Monday, October 7, 2013

திருவதிகை வீரட்டானத்தின் தனிச்சிறப்புகள்!!!


பலாப்பழத்துக்குப் புகழ் பெற்ற பண்ருட்டி மாநகரத்தின் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் முதல் வீரட்டானமே திருவதிகை ஆகும்.இந்தக் கலியுகத்திலும் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வந்து செல்லும் ஓரிரு வீரட்டானங்களில்(திருக்கடையூர்,திருக்கோவிலூர்) இதுவும் ஒன்று!

பெரும்பாலான சிவபக்தர்களுக்கு தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம் என்று மட்டுமே தெரியும்.அட்டவீரட்டானங்களில் இதுவும் ஒன்று என்பது தெரியாது என்பது கொடுமையான உண்மையாகும்.
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
   மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
   வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி
பண் துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
   பார்முழுதும் ஆய பரமா போற்றி
கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய் போற்றி
   கார்கெடிலம் கொண்ட கபாலீ போற்றி  (அப்பர்)

கெடில நதிக்கரையில் அமைந்திருக்கும் வீரட்டானம் இந்த திருவதிகை ஆகும்.தேரும் சாரதியும் படைக்கலனும் இல்லாமல் எல்லாம் வல்ல பரமேஸ்வரன் புன்னகையாலேயே புரம் எரித்ததால் கையில் இருந்த ஒரே ஆயுதமான அம்பும் மிக அதிகமாக இருந்ததால் புரம் எரிந்து விழுந்த ஸ்தலம் திரு அதிகை என்று பெயர் பெற்றது.இதனாலேயே பரமேஸ்வரனுக்கு அதிகன்,அதியன்,விரியூர் நக்கன்,நக்கன்,நக்கீரன்(நக்க+ஈரன்),பேரெயில் முறுவலான்,திரிபுராரி,திரிபுரசம் காரி,திரிபுராந்தக மூர்த்தி என்று திருப்பெயர்கள் உண்டாயின.


சமுதாயத்தில் தங்கள் தங்கள் இடத்தில் இருந்து தத்தம் தொழிலைச் செய்து பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவிதமான இன்ப துன்ப நிகழ்ச்சிகளிலும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து ஒற்றுமையாக அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த நால்வகைச் சாதியினரிடையே பிரிவினையை உண்டாக்கிச் சமுதாயத்தைப்பிளவுபடுத்தியதாலேயே பவுத்த மதத்தைத் தோற்றுவித்த நாத்திக சித்தார்த்தனுக்கு புத்தன் என்று பெயர் அமைந்தது;தர்க்கம் செய்து மற்றவர்களின் மனதைக் கெடுப்பதால் பவுத்தர்களுக்கு தர்க்கவாதிகள் என்று பெயர்.

தருக்க சாத்திரத்தவர்கள் சொல் இடுக்கண் வரும் மொழி

 என்று மூன்று வயதிலேயே மூன்று காலமும் உணர்ந்த தெய்வ மழலை திருஞான சம்பந்தப்பெருமான் தர்க்கவாதிகள்களாகிய பவுத்தர்களின் துன்பம் தரும் பேச்சினைக் காட்டுகின்றார்.


நாராணன் நடித்த எழுவாய்த் தருக்கத்து
அறிவு நிலை போகி அருச்சனை விடுத்த
வெள்ள முரண் அரக்கர்         (கல்லாடம்)


என்று புத்தனாக அதாவது கலகக்காரனாகச் சென்று மஹாவிஷ்ணு செய்த கலகத்தினால் முப்புராதியர்கள் சிவபூஜையை விடுத்தனர்.அப்பொழுதும் பறக்கின்ற மூன்று கோட்டைகளையும் ஓரிடத்தில் ஒன்று  கூட்டி ஒரு சேர அழிக்கும் வல்லமை யாரிடமும் இல்லை;பல வகையிலும் முயற்சி செய்து தோல்வியுற்ற பிரம்மன்,விஷ்ணு முதலான தெய்வங்களும் இந்திரன் முதலான தேவர்களும் கெடில நதிக்கரையில் சரக்கொன்றை மரத்தடியில் லிங்கப் பரம்பொருளைப் பிரதிட்டை செய்து வழிபட்டனர்;பறந்து பறந்து அச்சத்தைத் தருகின்ற மூன்று கோட்டைகளையும் அழித்தருளுமாறு வேண்டித் தொழுதனர்.தாயும் தந்தையுமாகத் திகழும் ஈசனன பிரம்மா,விஷ்ணு இந்திரன் முதலானோர் இன்னிசை பாடிக் காலையும் மாலையும் மலர் தூவிக் கை கூப்பி தொழுது வழிபட்டுத் தங்களை காத்தருளுமாறு வேண்டினர்.
அன்னே என் அத்தா என்று அமரரால் அமரப்படுவானை(சுந்தரர்)
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி
கடிமலர்கள் பல தூவிக் காலை மாலை
இந்திரனும் வானவரும் தொழ
விரிகொன்றை விண்ட தொடையலான்(சம்பந்தர்)
என்று தேவர்களின் சிவபூஜையைத் தெய்வீகத் தேவாரம் சிறப்பிக்கின்றது.
சீதையின் தந்தையான ஜனகரின் அரண்மனையில் பூஜிக்கப்பட்டு வந்த இந்த வில்லை மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமன் எடுத்துத்  தன் வல்லமையைக் காட்டியபோது அது உடைந்து போனதே தவிர,வளையவில்லை;ஏனெனில்,அந்த  சிவதனுசு கல்லால் செய்யப்பட்டதாகும்.கல்லால்  ஆன வில்லை எப்படி வளைக்க முடியும்?


நந்தித் தேவர் ரிஷப வாகனம் ஆவதற்கு முன்பும் பிள்ளையார்,முருகன் ஆகியோர் பிறப்பதற்கு முன்பும் நடைபெற்ற,கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த அருட் செயலே திரிபுரம் எரித்த ஸ்ரீகால பைரவரின் வீரச் செயலாகும்.திரிபுரத்தை எரித்த இடமே திருவதிகை ஆகும்.
இப்போது உள்ள நான்முகம் கொண்ட பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு முன்னர் பல ஊழிகளுக்கும் முற்பட்டு,மிகப் பழைமையான பிரம்மா விஷ்ணுக்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த வீரச் செயலே திரிபுரம் எரித்தது!

திரிபுர தகனத்தின் தொன்மையை
எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரி பிழைத்துக்
கண்ணுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின்
எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள் நோக்கம்


என்று ஓங்காரம் உணர்ந்த மாணிக்க வாசகப் பெருமான் மிக அழகாகக் காட்டுகிறார்.அப்படியிருக்க இந்தக் கலியுகத்தில் பிற்காலத்தில் இவ்வற்புத வீரத் திருவிளையாடலை நாடகமாக்கியவர்கள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளின் தன்மையைப் புரிந்து கொள்ளாமல்,பக்தியும் சிரத்தையும் இல்லாமல்,திரிபுர தகனம் நடந்த காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் தங்கள் மனம் போனபடி நாத்திகப்போக்கில் பிள்ளையாரையும் சேர்த்து அவரை தீய சக்தியாக காட்டி எழுதினர்.


பிள்ளையார் என்ற தெய்வமே இல்லாத காலத்தில்,புன்னகை புரிந்த பரமனின் திருவடி தீண்டப்பட்ட அளவிலேயே தேர் அச்சு முறிந்து விழுந்து திரிபுரமும் எரிந்து சாம்பலாகியிருக்கும் போது நாடகக் கலைஞர்கள் சர்வேஸ்வரனைத் தேரின்  மேல் ஏற்றி அமர வைத்து பிள்ளையாரைக் கொண்டு அச்சு முறித்துள்ளனர்.
புன்னகையால் புரம் எரித்த வீரட்டேஸ்வரர் பதினாறு பட்டை லிங்கப் பரம்பொருளாகக்  கர்ப்பக் கிருகத்தில் கருணை பொங்கக் காட்சி அளிக்கிறார்.

சமண மதத்திற்கு மாறிய திருநாவுக்கரசரை சூலை நோய் மூலமாக ஆட்கொண்டு,மீண்டும் சைவத்துக்கே மாற்றியவர் இந்த திருவதிகை வீரட்டேஸ்வரர்;

சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே
சாவாமே காத்து என்னை ஆண்டாய்(திருநாவுக்கரசர்)

ஆன்மீகக்கடலின் அனுபவக்குறிப்பு: அஷ்ட கர்மாக்களில் தேர்ச்சி பெறும் நிலையை எட்டியவர்கள் தன்னையறியாமலேயே திருவதிகைக்குச் செல்லும் சூழ்நிலை உண்டாகும்.இந்த சூழ்நிலையானது பல கோடி ஆண்டுகளாக பல சித்தர்களுக்கும்,சராசரி மனித நிலையிலிருந்து சித்தநிலையை  எட்டும் நிலைக்கு வந்தவர்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது;அப்படி திருவதிகை வீரட்டேஸ்வரரை வழிபடச் செல்லும்போது கோவிலுக்குள் எந்த சராசரி மனிதருக்கும் தெரியாத,பல தெய்வீக நிலைகளை அவர்கள் மட்டும் உணர்வார்கள்;சிலபல சிவ தெய்வ சக்திகளை காண்பார்கள்;இதே நிலையை நீங்களும் எட்டவிரும்பினால்,ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது மூன்று ஆண்டுகளும்,அதிகபட்சமாக பத்து ஆண்டுகளும் ஓம்சிவசிவஓம் தினமும் ஜபித்து வர வேண்டும்;அல்லது ஒரு நாளுக்கு அரை மணி நேரம் வீதம் குறைந்தது மூன்று ஆண்டுகள் வரையிலும்,அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரையிலும் ஸ்ரீகால பைரவர் மந்திரஜபம் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர ஜபத்தை ஜபித்திருக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து ஸ்ரீபைரவர் வழிபாடு செய்தாலே சில நொடிகளிலேயே ஸ்ரீகால பைரவர் நமக்கு அஷ்ட கர்மாக்களில் தேர்ச்சியைத் தருவார் என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.முயலுவோமா? இந்த கேடு கெட்ட மனிதப் பிறப்புக்களிலிருந்து தப்பிப்போமா?                          ஆதாரம்:அட்ட வீரட்டானங்கள்


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment