Tuesday, December 17, 2013

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய வைரவன்பட்டி மார்த்தாண்டபைரவர்!!!

நட்சத்திரங்களில் திரு என்ற அடைமொழி இரண்டே இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே தரப்பட்டிருக்கின்றன;ஒன்று ஆதிசிவனாம் சதாசிவனின் அவதார நட்சத்திரமான ஆருத்ரா என்ற திருவாதிரை;மற்றது ஓணம் என்ற திருவோணம்!

யாருடைய பிறந்த ஜாதகத்தில் மகரராசியில் ராகு அல்லது கேது இருக்கிறதோ,அவர்களின் இப்பிறவியிலேயே முக்தியை அடையும் ஆன்மீக அறிவைப் பெற்றுவிடுவார்கள்.அப்பேர்ப்பட்ட மகரராசியில் நடுநாயகமாக அமைந்திருப்பது திருவோணம்!

நகரத்தார் வாழ்ந்து வரும் பகுதியில் வைரவன் பட்டி என்ற வடுகன்மூதூர் என்ற வயிரவநகர் என்ற வயிரவ மாபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் வடிவுடை அம்பாள் சமேத வளரொளி நாதர் ஆலயத்தில் அம்பாளுக்கும்,சிவனுக்கும் நடுவே அமைந்திருக்கிறார் மார்த்தாண்டபைரவர்.பெரும்பாலான சிவாலயங்களில் கோவிலின் வடகிழக்கு மூலையில் அமைந்திருப்பார் பைரவர்!

இங்கே மார்த்தாண்டபைரவர் பத்மபீடத்தில்,நின்ற கோலத்தில் அக்னி கோசத்துடன்,ஆபரணங்கள் நிறைந்த மார்புடன்,நான்கு கரங்களில் உடுக்கை,பாம்பு,சூலம்,கபாலம் இவைகளை ஏந்தியவாறு காட்சியளித்துவருகிறார். திருப்பத்தூர் டூ காரைக்குடி சாலையில் பிள்ளையார்பட்டிக்கு ஒரு கி.மீ.முன்பாக இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் செல்வ வளம்,யோகம்,தனித்திறமை,சொந்த வீடு,மனைவி மக்கள்,பெருமை,புகழ்,ஆரோக்கியம்,பிரபலம் உண்டாகிறது.அவ்வாறு உண்டாக நவக்கிரகங்கள் காரணமாக அமைகின்றன;அதே போல முற்பிறவிகளில் நாம் செய்த தவறுகள்,செருக்குகள்,அட்டகாசங்களின் மொத்த வடிவமாக இப்பிறவியில் கடன்,நோய்,எதிரி,துயரம்,அவமானம் போன்றவைகளை நவக்கிரகங்கள் நமக்கு உரிய வயதில்,தகுந்த திசை புக்தி வரும்போது தருகின்றன; திருந்தி,மனம் வருந்தி வாழ நினைப்பவர்களுக்காகவே பரிகாரம் என்பது உண்டானது;பெரும்பாலான பரிகாரங்களை உரிய ஜாதகர்களே நேரடியாகச் செய்தால் மட்டுமே பலன்களை அடைய முடியும்.அவ்வாறு பரிகாரம் செய்ய ஏராளமான கோவில்களுக்குச் செல்ல வேண்டும்;அவ்வாறில்லாமல் ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபாட்டாலே நவக்கிரகங்கள் தீயப் பலன்களைக் குறைத்துவிடும்;ஏனெனில்,27 நட்சத்திரங்களும்,12 ராசிகளும் ஸ்ரீகாலபைரவப் பெருமானின் ஆளுகைக்குட்பட்டவையே!!!

இங்கே வைரவப்பெருமானின் பெயரால் வடுகத்தீர்த்தம் இருக்கிறது.தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க,பைரவப்பெருமான் தனது சூலாயுதத்தை ஊன்ற வற்றாத தீர்த்தம் இந்த ஆலயத்தின் தென் திசையில் உருவானது.

இந்த வையிரவத் தீர்த்தத்தில் நீராடிட பலவிதமான பலன்கள் உண்டாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் நீராட மகப்பேறு பெறுவர்;

கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்றும்,திங்கட்கிழமையன்றும் நீராடினால் சகலவிதமான பாவங்களும் தீரும்;

திருவாதிரை நட்சத்திரநாளில் நீராடினால் நோயும்,பகையும் தீரும்;

தைப்பூச நாளில் நீராடினால் மகத்தான செல்வச் செழிப்பு உண்டாகும்;

பங்குனி மாத உத்திரத்தில்(பவுர்ணமி) சிவ அம்சமாக மாறிவிடுவர்;

காசியில் இயற்கையாக இறந்தால் முக்தி என்பது எல்லோரும் அறிந்த யுக உண்மை; காசியில் கால பைரவப் பெருமான்,இறந்தவர்களுடைய உடலை ஒரு முகூர்த்த நேரம் தனது சூலத்தால் குத்தி பாவம் நீக்குவார்;ஆனால்,வயிரவன் பட்டியில் இயற்கையான முறையில் இறந்தவர்களுக்கு அந்த துன்பம் கிடையாது;ஏனெனில்,தமது பெயரால் இருக்கும் ஊரில் இறந்தவர்களுக்கு எந்தத் துன்பமும் நேராமல் நேராக திருக்கையிலாயத்தில் கொண்டு சேர்த்துவிடுவார்;

காசியில் இறந்தார் தம்மைக்
காலபைரவன் சூல் கோத்து
மூசிய முகூர்த்தம் ஒன்று
முறைசெயாப் பாவம் தொலைக்கும்
மாசில் இந்நகர் மாண்டாரை
அத்துணை துன்பம் இன்றி
மாசிலாக் கயிலை சேர்ப்பான்
வடுகன் தன் ஊர் என்று எண்ணி என்ற பாடல் வயிரவன் கோவில் புராணத்தில் வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூரத் திருவிழா 10 நாட்கள் இங்கே
நடைபெற்றுவருகிறது.தினசரி காலையில் வெள்ளி ரதத்தில் திருவீதி உலாவும்,ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி வலமும் வருவார்;தமிழ்நாட்டிலேயே பைரவப் பெருமான் தேரில் எழுந்தருளி வலம் வருவது இந்த ஆலயத்தில் மட்டுமே!!!

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது ஜன்ம நட்சத்திர நாட்களில் இங்கே வந்து சிவனுக்கும்,அம்பாளுக்கும் முதலில் அபிஷேகம் செய்ய வேண்டும்,முடிவில் மார்த்தாண்ட பைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகம்  செய்யும் போது காலபைரவர் 1008 போற்றியைப் பாட வேண்டும்.

மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் பாதையில் 70 கி.மீ.தொலைவிலும்;காரைக்குடியில் இருந்து 15 கி.மீ.தொலைவிலும் வயிரவன்பட்டி அமைந்திருக்கிறது.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment