கும்பகோணம் அருகே இருக்கும் சேங்கனூரில் உள்ள வெண்கல ஓசை உடைய பைரவர்
உத்திரட்டாதி நட்சத்திரத்துக்குரிய பைரவப் பெருமான் ஆவார்.
வெகுகாலத்திற்கு முன்பு வாயுதேவனுக்கும்,ஆதிசேஷனுக்கும் யார் பெரியவர்?
என்ற பலப்பரீட்சை ஏற்பட்டது.அப்போது ஆதிசேஷன் மேருமலையை தன் உடம்பால் இறுக்கிப் பிடித்துக்
கொள்ள வாயுதேவன் தனது முழுபலத்தையும் காட்டி மேருமலை மீது பலத்த காற்றுவீசி அதை அசைக்க
முயன்றான்;அப்போது மேரு மலையின் ஒன்பது பகுதிகள் பெயர்ந்து ஒன்பது கண்டங்களாக விழுந்தன;அவற்றில்
ஒரு சிகரமே கந்தமாதனம் ஆகும்.கந்தமாதனத்தில் இருந்து ஏழு சிறிய சிகரங்கள் தனித்தனியாக
பெயர்ந்து நமது பாரத தேசத்தில் ஏழு இடங்களில் விழுந்தன;அவற்றில் ஒன்று இந்த சேங்கனூரில்
விழுந்தது;அந்த சிகரத்தின் பெயர் சத்தியம் ஆகும்.அதனால்,இந்த தலத்திற்கு சத்தியகிரி
என்ற பெயர் உருவானது.குமாரபுரம்,சண்டேசுவரபுரம்,அகமாதகவனம் என்ற வேறு பெயர்களும் சேங்கனூருக்கு
உண்டு;இந்தத் தலத்தில் பல முனிவர்களும்,ரிஷிகளும்,துறவிகளூம் விலங்குகள் வடிவிலும்,பறவைகள்
வடிவிலும் மரங்கள் வடிவிலும் உருவகமாக பல கோடி ஆண்டுகள் நின்று வழிபாடு செய்து வருகிறார்கள்.
சிபிமகாராசன் என்ற மன்னன் காம்பீலி நகரத்தை ஆண்டு வந்தான்;அவனது ஜாதகப்படி
ஏற்பட்ட தோஷத்தை நீக்கிட,அவன் தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டான்;திரிவேணி சங்கமம்(இன்றைய
பிரயாகை=அல் லஹா பாத்)நர்மதை,கோதாவரி முதலிய தீர்த்தங்களில் நீராடினான்.நீராடிவிட்டுத்
திரும்பி வரும் போது சேங்கனூரைக்கடக்கும் போது பக்தி உணர்ச்சிப் பெருகியது.எனவே,இங்கே
இருக்கும் ஸ்ரீசத்தியகிரீஸ்வரை வழிபட்டு இங்கேயே சிலகாலம் தங்கினான்.
பிராமணர்களுக்கு பூதானம் செய்ய நினைத்து 360 வீடுகள் கட்டினான்;360 பிராமணர்களை
பாரத தேசம் முழுவதும் இருந்து வரவழைத்து அவர்களை இங்கே குடியேற்றினான்.அப்போது அவர்களில்
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எச்சதத்தனின் மனைவியான பவித்திரை ஒரு ஆண்குழந்தையை பெற்றாள்.அதனால்,எச்சதத்தனும்
பவித்திரையும் ஊரின் எல்லையில் தங்கும் சூழல் உருவானது.எல்லா குடும்பத்தாரும் சிபிமகாராசனை
அடைந்தார்கள்.சிபிமகாராசன் ஒவ்வொரு பிராமணக்குடும்பத்திற்கும் ஒரு வீடும்,ஒரு காராம்பசுவும்,சிறிதளவு
நிலமும் தானமாக வழங்கினான்.359 பேர்களுக்கு தானம் வழங்கிட மீதி ஒரு வீடு தானம் செய்ய
முடியாத நிலை இருந்தது.எனவே,அரசன் மிகவும் வருத்தமடைந்தான்;ஏனெனில்,குறிப்பிட்ட திதியும்,நட்சத்திரமும்
நிறைவடையும் முன்பே 360 பிராமணர்களுக்குத் தானம் வழங்கினால் தான் தானத்தின் பலன் முழுமையாக
மன்னனை வந்து சேரும்;இல்லாவிடில் 12 ஆண்டுகள் இதே போல் தானம் செய்யக் காத்திருக்க வேண்டும்;எனவே,அரசனின்
வருத்தத்தைப் போக்கிட சிவலோக நாயகியும்,வயோதிக பிராமணருமாக வந்த அந்த 360 வது வீட்டையும்,காராம்பசுவையும்,நிலத்தையும்
தானமாகப் பெற்றுக் கொண்டனர்.
மறுநாள் சிபிமகாராசன் ஒவ்வொரு வீடாகச் சென்று பிராமணர்களைக் கண்டு யோக
க்ஷேமம் விசாரித்தான்;கடைசியாக வயோதிகப் பிராமணரின் வீட்டிற்கு வந்தான்;வீட்டுக் கதவு
உள்புறம் பூட்டியிருந்தது.பலமுறை கதவைத் தட்டியும் குரல் கேட்காததால்,கதவை உடைத்துக்
கொண்டு உள்ளே சென்று பார்த்தான்;உள்ளே யாரும் இல்லை;ஆக,நேற்று வீட்டை தானமாகப் பெற்றது
சிவலோக நாயகியும்,சுவாமியுமே என்பதை உணர்ந்து,ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான்;சேங்கனூரில்
அமைந்திருந்த இறைவனையும்,இறைவியையும் வழிபட்டு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துவிட்டு
தனது நகரத்திற்குத் திரும்பினான்.
இவ்வூரின் எல்லையில் தங்கிய எச்சதத்தன்,தனது மனைவி,குழந்தைகளுடன் வந்து
ஊருக்குள் வந்தான்;வீடுகள் எல்லாம் தானம் செய்து விட்டதால்,சிபிமகாராசனை கண்டு தனது
நிலையை முறையிட்டான்.சிபிமகாராசன்,சேங்கனூருக்கு வந்து அங்கே இருக்கும் 359 பிராமணர்களின்
பசுக்களை மேயும் பொறுப்பை எச்சதத்தனிடம் ஒப்படைக்கும் படி ஆணையிட்டான்.அதற்கு எச்சதத்தன்
ஒப்புக்கொண்டால்,அந்த சேங்கனூரில் வசித்துக் கொள்ளலாம் என்று பிராமணர்களும்,மன்னனும்
ஒப்புக்கொண்டனர்;
எச்சதத்தன் தனது மகனை பொறுப்பாகவும்,அன்பாகவும் வளர்த்து வரும் வேளையில்,ஏழு
வயது நிரம்பியதும் உபநயனம் செய்தான்;விசாரசருமர் என்று பெயரிட்டு,பசுவை மேய்க்கும்
பொறுப்பையும் ஒப்படைத்தான்;தினமும் மண்ணியாற்றங்கரையில் பசுக்களை மேய்த்து வரும் போது,அவைகளின்
மீது அளவற்ற பாசம் கொண்டான்.விசாரசருமரை பசுக்கள் தமது கன்றாகவே கருதி பாசம் கொண்டன.அதனால்,அவனைக்
கண்டதுமே பாலைப் பொழிந்தன.பால் வீணாவதை நினைத்து,அவைகளைக் கொண்டு சிவ அபிஷேகம் செய்ய
விரும்பினான்.எனவே,மண்ணியாற்றங்கரையில் ஒரு மணல் திட்டில் மணலால் ஒரு சிவலிங்கத்தை
உருவாக்கினான்.பூசைக்காக பூக்களையும்,தளிர்களையும் பறித்து வந்து,தினமும் ஆகமவிதிப்படி
சிவபூஜை செய்துவந்தான்;இதை அந்த பாதை வழியாக வந்த வழிப்போக்கன் ஒருவன் ஊருக்குள் இருந்த
பிராமணர்களிடம் தெரிவித்துவிட,அவர்கள் சிவாசரசருமரின் அப்பா எச்சதத்தனிடம் முறையிட்டனர்.எச்சதத்தனும்
தனது மகனைக் கண்டித்தான்;
மறுநாள் விசாரசருமர் பசுக்களை மேய்ப்பதற்கு ஓட்டிக்கொண்டு போக,எச்சதத்தன்
தனது மகன் அறியாதவாறு அவனைப் பின் தொடர்ந்தான்;விசாரசருமரும் வழக்கம் போல அத்திமரநிழலில்
மணலால் சிவலிங்கம் உருவாக்கி,ஆகமவிதிப்படி பூஜை செய்ய,அதை மறைந்திருந்து கவனித்த எச்சதத்தன்,தனது
மகன் விசாரசருமரை கோலால் அடித்தான்;சிவசிந்தனையிலேயே இருந்தமையால் தந்தை அடித்ததும்,திட்டியதும்
உணரவில்லை;
தான் அடித்தும்,திட்டியும் கூட தனது மகன் கண்டுகொள்ளாமல் இருந்ததைக்
கண்டு ஆத்திரப்பட்ட எச்சதத்தன்,பால் குடங்களை தனது காலால் இடறிவிட,பால் அனைத்து சிந்தியது;பால்
சிந்தியதைக்கண்ட விசாரசருமருக்கு சுயநினைவு வர,பாலைச் சிந்தியது தனது அப்பா என்று அறிந்தும்கூட,அவனுக்கு
கோபம் பொங்கியது;தாம் செய்து வரும் சிவபூஜைக்கு இடையூறு வந்துவிட்டதே என்று ஆவேசப்பட்டு,அருகில்
இருந்த கோலை எடுத்தான்;அது உடனே மழுவாக உருமாறியது;அந்த மழுவினால் தனது தந்தை எச்சதத்தனின்
கால்களை வெட்டினான்;தந்தை கால்களின்றி கீழே விழ,தனது பூஜையைத் தொடர்ந்தான் விசாரசருமர்.
அந்த கணத்தில் சதாசிவனும்,பாலாம்பிகையும் அந்த மணல் லிங்கத்தில் இருந்து
வெளிப்பட்டனர்;விசாரசருமருகுக்கு காட்சியளித்தனர்;
எனக்காக பெற்றத் தந்தையின் கால்களையே வெட்டியெறிந்தாய்;இனி உனக்கு எல்லாமே
யாம் தான் என்று விசாரசருமரைப்பாரட்டி, அவனை உச்சிமோந்தார்;தனது கழுத்தில் கிடந்த கொன்றை
மாலையை விசாரசருமர் கழுத்தில் அணிவித்தார்;
மேலும், “இனி யாம் உண்டகலமும்,உடுக்கும் ஆடையும்,சூடும் அனைத்தும் உனக்கே
சொந்தம்”என்று சண்டீச பதம் கொடுத்தார்;
“சிவாலயம் வந்து எம்மை வழிபடும் ஒவ்வொருவரும்,இறுதியாக உன்னை வழிபட்டால்
தான் சிவாலயத்திற்கு வந்து வழிபட்டதற்கான புண்ணியம் அவர்களுக்குக் கிட்டும்” என்று
வரம் கொடுத்தார்.
சண்டீசரும் இறைவனைத் தொழுது பிறவாநிலையை அடைந்தார்;திருக்கையிலாயம் சென்றடைந்தார்.
இருப்பிடம்:தஞ்சாவூர் மாவட்டம்
திருவிடைமருதூர் தாலுக்காவில், கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் வழியில் தெற்கே
ஒரு கி.மீ.தொலைவில் ஸ்ரீசத்தியகிரீஸ்வரர் ஆலயம் சேங்கனூர் என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்கள் இங்கே தனது பிறந்த நட்சத்திர
நாளில் வருகை தர வேண்டும்;முதலில் சிவனுக்கும்,பிறகு அம்பாளுக்கும் முடிவில் இங்கே
இருக்கும் வெண்கல ஓசை உடைய பைரவருக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து எட்டு ஜன்ம நட்சத்திர நாட்களில் இவ்வாறு வழிபாடு செய்து வர
அனனத்து கர்மாக்களிலிருந்தும் மீண்டு வளமோடும் நலமோடும் இப்பிறவியிலேயே வாழலாம்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
No comments:
Post a Comment