ஆண் எனில் அதிகபட்சமாக 29 வயதுக்குள்ளாகவும்,பெண் எனில் அதிகபட்சமாக
27 வயதுக்குள்ளாகவும் திருமணம் செய்வது அவசியம்;பிறந்த ஜாதகப்படி கோடி இளைஞர்களில்
ஒருவருக்கு மட்டுமே துறவறமாகும் தகுதி இருக்கும்;மற்றவர்கள் எனக்கு திருமணம் வேண்டாம்
என்று பிடிவாதத்தால் வியாழ நோக்கம் வரும் போது இருந்து விட்டு,முதுமையின் ஆரம்பத்தில்
வரன் தேடுவது சர்வசாதாரணமாகிவிட்டது;
இன்றைய கலியுகத்தில் மகன்/மகளின் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்க
வேண்டும் என்ற நோக்கில் வாழ்க்கைத்துணை தேடும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் குறைந்து
கொண்டே வருகிறது.சாஃப்ட்வேர் அல்லது அரசுப்பணியில் அல்லது நல்ல சம்பளத்தில் தனது மகனோ/மகளோ
இருந்துவிட்டால் அவன்/ளிடமிருந்து முடிந்தவரையிலும் சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு
தனது முதுமைக்கால பாதுகாப்பிற்கு அதை சேமிக்கிறார்கள்;அவ்வாறு சேமித்து, அவர்களின்
திருமணத்தின் மீது சிறிதும் அக்கறையில்லாமல் இருக்கும் தமிழ்நாட்டு பெற்றோர்களின் எண்ணிக்கை
இரட்டை இலக்க சதவீதத்தை எட்டத் துவங்கியிருக்கிறது.பணம்,பணத்துக்காக இப்படி பெற்றோர்கள்
இருந்தால் அவர்களின் மகன்/மகளில் பெரும்பாலானவர்கள் நமது பெற்றோர்கள் இப்படி இருப்பார்களா?
என்பதை நம்பாமல் இருந்து இளமையை பன்னாட்டு நிறுவனங்களுக்கும்,தமது அலுவலக வளர்ச்சிக்கும்
தாரை வார்த்துவிட்டு வாழ்க்கையை பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் சில பெற்றோர்கள் தமது மகன்/ளின் திருமண வாழ்க்கைக்கான எதிர்ப்பார்ப்பு
என்ன என்பதை முழுமையாக அறிந்து கொண்டு அதற்கு எதிரான வாழ்க்கைத் துணையை அமைக்கும் கொடூரமும்
தமிழ்நாட்டிலும்,தமிழ் மக்களிடமும் பரவலாகிக் கொண்டிருக்கிறது.எப்படிப் பார்த்தாலும்,வீட்டில்
திருமணம் ஆகாமல் மகனோ/மகளோ 30 வயதைக் கடந்தாலோ அது குடும்பத்திற்கு சுமையையும்,பெற்றோர்களுக்கு
கடினமான பாவத்தையுமே தந்து கொண்டிருக்கிறது.
நீண்டகாலமாக திருமண வாழ்க்கை அமையாமல் இருந்து வரும் இளம் பெண்கள்,இளைஞர்களுக்கு
நல்ல மணவாழ்க்கை அமைய ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் ஒரு சக்திவாய்ந்த பைரவ வழிபாட்டை கழுகுமலை
18 சித்தர்கள் கிரிவல நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 16.12.2013 திங்கட்கிழமை மதியம்
2.55க்குத் தெரிவித்தார்.ஏராளமான வாசக,வாசகிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஆன்மீகக்கடல்
மூலமாக ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தெரிவிக்கிறார்.
இந்த பைரவ வழிபாட்டை யாருக்கு திருமணம் தாமதமாகிறதோ அந்த கன்னிப்பெண்/இளைஞர்
மட்டுமே செய்ய வேண்டும்;அவர்கள் சார்பாக யார் செய்தாலும் பலன் தராது.
யாருக்கு திருமணத் தடை இருக்கிறதோ அவருக்கு என்ன திசை நடைபெறுகிறது
? என்பதை உரிய ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்;அந்த திசையின் கிழமையில்
வாரம் ஒரு கிழமை வீதம் ஏழு கிழமை மட்டும் இந்த பைரவ வழிபாட்டைப் பின்பற்ற வேண்டும்.
சூரிய மஹாதிசை நடைபெற்றால் ஏழு ஞாயிற்றுக்கிழமைகளும்
சந்திரமஹாதிசை நடைபெற்றால் ஏழு திங்கட்கிழமைகளும்
செவ்வாய் மஹாதிசை நடைபெற்றால் ஏழு செவ்வாய்க்கிழமைகளும்
புதன் மஹாதிசை நடைபெற்றால் ஏழு புதன்கிழமைகளும்
வியாழ(குரு)மஹாதிசை நடைபெற்றால் ஏழு வியாழக்கிழமைகளும்
சுக்கிரமஹாதிசை நடைபெற்றால் ஏழு வெள்ளிக்கிழமைகளும்
சனிமஹாதிசை நடைபெற்றால் ஏழு சனிக்கிழமைகளும்
ராகு மஹாதிசை நடைபெற்றால் ஏழு வெள்ளிக்கிழமைகளும்
கேது மஹாதிசை நடைபெற்றால் ஏழு வெள்ளிக்கிழமைகளும் இந்த வழிபாட்டைப் பின்பற்ற
வேண்டும்.இந்த வழிபாடு செய்ய விரும்புவோர் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும்
கைவிட வேண்டும்;அவ்வாறு கைவிட்டப்பின்னரே இந்த பைரவ வழிபாடு செய்ய வேண்டும்;அப்படி
செய்தால் மட்டுமே வழிபாடு பலன்களைத் தரும்.
பழமையான சிவாலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு பின்வரும்
பொருட்களை படையலாக இடவேண்டும்;முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை அல்லது
செவ்வரளிமாலையை பைரவப் பெருமானுக்கு சந்தனக் காப்பு செய்த பின்னர் அணிவிக்கச் சொல்ல
வேண்டும்;இரண்டு நெய்தீபங்களை அவரது சன்னதியில் அல்லது சன்னதி இருக்கும் பகுதியில்
ஏற்றி வைக்க வேண்டும்;ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு பாக்கெட் வாங்கி வந்து அவரது பாதத்தில்
பாக்கெட்டை திறந்து வைக்க வேண்டும்;
முடிவாக திருமணத் தடை நீங்க என்று ஸ்ரீகாலபைரவப்பெருமானுக்கு தனது பெயர்,நட்சத்திரம்
சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு ரூ.60/-தட்சிணை தர வேண்டும்;இதேபோல தொடர்ந்து
ஆறு கிழமைகள் வழிபாடு செய்ய வேண்டும்;ஏழாவது கிழமையன்று ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு
படையலாக அவல் பாயாசம் படைக்க வேண்டும்;(வீட்டில் தயார் செய்ய இயலாதவர்கள் நட்பு/உறவினர்
வீட்டில் செய்யலாம்) அர்ச்சனையின் முடிவில் படையல்களில் டயமண்டு கல்கண்டு பாதியை அங்கே
வருபவர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்;ஏழாவது கிழமையில் அவல் பாயாசத்தை அங்கே வருபவர்களுக்குப்
பகிர்ந்து தர வேண்டும்;
இந்த ஏழு கிழமைகள் வழிபாடு செய்தப் பின்னர்,90 நாட்களுக்குள் தகுந்த
வரன் தேடி வரும்;திருமண வாழ்க்கை அமைந்து விடும்;வாழ்க அறமுடன்,வளர்க பைரவ அருளுடன்!!!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
No comments:
Post a Comment