Monday, October 7, 2013

அட்டவீரட்டானங்களின் பெருமைகளும்,ஸ்ரீகாலபைரவரின் அருளாற்றலும்!!!


ஸ்ரீகாலபைரவர் இந்த பிரபஞ்சம் முழுவதையும் ஆட்சிபுரிந்து வருகிறார்;நம்மைப் போலவே மனித இனங்கள் இந்த பிரபஞ்சத்தில் சுமார் 30,000 வாழ்ந்து வருகின்றன என்பதை வானியல் மற்றும் வேற்றுக்கிரக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.இருந்தபோதிலும் ஸ்ரீகாலபைரவர் அந்த 30,000 பூமிகளில் திருவிளையாடல் நடத்தாமல் நமது பூமியில் திருவிளையாடல் நடத்தக் காரணம் என்ன?
ஏனெனில்,நாம் வாழும் பூமிதான் கர்ம பூமி;மற்றவையெல்லாம் போக பூமி.கர்ம பூமி என்றால் என்னவென்று பார்ப்போம்;நாம் வாழும் பூமிக்கு மேலே ஏழு உலகங்களும் கீழே ஏழு உலகங்களும் இருக்கின்றன.நாம் மனிதனாக வாழும் இந்த உலகத்தில் முடிந்தவரையிலும் அடுத்தவரை சித்ரவதை செய்தும்,ஏமாற்றியும் வசதியாக வாழ்ந்தால் நாம் இறந்ததும் இந்த பூமிக்கு கீழே இருக்கும் ஏழு உலகங்களில் ஏதாவது ஒரு உலகிற்கு அனுப்பப்படுவோம்;அங்கே எல்லாவிதமான சித்ரவதைகளையும்,வேதனைகளையும் குறிப்பிட்ட காலம் வரையிலும்(சில நூறு ஆண்டுகளாகவும் இருக்கலாம்) அனுபவித்துவிட்டு மீண்டும் இதே உலகத்தில் மனிதனாக பிறப்போம்;
நாம் வாழும் காலம் வரையிலும் முடிந்தவரையிலும் அடுத்தவர்களுக்கு முடிந்த வரையிலும் உதவி செய்து கொண்டும்,நமது திறமையால் பிறருக்கு வழிகாட்டியும்,அடிக்கடி அன்னதானம் செய்தும்,தவறான பாதையில் செல்லும் நமது நட்பு வட்டம் மற்றும் உறவுகளை சீர்திருத்தினால் நமது மரணத்துக்குப் பிறகு இந்த பூமிக்குமேலே இருக்கும் ஏழு உலகங்களில் நாம் செய்திருக்கும் புண்ணியங்களுக்கு ஏற்றாற்போல ஏதாவது ஒரு உலகத்திற்குச் சென்று சகல போகங்களையும்(சில நூற்றாண்டுகள் வரை கூட இருக்கலாம்) அனுபவிப்போம்;அனுபவித்துவிட்டு மீண்டும் நாம் வாழும் இந்த பூமியிலேயே பிறப்போம்;அப்படி பிறக்கும்போது உயர்ந்த மனிதப்பிறப்பாக பிறவி எடுக்க வேண்டியிருக்கும்;உயர்ந்த ஜாதியினராக பிறப்போம் என்று இதற்கு அர்த்தம் இல்லை;பெரும் செல்வச் செழிப்போடும்,எந்த வித மனக்குறையுமின்றியும் பிறப்போம் என்று அர்த்தம்.
ஆனால்,மனிதனாகப் பிறந்த நமது வாழ்க்கைகளின் லட்சியம் இந்த 14 உலகங்களுக்குள் போய்த் திரும்புவது அல்ல;இந்த 14 உலகங்களுக்கும் ஒரு போதும் போகாமல் இருக்கும் மறுஜன்மமில்லாத முக்தியை அடைவதே ஆகும்.இந்த முக்தியை எல்லா தெய்வ சக்திகளாலும் தர முடியும்.இவ்வாறு முக்தியடைந்தப் பின்னர்,நாம் விரும்பினால் மட்டும் மீண்டும் இந்த கர்ம பூமியில் பிறக்க முடியும் என்பது ஆச்சரியமான உண்மை ஆகும்.
கடவுள்களிலும் அதிகார அடுக்குகள் இருக்கின்றன.சாதாரண அப்பாவி மனிதர்களைவிடவும்,சாஸ்திர சம்பிரதாயங்கள் தெரிந்த மனிதர்கள் உயர்ந்தவர்கள்;சாஸ்திர சம்பிரதாயங்களை அறிந்தவர்களை விடவும்,ஜீவசமாதி அடைந்த மகான்களும்,சித்தர்களும் உயர்ந்த ஆத்மாக்கள் ஆவர்;இவர்களை விடவும் உயர்ந்தவர்கள் இந்த நிலையிலிருந்து அடுத்த தெய்வீக நிலையை எட்டியிருக்கும் தேவர்கள்,இந்திரன் போன்றவர்கள் உயர்ந்தவர்கள்;இவர்களை விடவும் நவக்கிரகங்கள் உயர்ந்தவர்கள்;இவர்களை விட உயர்ந்தவர்கள் பிரம்மா+கலைவாணி;பெருமாள்+மகாலட்சுமி;ருத்ரன்+ருத்ரி உயர்ந்தவர்கள்; இவர்களை விடவும் உயர்ந்தவரே ஸ்ரீகால பைரவர் ஆவார்.இவரே சதா சிவன் எனப்படும் திருஅண்ணாமலையார்! இவருக்கும் மேலே ஒரே ஒரு பெண் சக்தி இருக்கிறாள்;இன்றைய 12 வயது சிறுமி போன்ற தோற்றத்தில் இருக்கும் மனோன்மணி என்ற ஆதி பரபிரம்ம சக்தி ஆவாள்.இவளுக்கு மேலே யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை;
ஆக மனிதன் என்பவன் தெய்வமாகலாம்;எப்படி ஸ்ரீகால பைரவரை வழிபாடு செய்வதன் மூலமாக!!!
மும்மூர்த்திகள்,எமன்,சனீஸ்வரன் முதலான நவக்கிரகங்கள்,வானில் இருக்கும் நட்சத்திரங்கள்,பஞ்ச பூதங்களையும் நிர்வாகித்து வரும் பஞ்சபூத தேவதைகள் என அனைவருமே மனிதர்களாக பல கோடி ஆண்டுகள் வாழ்ந்து பலவிதமான புண்ணிய காரியங்களைச் செய்து இந்த நிலைகளை எட்டியவர்கள் ஆவர்.நம்ப முடியுதா? நம்பாமல் போனாலும் இதுதான் உண்மை!!!
பூமியில் 429,40,80,000 வருடங்கள் ஆனால்,பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகியிருக்கும்;பிரம்மாவுக்கு 100 வயதானதும்,விஷ்ணுவுக்கு ஒரு வயது நிறைவடைந்திருக்கும்;இப்படி விஷ்ணுவுக்கு 100 வயதானதும்,ருத்ரனுக்கு ஒரு வயது நிறைவடைந்திருக்கும்;
ஒரு  பிரம்மாவுக்கு 100 வயதாகி மரணமடைந்ததும்,அஷ்டவக்ரகர் என்னும் சித்தரின் ஒரு வளைவு சரியாகியிருக்கும்;ரோமரிஷியின் உடலில்  இருந்து ஒரு ரோமம் உதிர்ந்திருக்கும்;இதையெல்லாம் உணரக்கூடிய ஆன்மீக ஆற்றல் அல்லது யுக  ஞானம் நம்மில் எத்தனை பேர்களுக்கு இருக்கிறது என நினைக்கிறீர்கள்?
பிரமிப்பாக இருந்தால் தொடர்ந்து வாசியுங்கள்;போரடித்தால் நேரத்தை வீணடிக்காமல் வேறு வேலையில் கவனத்தைச் செலுத்துங்கள்:
பல தடவை மனிதனாகப்பிறந்து,ஒவ்வொரு மனிதப்பிறவியிலும் சிவனே என் அப்பன் என்று இருப்பவர்களும்,ஸ்ரீகாலபைரவரை விடாப்பிடியாக வழிபாடு செய்து வருபவர்களும் பிரபஞ்சத்தில் சிவ கணமாக உருமாறிவிடுவார்கள்;(ஆதிகாலத்தில் மனிதனும் மிருகங்களும் உறவு கொண்டு பிறந்தவைகளே,சித்தர்களிடம் சீடர்களாகி சிவ வழிபாடு செய்து சிவகணங்களாகவும்,விஷ்ணுகணங்களாகவும் உருமாறின என்று ஒரு ரகசியக்கருத்தும் உலாவுகிறது)
இந்தப் பிறவியிலும் இனி வரும் பிறவிகளிலும் ஸ்ரீகாலபைரவரை விடாப்பிடியாக வழிபாடு செய்து வருபவர்களுக்கு அவர்களுடைய முந்தைய ஐந்துபிறவிகளில் செய்த அத்தனை கர்மவினைகளும் தீர்ந்துவிடும்;அவர்களுடைய முந்தைய 71 தலைமுறை முன்னோர்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் வல்லமை ஸ்ரீகாலபைரவர் உபாசனைக்கு உண்டு;ஸ்ரீகாலபைரவரின் உபாசனையை விடவும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் உபாசனை உயர்ந்தது.ஏனெனில்,நவக்கிரக நாயகனாகிய சூரியனின் பிராண தேவதையாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.
