Monday, December 9, 2013

பூரம் நட்சத்திர ஜாதகர்கள் வழிபட வேண்டிய பட்டீஸ்வர பைரவர்!!!மூர்த்தி,தலம்,தீர்த்தம் இம்மூன்றினாலும் சிறப்பு பெற்றது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் ஆகும்.பராசக்தியே தவம் செய்து வழிபட்டது இங்கேதான்! காமதேனுவின் புத்திரி(மகள்) பட்டியால் பூசிக்கப்பெற்றது.மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்தில் உள்ள ஞானவாவியின் துளிபட்டமையால் சாப நிவர்த்தி ஆனது.காம்பீலி நகரத்து அரசன் சித்திரசேன மகாராஜா புத்திரகாமேஷ்டி யாகம் செய்து குழந்தை வரம் பெற்றதும் இங்கே தான்!

சக்தியும்ன மகாராஜாவுக்கு ஞானதீர்த்தத்தில் நீராடிய மகிமையாலும்,கிளியின் பஞ்சாட்சர உபதேசத்தாலும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதும் இங்கேதான்!விஸ்வாமித்திர மகரிஷிக்கு காயத்ரி மந்திரம் சித்தியானது இங்கேதான்.அவ்வாறு சித்தியாகி பிரம்மரிஷி பட்டம் பெற்றதும் இங்கேதான்.

ஹனுமனால் கொண்டுவரப் பட்ட லிங்கத்தை ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்து தன் வில்லின் முனையால் கோடி தீர்த்தம் என்னும் கிணற்றை தோற்றுவித்து அந்நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து சாயாஹத்தி தோஷம் நீங்கியதும் இந்த தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தான்! 

திருஞான சம்பந்தருக்கு வெயிலின் வெப்பம் தணிய இறைவனால் முத்துப்பந்தல் அளிக்கப்பட்டது.முத்துப்பந்தலின் நிழலில் வருவதைக் காண நந்திதேவரை விலகியிருக்கும் படி கட்டளையிட்டார்.அதன் அடையாளமாக எல்லா நந்திகளும் விலகியிருக்கின்றன;இவ்வாறு திருப்பூந்துருத்தியிலும் திருஞானசம்பந்தருக்காக நந்தி விலகியுள்ளது.திருப்புன் கூரில் நந்தனாருக்குக் காட்சி கொடுப்பதற்காக பெருமான் அருளால் நந்தி விலகியுள்ளது.திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்றது.

பராசக்தி தனித்து தவம் செய்வதற்காக இங்கே வந்து ஒரு வனத்தை உருவாக்கினாள்.தேவர்கள் அனைவரும் இங்கே வந்து மரம்,செடி,கொடிகளின் உருவெடுத்து அன்னை பராசக்திக்கு பக்கபலமாக இருந்தார்கள்;காமதேனு தனது மகளான பட்டியை அனுப்பி வைத்தது.பட்டி பராசக்திக்கு பணிவிடை செய்தது;பராசக்தியின் தவத்தினால் மெச்சி சிவபெருமான் தமது சடைமுடியுடன் காட்சியளித்தார்.இதனால் இங்கே அவருக்கு சுபர்தீஸ்வரர் என்ற பெயர் உண்டானது.

பராசக்திக்கு சிவபெருமான் அருள்வழங்கியதை கண்ணுற்ற பட்டி தானும் அதே போல சிவ அனுக்கிரகம் பெற விரும்பியது;இந்த ஸ்தலத்தின் பெருமைகளை உணர்ந்ததால்  இங்கேயே மணலால் ஒரு லிங்கம் அமைத்து,தினமும் ஆகமவிதிப்படி பூஜை செய்து வந்தது.தனது பாலைக் கொண்டும்,ஞானவாவியின் நீரைக்கொண்டும் தினமும் வழிபட,பெருமகிழ்ச்சியடைந்த சிவபெருமான் அந்த மணல் லிங்கத்தை நிலையான லிங்கமாக உருமாற்றினார்.பராசக்தி இங்கே வந்து தவம் செய்தமையால் தேவி வனம் என்றும்,பட்டிக் கன்று வழிபட்டதால் பட்டீஸ்வரம் என்றும் இந்த இடத்தின் பெயர் மாறியது.தேனுபுரீஸ்வரருக்கு பட்டீஸ்வரர் என்ற பெயர் உருவானது.

மேலே கூறிய அத்தனை சம்பவங்களிலும் சிவபெருமானிடம் இருந்து வரங்களை வாங்கித் தந்தவரே பட்டீஸ்வர பைரவப் பெருமான் ஆவார்.
பட்டீஸ்வரம் கும்பகோணத்தில் இருந்து தென் மேற்கே 8 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கிறது.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment