ஏழு திங்கட்கிழமைகளும்
செவ்வாய் மஹாதிசை நடைபெற்றால் ஏழு செவ்வாய்க்கிழமைகளும்
புதன் மஹாதிசை நடைபெற்றால் ஏழு புதன்கிழமைகளும்
வியாழ(குரு)மஹாதிசை நடைபெற்றால் ஏழு வியாழக்கிழமைகளும்
சுக்கிரமஹாதிசை நடைபெற்றால் ஏழு வெள்ளிக்கிழமைகளும்
சனிமஹாதிசை நடைபெற்றால் ஏழு சனிக்கிழமைகளும்
ராகு மஹாதிசை நடைபெற்றால் ஏழு வெள்ளிக்கிழமைகளும்
கேது மஹாதிசை நடைபெற்றால் ஏழு வெள்ளிக்கிழமைகளும் இந்த வழிபாட்டைப் பின்பற்ற வேண்டும்.இந்த வழிபாடு செய்ய விரும்புவோர் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும் கைவிட வேண்டும்;அவ்வாறு கைவிட்டப்பின்னரே இந்த பைரவ வழிபாடு செய்ய வேண்டும்;அப்படி செய்தால் மட்டுமே வழிபாடு பலன்களைத் தரும்.

பழமையான சிவாலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு பின்வரும் பொருட்களை படையலாக இடவேண்டும்;முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை அல்லது செவ்வரளிமாலையை பைரவப் பெருமானுக்கு சந்தனக் காப்பு செய்த பின்னர் அணிவிக்கச் சொல்ல வேண்டும்;இரண்டு நெய்தீபங்களை அவரது சன்னதியில் அல்லது சன்னதி இருக்கும் பகுதியில் ஏற்றி வைக்க வேண்டும்;ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு பாக்கெட் வாங்கி வந்து அவரது பாதத்தில் பாக்கெட்டை திறந்து வைக்க வேண்டும்; 

முடிவாக திருமணத் தடை நீங்க என்று ஸ்ரீகாலபைரவப்பெருமானுக்கு தனது பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு ரூ.60/-தட்சிணை தர வேண்டும்;இதேபோல தொடர்ந்து ஆறு கிழமைகள் வழிபாடு செய்ய வேண்டும்;ஏழாவது கிழமையன்று ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு படையலாக அவல் பாயாசம் படைக்க வேண்டும்;(வீட்டில் தயார் செய்ய இயலாதவர்கள் நட்பு/உறவினர் வீட்டில் செய்யலாம்) அர்ச்சனையின் முடிவில் படையல்களில் டயமண்டு கல்கண்டு பாதியை அங்கே வருபவர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்;ஏழாவது கிழமையில் அவல் பாயாசத்தை அங்கே வருபவர்களுக்குப் பகிர்ந்து தர வேண்டும்;
இந்த ஏழு கிழமைகள் வழிபாடு செய்தப் பின்னர்,90 நாட்களுக்குள் தகுந்த வரன் தேடி வரும்;திருமண வாழ்க்கை அமைந்து விடும்;வாழ்க அறமுடன்,வளர்க பைரவ அருளுடன்!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

Thursday, December 19, 2013

ரேவதி நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய பஞ்சமுக பைரவர்!!!கரூர் மாவட்டத்தில் இருக்கும் முசிறியில் இருந்து 20 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் ஊர் தாத்தையங்கார்பேட்டை ஆகும்.இங்கு அமைந்திருக்கும் காசி விசுவநாதர் ஆலயத்தில் பஞ்சமுக பைரவரே ரேவதி நட்சத்திரத்தின் பிராண தேவதை ஆகும்.இஅவரை இங்கே பராக்கியம் பஞ்சவக்த பைரவர் என்று அழைக்கிறார்கள்.
64 பைரவ தோற்றங்களில் 52 வது பைரவத் தோற்றமே பஞ்சமுக பைரவப் பெருமான் ஆவார்.

இத்திருமேனியானது யாளி வாகனத்துடன்,ஐந்து முகங்களும் பத்து கரங்களும்,ஜ்வால கேசமும்,கோரைப்பற்களும் கொண்டு நின்ற நிலையில் அருள் பாலித்து வருகிறார்.
இவரது வலது கரங்களில் சூலம்,மழு,கத்தி,கதை,சக்கரமும் அமைந்திருக்கிறது;
இவரது இடது கரங்களில் டமருகம்,சங்கு,பாசம்,கேடயம் அமைந்திருக்கிறது.

இவரது திருமேனியில் கபாலமாலை விளங்க,இடையில் பாம்பு அரைஞாணாக சுற்றி இருக்கிறது.இந்த கலையம்சம் மிக்க பைரவ வடிவம் மிகவும் அரிதான பைரவ வடிவம் ஆகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனது பிறந்த நட்சத்திர நாட்களில் இங்கே வந்து வழிபட பிறவிகள் பலவற்றில் சேகரித்த கர்மாக்கள் காணாமல் போய்விடும்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

சிவபக்தரை சண்டேசுவரராக உயர்த்திய ஓசை உடைய பைரவர்!!!(உத்ரட்டாதி நட்சத்திரத்தின் வழிபட வேண்டிய பைரவப்பெருமான்)

கும்பகோணம் அருகே இருக்கும் சேங்கனூரில் உள்ள வெண்கல ஓசை உடைய பைரவர் உத்திரட்டாதி நட்சத்திரத்துக்குரிய பைரவப் பெருமான் ஆவார்.

வெகுகாலத்திற்கு முன்பு வாயுதேவனுக்கும்,ஆதிசேஷனுக்கும் யார் பெரியவர்? என்ற பலப்பரீட்சை ஏற்பட்டது.அப்போது ஆதிசேஷன் மேருமலையை தன் உடம்பால் இறுக்கிப் பிடித்துக் கொள்ள வாயுதேவன் தனது முழுபலத்தையும் காட்டி மேருமலை மீது பலத்த காற்றுவீசி அதை அசைக்க முயன்றான்;அப்போது மேரு மலையின் ஒன்பது பகுதிகள் பெயர்ந்து ஒன்பது கண்டங்களாக விழுந்தன;அவற்றில் ஒரு சிகரமே கந்தமாதனம் ஆகும்.கந்தமாதனத்தில் இருந்து ஏழு சிறிய சிகரங்கள் தனித்தனியாக பெயர்ந்து நமது பாரத தேசத்தில் ஏழு இடங்களில் விழுந்தன;அவற்றில் ஒன்று இந்த சேங்கனூரில் விழுந்தது;அந்த சிகரத்தின் பெயர் சத்தியம் ஆகும்.அதனால்,இந்த தலத்திற்கு சத்தியகிரி என்ற பெயர் உருவானது.குமாரபுரம்,சண்டேசுவரபுரம்,அகமாதகவனம் என்ற வேறு பெயர்களும் சேங்கனூருக்கு உண்டு;இந்தத் தலத்தில் பல முனிவர்களும்,ரிஷிகளும்,துறவிகளூம் விலங்குகள் வடிவிலும்,பறவைகள் வடிவிலும் மரங்கள் வடிவிலும் உருவகமாக பல கோடி ஆண்டுகள் நின்று வழிபாடு செய்து வருகிறார்கள்.

சிபிமகாராசன் என்ற மன்னன் காம்பீலி நகரத்தை ஆண்டு வந்தான்;அவனது ஜாதகப்படி ஏற்பட்ட தோஷத்தை நீக்கிட,அவன் தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டான்;திரிவேணி சங்கமம்(இன்றைய பிரயாகை=அல் லஹா பாத்)நர்மதை,கோதாவரி முதலிய தீர்த்தங்களில் நீராடினான்.நீராடிவிட்டுத் திரும்பி வரும் போது சேங்கனூரைக்கடக்கும் போது பக்தி உணர்ச்சிப் பெருகியது.எனவே,இங்கே இருக்கும் ஸ்ரீசத்தியகிரீஸ்வரை வழிபட்டு இங்கேயே சிலகாலம் தங்கினான்.
பிராமணர்களுக்கு பூதானம் செய்ய நினைத்து 360 வீடுகள் கட்டினான்;360 பிராமணர்களை பாரத தேசம் முழுவதும் இருந்து வரவழைத்து அவர்களை இங்கே குடியேற்றினான்.அப்போது அவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எச்சதத்தனின் மனைவியான பவித்திரை ஒரு ஆண்குழந்தையை பெற்றாள்.அதனால்,எச்சதத்தனும் பவித்திரையும் ஊரின் எல்லையில் தங்கும் சூழல் உருவானது.எல்லா குடும்பத்தாரும் சிபிமகாராசனை அடைந்தார்கள்.சிபிமகாராசன் ஒவ்வொரு பிராமணக்குடும்பத்திற்கும் ஒரு வீடும்,ஒரு காராம்பசுவும்,சிறிதளவு நிலமும் தானமாக வழங்கினான்.359 பேர்களுக்கு தானம் வழங்கிட மீதி ஒரு வீடு தானம் செய்ய முடியாத நிலை இருந்தது.எனவே,அரசன் மிகவும் வருத்தமடைந்தான்;ஏனெனில்,குறிப்பிட்ட திதியும்,நட்சத்திரமும் நிறைவடையும் முன்பே 360 பிராமணர்களுக்குத் தானம் வழங்கினால் தான் தானத்தின் பலன் முழுமையாக மன்னனை வந்து சேரும்;இல்லாவிடில் 12 ஆண்டுகள் இதே போல் தானம் செய்யக் காத்திருக்க வேண்டும்;எனவே,அரசனின் வருத்தத்தைப் போக்கிட சிவலோக நாயகியும்,வயோதிக பிராமணருமாக வந்த அந்த 360 வது வீட்டையும்,காராம்பசுவையும்,நிலத்தையும் தானமாகப் பெற்றுக் கொண்டனர்.

மறுநாள் சிபிமகாராசன் ஒவ்வொரு வீடாகச் சென்று பிராமணர்களைக் கண்டு யோக க்ஷேமம் விசாரித்தான்;கடைசியாக வயோதிகப் பிராமணரின் வீட்டிற்கு வந்தான்;வீட்டுக் கதவு உள்புறம் பூட்டியிருந்தது.பலமுறை கதவைத் தட்டியும் குரல் கேட்காததால்,கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தான்;உள்ளே யாரும் இல்லை;ஆக,நேற்று வீட்டை தானமாகப் பெற்றது சிவலோக நாயகியும்,சுவாமியுமே என்பதை உணர்ந்து,ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான்;சேங்கனூரில் அமைந்திருந்த இறைவனையும்,இறைவியையும் வழிபட்டு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துவிட்டு தனது நகரத்திற்குத் திரும்பினான்.

இவ்வூரின் எல்லையில் தங்கிய எச்சதத்தன்,தனது மனைவி,குழந்தைகளுடன் வந்து ஊருக்குள் வந்தான்;வீடுகள் எல்லாம் தானம் செய்து விட்டதால்,சிபிமகாராசனை கண்டு தனது நிலையை முறையிட்டான்.சிபிமகாராசன்,சேங்கனூருக்கு வந்து அங்கே இருக்கும் 359 பிராமணர்களின் பசுக்களை மேயும் பொறுப்பை எச்சதத்தனிடம் ஒப்படைக்கும் படி ஆணையிட்டான்.அதற்கு எச்சதத்தன் ஒப்புக்கொண்டால்,அந்த சேங்கனூரில் வசித்துக் கொள்ளலாம் என்று பிராமணர்களும்,மன்னனும் ஒப்புக்கொண்டனர்;


எச்சதத்தன் தனது மகனை பொறுப்பாகவும்,அன்பாகவும் வளர்த்து வரும் வேளையில்,ஏழு வயது நிரம்பியதும் உபநயனம் செய்தான்;விசாரசருமர் என்று பெயரிட்டு,பசுவை மேய்க்கும் பொறுப்பையும் ஒப்படைத்தான்;தினமும் மண்ணியாற்றங்கரையில் பசுக்களை மேய்த்து வரும் போது,அவைகளின் மீது அளவற்ற பாசம் கொண்டான்.விசாரசருமரை பசுக்கள் தமது கன்றாகவே கருதி பாசம் கொண்டன.அதனால்,அவனைக் கண்டதுமே பாலைப் பொழிந்தன.பால் வீணாவதை நினைத்து,அவைகளைக் கொண்டு சிவ அபிஷேகம் செய்ய விரும்பினான்.எனவே,மண்ணியாற்றங்கரையில் ஒரு மணல் திட்டில் மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினான்.பூசைக்காக பூக்களையும்,தளிர்களையும் பறித்து வந்து,தினமும் ஆகமவிதிப்படி சிவபூஜை செய்துவந்தான்;இதை அந்த பாதை வழியாக வந்த வழிப்போக்கன் ஒருவன் ஊருக்குள் இருந்த பிராமணர்களிடம் தெரிவித்துவிட,அவர்கள் சிவாசரசருமரின் அப்பா எச்சதத்தனிடம் முறையிட்டனர்.எச்சதத்தனும் தனது மகனைக்  கண்டித்தான்;

மறுநாள் விசாரசருமர் பசுக்களை மேய்ப்பதற்கு ஓட்டிக்கொண்டு போக,எச்சதத்தன் தனது மகன் அறியாதவாறு அவனைப் பின் தொடர்ந்தான்;விசாரசருமரும் வழக்கம் போல அத்திமரநிழலில் மணலால் சிவலிங்கம் உருவாக்கி,ஆகமவிதிப்படி பூஜை செய்ய,அதை மறைந்திருந்து கவனித்த எச்சதத்தன்,தனது மகன் விசாரசருமரை கோலால் அடித்தான்;சிவசிந்தனையிலேயே இருந்தமையால் தந்தை அடித்ததும்,திட்டியதும் உணரவில்லை;

தான் அடித்தும்,திட்டியும் கூட தனது மகன் கண்டுகொள்ளாமல் இருந்ததைக் கண்டு ஆத்திரப்பட்ட எச்சதத்தன்,பால் குடங்களை தனது காலால் இடறிவிட,பால் அனைத்து சிந்தியது;பால் சிந்தியதைக்கண்ட விசாரசருமருக்கு சுயநினைவு வர,பாலைச் சிந்தியது தனது அப்பா என்று அறிந்தும்கூட,அவனுக்கு கோபம் பொங்கியது;தாம் செய்து வரும் சிவபூஜைக்கு இடையூறு வந்துவிட்டதே என்று ஆவேசப்பட்டு,அருகில் இருந்த கோலை எடுத்தான்;அது உடனே மழுவாக உருமாறியது;அந்த மழுவினால் தனது தந்தை எச்சதத்தனின் கால்களை வெட்டினான்;தந்தை கால்களின்றி கீழே விழ,தனது பூஜையைத் தொடர்ந்தான் விசாரசருமர்.
அந்த கணத்தில் சதாசிவனும்,பாலாம்பிகையும் அந்த மணல் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டனர்;விசாரசருமருகுக்கு காட்சியளித்தனர்;

எனக்காக பெற்றத் தந்தையின் கால்களையே வெட்டியெறிந்தாய்;இனி உனக்கு எல்லாமே யாம் தான் என்று விசாரசருமரைப்பாரட்டி, அவனை உச்சிமோந்தார்;தனது கழுத்தில் கிடந்த கொன்றை மாலையை விசாரசருமர் கழுத்தில் அணிவித்தார்;

மேலும், “இனி யாம் உண்டகலமும்,உடுக்கும் ஆடையும்,சூடும் அனைத்தும் உனக்கே சொந்தம்”என்று சண்டீச பதம் கொடுத்தார்;
“சிவாலயம் வந்து எம்மை வழிபடும் ஒவ்வொருவரும்,இறுதியாக உன்னை வழிபட்டால் தான் சிவாலயத்திற்கு வந்து வழிபட்டதற்கான புண்ணியம் அவர்களுக்குக் கிட்டும்” என்று வரம் கொடுத்தார்.
சண்டீசரும் இறைவனைத் தொழுது பிறவாநிலையை அடைந்தார்;திருக்கையிலாயம் சென்றடைந்தார்.
இருப்பிடம்:தஞ்சாவூர்  மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்காவில், கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் வழியில் தெற்கே ஒரு கி.மீ.தொலைவில் ஸ்ரீசத்தியகிரீஸ்வரர் ஆலயம் சேங்கனூர் என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்கள் இங்கே தனது பிறந்த நட்சத்திர நாளில் வருகை தர வேண்டும்;முதலில் சிவனுக்கும்,பிறகு அம்பாளுக்கும் முடிவில் இங்கே இருக்கும் வெண்கல ஓசை உடைய பைரவருக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து எட்டு ஜன்ம நட்சத்திர நாட்களில் இவ்வாறு வழிபாடு செய்து வர அனனத்து கர்மாக்களிலிருந்தும் மீண்டு வளமோடும் நலமோடும் இப்பிறவியிலேயே வாழலாம்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

Tuesday, December 17, 2013

பூராட நட்சத்திர ஜாதகர்கள் வழிபடவேண்டிய அவிநாசி காலபைரவப்பெருமான்!!!


பிரம்மாவுக்கும்,விஷ்ணுவுக்கு யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது;அதனால் அண்ணாமலையில் அன்னப்பறவை வடிவெடுத்து பிரம்மா சதாசிவனின் முடியைக் காண மேலே நோக்கிப் பறந்தார்;வெண்வராகம் வடிவெடுத்து மஹாவிஷ்ணு சதாசிவனின் அடியைக் காண கீழே நோக்கி தோண்டிக் கொண்டே சென்றார்;பிரம்மா சதாசிவனின் முடியைக் காணாமலேயே தாழம்பூவின் துணையுடன் விஷ்ணுவிடம் பொய் சாட்சி சொல்லவைத்து,தானே பெரியவர் என்று பொய்யாக ஜெயித்தார்.இதனால்,கோபமுற்ற சதாசிவன் நெருப்புப்பிழம்பு வடிவில் இருந்து தெய்வ வடிவம் எடுத்து பிரம்மாவை சபித்தார்.

எனது முடியைக்காணாமலேயே கண்டதாகச் சொன்ன உன்னை பூலோகத்தில் யாரும் வழிபட மாட்டார்கள்;
எனது முடியை பிரம்மா கண்டார் என்று பொய் சாட்சி சொன்ன நீ இனிமேல் இறைவழிபாட்டிலிருந்து விலக்கப்படுவாய் என்று தாழம்பூவுக்கு சாபம் கொடுத்தார்.

இதனால்,ஒரு பிரளயம் முடியும் வரையிலும் பூமியில் பிரம்மாவுக்கான வழிபாடுகளும்,கோவிலில் பிரம்மா சிலை ஸ்தாபிப்பும் இல்லாமல் போயின;அடுத்து வந்த பிரம்மா(பூமியில் 485 கோடி வருடங்கள் ஆனால்,அது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும்;இப்படி பிரம்மாவுக்கு 100 வயது ஆனால்,அவரது ஆயுள் முடிந்துவிடும்;அடுத்த புண்ணிய ஆத்மா பிரம்மா பதவியை ஏற்று படைப்புத் தொழிலைச் செய்வார்;பைரவ வழிபாட்டினை தொடர்ந்து சிலபல பிறவிகள் பின்பற்றுபவர்களே இப்படிப்பட்ட உயர்ந்த பதவியை எட்டுகிறார்கள்) சாபநிவர்த்திக்காக சதாசிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்;அதனால்,பிரம்ம பதவிக்கான சாபத்தை நிவர்த்திசெய்ய, பூலோகத்தில் காசிக்குச் சமமான அவிநாசிக்குச் சென்று வழிபட உபதேசம் செய்தார்.

இரண்டாவது பிரம்மா இன்றைய அவிநாசிக்கு வருகை புரிந்தார்;மூலவருக்கு அருகே ஒரு தண்டத்தை ஊன்றி திருக்குளம் உண்டாக்கினார்;கபிலை நதியை வரவழைத்தார்;அதில் தினமும் குளித்தார்;பஞ்சவில்வமரத்தை தோற்றுவித்தார்;அதன் அடியில் மேடையை அமைத்தார்;சிவ வழிபாட்டுமுறையை விவரிக்கும் முறைகளின் தொகுப்பே ஆகமம் ஆகும்.ஆகமவிதிப்படி,சதாசிவனை நோக்கி நூறு ஆண்டுகள் பூஜை புரிந்தார்;இறைவனாகிய சதாசிவன் மீண்டும் நேரில் வருகை புரிந்து என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்;

அதற்கு இரண்டாவது பிரம்மா, பிரம்ம பதவிக்குரிய சாபநிவர்த்தியை நீக்கும் படி சதாசிவனை வேண்டினார்.

அதன்படி,பிரம்மாவுக்குரிய சாபம் நீங்கியது;மீண்டும் படைப்புத்தொழிலைத் துவங்கினார்;

அதன்பிறகு,பிரம்மோற்சவம்  நடத்திட தேவர்களை வரவழைத்தார்;சித்திரை மாதம் மிருகசீரிட நட்சத்திர நாளில் ரிஷபக் கொடியேற்றி வைத்து பிரம்மோற்சவம் துவக்கினார்;பூர நட்சத்திரத்தில் சிங்கத் தீர்த்தத்தில் (11 நாட்கள் பிரம்மோற்சவம்) தீர்த்தம் கொடுத்து ரிஷபக் கொடியை இறக்கி பிரம்மோற்சவத்தை நிறைவு செய்தார்;
காசிக்கிணற்றின் அருகில் இரு காலபைரவர் இருப்பது இந்த ஆலயத்தின் சிறப்புக்குரிய மூர்த்திகளில் ஒருவர் ஆவார்.இவர் அற்புதமான சிற்பவடிவைத்தைக்கொண்டவர்.இவருக்கு மட்டும் தனியாக சகஸ்ரநாம துதி உருவாக்கப்பட்டிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் திருப்பூருக்கும்,கோயம்புத்தூருக்கும் நடுவே அவிநாசி அமைந்திருக்கிறது.
திருப்பூரிலிருந்து 12 கி.மீ.தொலைவிலும்;கோவையிலிருந்து 40 கி.மீ.தொலைவிலும் அவிநாசி அமைந்திருக்கிறது.

பூராட நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்கள் தமது பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் இங்கே அமைந்திருக்கும் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்;பிறகு,காலபைரவருக்கு அபிஷேகம் செய்து விட்டு,நேராக அவரவர் வீடு திரும்பவேண்டும்;தொடர்ந்து எட்டு பூராட நட்சத்திர நாட்களுக்கு இவ்வாறு பைரவ அபிஷேகம் செய்துவிட்டால் எதிர்காலம் வளமாகவும்.நிம்மதியாகவும்,நலமாகவும் இருக்கும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