பொய் சொன்ன பிரம்மனின் ஐந்தாவது தலையை ஸ்ரீகால பைரவர் கிள்ளியெறிந்த இடமே திருக்கண்டியூர் ஆகும்.இதன் பழைய பெயர் ஆதிவில்வாரண்யம் ஆகும்.நமது அகங்காரத்தை அழித்து ஸ்ரீகாலபைரவரின் பாதத்தில் சரணடைய விரும்புவோர்,இலுப்பைஎண்ணெய்,புங்கை எண்னெய்,நல்லெண்ணெய் போன்றவைகளை கலந்து 8 விளக்குகளில் ஏற்றி வழிபட வேண்டும்;ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இவ்வாறு விளக்குகளை மூலவருக்கு ஏற்றி மூலவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அர்ச்சனையும் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால் திருமணத்தடை நீங்கும்;மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும்.இதனாலேயே திருக்கண்டியூர் இறைவனின் பெயர் பிரமசிரகண்டீஸ்வரர் ஆகும்.அட்டவீரட்டானத்தில் முதல் வீரட்டானம் என்று அப்பர் அடிகளார் தேவாரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இரண்டாவது வீரட்டானத்தின் பெயர் திருக்கோவிலூர் கோவல் நகர் வீரட்டம் ஆகும்.சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு நம்மிடையே உலாவிய கருவூர் சித்தரின் ஆசி மற்றும் வழிகாட்டுதலின் படி ஸ்ரீராஜ ராஜ சோழன் இங்கிருக்கும் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி+சிவானந்தவல்லி என்ற பெரிய நாயகியை வழிபட்டு உலக நாடுகளை வெற்றி கொண்டார்.ஸ்ரீராஜராஜசோழன் பிறந்ததும் இந்த ஊரில் தான்!
 முழுமுதற்கடவுளான கணபதியின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் அகவலை அவ்வையார் இயற்றியதும் இங்கேதான்.
மனதில் தோன்றும் தீய மற்றும் நான் என்ற அகங்காரம் தீர இவரை ஞாயிறு,வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்து வருவது நன்று.
மூன்றாவது வீரட்டானத்தின் பெயர் திருவதிகை ஆகும்.முப்புரங்களைக் கொண்டு தேவருலகத்தை சித்ரவதை செய்த வித்யுமாலி,தாரகாசுரன்,கமலாக்ஷன் என்ற மூன்று அசுரர்களை ஸ்ரீகால பைரவர் அழித்த இடமே திருவதிகை ஆகும்.சமணமதத்துக்கு மதம் மாறிச் சென்ற திருநாவுக்கரசரை ஸ்ரீகாலபைரவர் தடுத்தாட்கொண்ட இடமும் இதுவே!சுந்தர மூர்த்தி நாயனாருக்கு திருவடி தீட்சை கிடைத்த இடமும் இதுதான்.
நமது காமம்,கோபம்,தாபம்(ஏக்கம்) போன்றவைகளை நீக்கி யோக சித்தி,ஞான சித்தி பெற விரும்புவோர் இங்கே புதன்,வெள்ளிக்கிழமைகளில் வந்து தங்கிட வேண்டும்;சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது,செவ்வரளி மாலை போன்றவைகளால் அபிஷேகம் செய்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.புதன் கிழமையன்று பாசிப்பருப்பு சுண்டலை நைவேத்தியமாக படைக்க வேண்டும்;இதன் மூலமாக தீராத வியாதிகள் தீர்ந்துவிடும்.
நான்காவது வீரட்டானத்தின் பெயர் திருப்பறியலூர் ஆகும்.மாயவரத்திலிருந்து(மயிலாடுதுறையும்,மாயவரமும் ஒரே ஊரின் வேறு பெயர்கள்) திருக்கடையூர் செல்லும் சாலையில் எட்டாவது  கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலை வந்தடைந்து திருப்பறியலூர் செல்லும் பாதையை விசாரிக்க வேண்டும்;இங்கிருந்து அரை கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் அமைந்திருக்கிறது.தட்சன் யாகம் செய்த இடமே இந்த கோவிலின் குளமாக அமைந்திருக்கிறது.(சிவாஜி கணேசன் சிவபெருமானாக நடித்த திருவிளையாடல் என்ற திரைப்படத்தை ஒருமுறை பார்க்கவும்)பூர்வ ஜன்ம தோஷங்களை நீக்கவும்,தீராத கடன் தொல்லை நீங்கவும் சந்தானாதித் தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது,செவ்வரளி மாலையோடு வருகை தந்து அபிஷேகமும்,அர்ச்சனையும் செய்ய வேண்டும்;இந்தக் கோவிலில் ஒரு மணி நேரமாவது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று மஞ்சள் பட்டுத்துண்டு விரித்து கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்க வேண்டும்.வில்வ அர்ச்சனையும்,வில்வ அபிஷேகமும் செய்யலாம்.
ஐந்தாவதாக இருக்கும் வீரட்டானம் திருவிற்குடி ஆகும்.இது திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் வழியில் உள்ள திருப்பயந்தங்குடிக்கு அருகில் அமைந்திருக்கிறது.திருப்பயந்தங்குடியிலிருந்து விசாரித்துக் கொண்டே சென்றால் 2  கி.மீ.தூரத்தில் திருவிற்குடியைச் சென்றடையலாம்.இது மேற்கு நோக்கிய திருக்கோவில் ஆகும்.எனவே,இது ஒரு  பரிகாரத் திருத்தலம் என்றே எல்லோராலும் அறியப்பட்டுள்ளது.ஸ்ரீஜலந்தரமூர்த்தியாக அமைந்திருக்கிறார்.
மஹாவிஷ்ணுவாகிய பெருமாளுக்கு சுதர்ஸன சக்கரத்தையும்,அவரது வாழ்க்கைத் துணையாகிய திருமகளையும் ஸ்ரீகாலபைரவர் அருளிய இடம் இந்த திருவிற்குடி ஆகும்.இங்கே ஸ்ரீகாலபைரவரை(மூலவர் தான்) வழிபடுவதால் திருமணத்தடை நீங்கும்.மாதம் ஒரு தேய்பிறை அஷ்டமி வீதம் ஒன்பது தேய்பிறை அஷ்டமிகளுக்கு பொன்னால் ஆன காசு(முடியாதவர்கள் ரூபாய் நாணயங்கள்)காணிக்கையாக தந்தும்,கூடவே சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது,வில்வ தளங்கள்(இலைகள்);செவ்வரளிமாலை கொடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும்;முடிந்தால் தேய்பிறை அஷ்டமிகளுக்கு விரதம்(சாப்பிடாமல் இருந்து “ஓம்ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என்று ஜபித்தல்) இருப்பதும் நன்று.(இங்கு மட்டும் செவ்வரளிமாலையுடன் அல்லது அதற்குப்பதிலாக துளசி மாலையை மூலவருக்கு அணிவிக்கலாம்)
தவிர,27 செவ்வாய்க்கிழமைகளுக்கு இங்கே வந்து மேற்கூறிய பொருட்களுடன் மூலவருக்கு அபிஷேகமும்,நமது பெயரில் அர்ச்சனையும் செய்து முடித்தால் புத்திரபாக்கியத்தை ஸ்ரீகாலபைரவர் அருளுவார்.
தொழிலில் வீழ்ச்சியை நோக்கிச் செல்பவர்கள்,தொழில் தாம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வளர்ச்சி இல்லாதவர்கள் 16 தேய்பிறை அஷ்டமிகளுக்கு அல்லது 16 வெள்ளிக்கிழமைகளில் வரும் இராகுகால நேரத்தில்(காலை 10.30 முதல் 12 மணிக்குள்) மேற்கூறிய பொருட்களுடன் அபிஷேகமும்,அர்ச்சனையும் செய்து வந்தால் தொழிலில் படிப்படியான அதே சமயம் உறுதியான வளர்ச்சியை அடைவதை கண்கூடாகக் காணலாம்;பலருக்கு இது போல நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஆறாவது வீரட்டானம் வழுவூர் ஆகும்.இந்த ஊரானது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் எட்டாவது கி.மீ.தூரம் சென்றதும்,வலதுபுறம் செல்லும் சாலையில் திரும்ப வேண்டும்.அப்படித் திரும்பி அரை கி.மீ.தூரம் சென்றால் வழுவூர் வந்துவிடும்.இங்கே தான் ஐயப்பன் அவதரித்தார்;கிருத்திவாஸர் என்ற பெயரில் ஸ்ரீகாலபைரவர் அருளாட்சிபுரிந்து வருகிறார்.
 தியானம்,தவத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்டாமல் தவிப்பவர்கள் மாதம் ஒரு திருவாதிரை நட்சத்திர நாள் வீதம் பத்து மாதத்திற்கு வர வேண்டும்;வந்து அந்த நாளில் அமையும் இராகு  காலத்தில் இந்த கோவிலினுள் அமைந்திருக்கும் மூலவரின் முன்பாக அல்லது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியின் முன்பாக மஞ்சள் பட்டுத் துண்டின் மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து
“ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ” என்று ஜபிக்க வேண்டும்;அல்லது நாம் எந்த விதமான தீட்சை வாங்கியிருக்கிறோமோ,அதே விதமான தீட்சைப்படியும் தியானிக்கலாம்;இதுவும் செய்ய இயலாதவர்கள் இந்த ஊரில் தங்கி,கோவிலை நோக்கி தமது அறையில் அமர்ந்து இராகு கால நேரம் முழுவதும் ஜபித்து வர வேண்டும்.
திருவாதிரை நட்சத்திர நாட்களில் வர இயலாதவர்கள்,வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் அல்லது அமாவாசை நாளில் வந்து தியானிக்கலாம்.மனக்கட்டுப்பாடு இல்லாதவர்களும்,தன்னை  கட்டுப்படுத்திட இயலாதவர்களும் இந்த முயற்சியை ஆரம்பிக்காமல் இருந்தாலே நல்லது;(வெட்டிப்பந்தாவுக்கு ஆரம்பித்து பைரவரிடம் கடி வாங்காமல் இருப்பதே உத்தமம்),அசாத்திய மனக்கட்டுப்பாட்டுடன் தியானம் செய்பவர்கள்,பத்தாவது நாளில் அல்லது அதற்குள்ளாகவே தியானத்தில் ஸ்ரீகாலபைரவ அருளைப் பெறுவதோடு,அதன்பிறகு இந்த உலகில் எங்கே சென்று தினசரி தியானம் செய்தாலும் அதில் கிடுகிடு முன்னேற்றத்தை எட்டுவார்கள்.
மேலும் 14.12.2012 வரை அஷ்டமச்சனியில் அவதிப்படும் மீன ராசிக்காரர்களும்,ஜன்மச்சனியில் அவதிப்படும் துலாம் ராசிக்காரர்களும் எட்டு மாதாந்திர சனிக்கிழமைகளுக்கு  இங்கே வந்து ஸ்ரீகால பைரவர் சன்னதியில் எட்டு நல்லெண்ணெய் இரும்புக் கிண்ணத்தில் தீபமேற்றி வழிபாடு செய்து வந்தால் சனியின் தாக்கம் தீரும்.இதையே கன்னி,மேஷம்,விருச்சிகம்,கடகம் ராசிக்காரர்களும் செய்து வர சனியின் வெவ்வேறு தாக்கங்கள்(வாக்குச்சனி,கண்டச்சனி,விரரயச்சனி, அர்த்தாஷ்டமச்சனி) தீர்ந்துவிடும்.
ஏழாவது வீரட்டானமாகிய திருக்குறுக்கை ஆகும்.மயிலாடுதுறையிலிருந்து மணல் மேடு செல்லும் சாலையில் கொண்டல் என்ற இடத்தைச் சென்றடைய வேண்டும்.அங்கே வந்து திருக்குறுக்கை செல்லும் பாதையை விசாரித்து 3 கி.மீ.தூரம் பயணித்தால் திருக்குறுக்கையை அடையலாம்.வழுவூருக்கு சொன்ன அத்தனை வழிபாட்டு மற்றும் அபிஷேக  முறைகளும் திருக்குறுக்கைக்கும் பொருந்தும்.
எட்டாவது வீரட்டானம்  திருக்கடையூர் ஆகும்.இதன் பழைய பெயர் வில்வாரண்யம் ஆகும்.நல்ல ஆன்மீக குருவை அடைய விரும்புவோர் இங்கே மாதம் ஒரு திருவாதிரை அல்லது வளர்பிறை அஷ்டமி அல்லது அமாவாசைக்கு வர வேண்டும்;வந்து ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவற்றால் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்;வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும்;வில்வம் கிடைக்காத நாட்களில் செண்பகப்பூக்களால் அர்ச்சனை செய்யலாம்;இப்படி தொடர்ந்து எட்டு நாட்களுக்கும் அபிஷேகமும்,அர்ச்சனையும் செய்தால் நமக்குத் தகுந்த ஆன்மீக குரு கிடைப்பார்;அப்படி நமக்கு அமையும் ஆன்மீக குரு சித்தராகவும் கூட இருக்கலாம்;
அமாவாசை அன்று பவுர்ணமி என்று சொன்னாரே அபிராமி பட்டர்! அவரது அன்பான துதியைக் கண்டு ,அமாவாசையையே பவுர்ணமியாக மாற்றிய பிரபஞ்ச அன்னை அபிராமி ,அமிர்தகடேஸ்வரருடன் இங்கே இருந்துதான் அருள்பாலித்து வருகிறார்.
இந்த அட்ட வீரட்டானங்களை ஸ்ரீபைரவ வழிபாட்டுப்பயணமாகச் செல்ல விரும்புவோர்,ஏதாவது ஒரு வளர்பிறை அஷ்டமியன்று பயணிக்கத் துவங்க வேண்டும்;அவ்வாறு துவங்குவதற்கு முந்தைய 14 ஆம் நாளிலிருந்து தாம்பத்தியத்தையும்,காம நடவடிக்கைகளையும் நிறுத்தி விட வேண்டும்;உணவில் அசைவத்தை தவிர்க்க வேண்டும்;வளர்பிறை அஷ்டமியன்று துவங்கும் இந்த அட்டவீரட்டானப்பயணத்தை ஒன்பது நாட்களுக்கு தொடர வேண்டும்;
இந்த ஒன்பது நாட்களுமே ஆண்கள் பனியன் அணிவதைத் தவிர்க்க வேண்டும்;காலையும்,இரவும் ரொட்டியும் பசும்பாலும் உணவாக சாப்பிட வேண்டும்;மதியம் வழக்கமான சைவ உணவை சாப்பிடலாம்;இந்த ஒன்பது நாட்களில் வரும் புதன்கிழமையன்று அட்டவீரட்டானங்களில் ஆட்சி புரியும் ஸ்ரீகாலபைரவருக்கு(மூலவருக்கு) நைவேத்தியமாக பாசிப்பருப்பு சுண்டலை படைக்க வேண்டும்;ஒவ்வொரு வீரட்டானத்திலும் அபிஷேகமும்,அர்ச்சனையும் முடித்தப்பின்பு,மூலவரை 16 சுற்றுக்கள் சுற்றி வர  வேண்டும்;அவ்வாறு சுற்றி வரும்போது,ஒவ்வொரு மூலையிலும் ஒரு நிமிடத்துக்குக் குறையாமல் நமது கோரிக்கையை நினைத்து வேண்ட வேண்டும்;ஒவ்வொரு சுற்றையும் மிக மெதுவாக சுற்ற வேண்டும்;இவ்வாறு முறைப்படி செய்தால்,ஸ்ரீகால பைரவரின் அருட்பார்வைக்குள் நாம் வந்துவிடுவோம்;அட்டவீரட்டானப்பயணமும் இனிதாக அமையும்.
ஆதாரம்:பைரவ ரகசியம் பகுதி1,எழுதியவர்:காகபுஜண்டர் ஆசி பெற்ற தருமலிங்கசுவாமிகள்;                   வெளியீடு:காகா ஆஸ்ரமம்,திருவண்ணாமலை
வழிபாட்டு உபதேசம்:நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்!!!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment