Monday, December 16, 2013

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சீர்காழி சட்டநாத ஆகாச பைரவர்!!!


உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சதாசிவம்,மூன்று முக்கியமான இடங்களில் நிரந்தரமாக வாசம் செய்து வருகிறார்.அதனால்,அவரை மூன்று நிலைகளிலும் வைத்து வழிபட வேண்டும்.

1.ஸ்தல விருட்சத்தின் அடியில்

2.அடியார்களின் மனதில்

3.வேதங்களின் முடியில்

இந்த அடிப்படையில் வழிபாடு பல யுகங்களாக நடத்தப்படும் இடம் நாகப்பட்டிணம் தாலுகா சீர்காழியில் உள்ள அருள்நிறை ஸ்ரீசட்டைநாதர் திருக்கோவில் ஆகும்.இந்த ஸ்தலத்தில் மூன்று வகைத் திருமேனி வடிவங்களில் காட்சியளித்து வருகிறார்.

1.ஸ்தலவிருட்சத்தின் அடியில் பிரம்மாவால் உருவாக்கப்பட்ட ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்

2.யுகமுடிவில் பிரளயம் ஏற்படும்.அப்போது பிரணவத்தைத் தோணி வடிவமாக்கி இறைவன்,இறைவியோடு வந்து தங்கும் இடமான தோணியப்பர் சன்னதி இங்கு காட்சியளித்துவருகிறார்.

3.ஹிரண்யாசுரனை மடியில் கிடத்தி அவனை சம்ஹாரம் செய்தார் திருமாலின் அவதாரமான நரசிம்மம்.சம்ஹாரம் செய்தப் பின்னரும் கூட ஆக்ரோஷம் அடங்காமல் திரிந்த நரசிம்மரை சரபேஸ்வரர் வடிவம் எடுத்து ஆட்கொண்டவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்.அவ்வாறு ஆட்கொண்டு நரசிம்மத்தின் தோலை இடுப்புக்கு ஆடையாக அணிந்து கொண்டும்,வாமன அவதாரம் எடுத்து மூன்று அடி அளந்த வாமனின் உயிரைக் கவர்ந்து,வாமனின் உடலைச் சட்டையாக அணிந்தும் எலும்பை கதாயுதமாகக் கைகொண்டும் காட்சியளிக்கும் ஸ்ரீசட்டைநாதர் சின்முத்திரையோடு காட்சியளிக்கிறார்.

திரிபுர சம்ஹாரத்தின் போது ஆதிசிவன்,திருவதிகையில் சிரித்தபோது அந்தச் சிரிப்பில் தோன்றிய அக்னிக் குஞ்சு சாந்தமடைந்து ஒரு சிறுகுழந்தையாக வடிவமெடுத்தது.வடிவமெடுத்து சதாசிவனின் நெஞ்சில் தங்கியது;அந்தக் குழந்தையை சதாசக்தி வளர்த்து வந்தாள்.சதாசிவனின் ஆணைப்படி,அந்த அக்னிக்குஞ்சு விஸ்வரூபம் எடுத்தது;அந்த உருவம் தான் சீர்காழியில் இருக்கும் ஆகாச பைரவர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார்.

சீர்காழியில் உள்ள பெரிய கோவில் கட்டுமலையின் மேல்தளத்தில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சின்முத்திரை வலது கரம் காட்ட,இடது கரம் கதாயுதத்தைத் தரையில் ஊன்றிய வண்ணம் திகம்பரராக(திசைகளையே ஆடையாக அணிந்தவர்=திகம்பரர்) சட்டைநாதர் காட்சி அளித்து வருகிறார்.இவருக்கு அபிஷேகம் கிடையாது.புனுகுச் சட்டம் மட்டும் சாத்தப்படுகிறது.இவருக்குப் படைக்கப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை;அதை வீட்டிற்கு எடுத்துவந்து சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது;அப்படியே சாப்பிட வேண்டும்;இவருடைய அம்சமாக விளங்கும் அருவுரூவஸ்வரூபம்=பத்ரலிங்கம் கீழ்த்தளத்தில் அவரை நோக்கியே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.அந்த பத்ரலிங்கத்துக்குத் தான் எல்லாவிதமான அபிஷேகங்களும் செய்யப்படுகின்றன.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சட்டைநாதருக்கு நடைபெறும் சுக்கிரவார அர்த்தஜாம பூஜை மிகவும் சக்தி வாய்ந்தது;சிறப்பு மிக்கது:அளவற்ற புண்ணியம் தரக்கூடியது;பலநூறு முற்பிறவிகளில் புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே இதில் கலந்து கொள்ளக் கூடிய பாக்கியம் கிட்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட மூலம் நட்சத்திரக்காரர்கள் இந்த பைரவப் பெருமானை மூல நட்சத்திரம் வரும் நாட்களில் வழிபட்டு வர அவர்களின் ஆத்மாவின் கர்மவினைகள் அனைத்து கரைந்து காணாமல் போய்விடும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ


No comments:

Post a Comment