Thursday, October 3, 2013

பைரவ சஷ்டி கவசம்!!!





வணங்குவோர்க்கு வாழ்வு தரும்
வாழ்த்துவோர்க்கு வசதி தரும்
போற்றுவோர்க்கு புகழ் தரும்
தூற்றுவோர்க்கும் இன்பம் தரும்
நினைத்தாலே நிம்மதி தரும்
நீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே!
பக்தர் பரவசமுற பலன் தரும்
பைரவர் திருவடியே கதி
சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர்
திருஷ்டியால் காக்கும் காலபைரவர்
அகிலம் போற்றும் அஷ்ட பைரவர்
அன்பால் காக்கும் ஆனந்த பைரவர்
சொர்ணம் தருவார் சொர்ண பைரவர்
சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்
சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர்
சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்
வருக வருக வடுகபைரவா வருக
வளம்தர வருக வஜ்ரபைரவா வருக
வருக வருக உக்கிரபைரவா வருக
உவகைதர வருக உலகபைரவா வருக
பைரவி போற்றும் பைரவா வருக
ஆனந்த நடனா ஆனந்த பைரவா வருக
ஆணவம் அழிக்கும் ஆக்ரோஷ பைரவா வருக
ஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக
காலத்தின் நாயகா கால பைரவா வருக
கலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக
நலம் தரும் நரசிங்க பைரவா வருக
நாளும்காக்கும் நாக பைரவா வருக
கோபம் போக்கும் கோவிந்த பைரவா வருக
ஞாலம் போற்றும் ஞானபைரவா வருக
தாகம் தீர்க்கும் தராபாலன பைரவா வருக
மோகம் போக்கும் முண்டனப்பிரபு பைரவா வருக
அவலம் போக்கும் அஸிதாங்கபைரவா வருக
குவலயம் காக்கும் குரோதன பைரவா வருக
உலகம் புரக்கும் உன்மத்த பைரவா வருக
திருவருள் புரியும் திகம்பர பைரவா வருக
சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக
ருசியான  உணவுதரும் ருருபைரவா வருக
சந்தோஷம் தரும் சம்கார  பைரவா வருக
பித்தம் போக்கும் பீஷணபைரவா வருக
வருகவருக வரமருளும் வரதபைரவா வருக
தருகதருக தாராளமாய் தரும் தயாள பைரவா வருக
பருகபருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக
பெருகபெருக செல்வம் தரும் பிசித பைரவா வருக
நடனம் புரியும் நர்த்தன பைரவா வருக
சதிராடும் சர்ப்ப பைரவா வருக
ஆட்டமாடும் ஆனந்த பைரவா வருக
பாட்டுபாடும் பர்வத வாகன பைரவா வருக
சுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்
முப்புரமெரி செய் முக்கண்ணும்
முகவழகு கூட்டும் நாசியும்
சீற்றம் காட்டும் சிங்க பல்லும்
இடது செவியில் பொன்னாபரணமும்
இன்பமூட்டும் இள நகையும்
அழகிய தோளும் அற்புத அழகும்
மார்பில் பஞ்சவடி தரும் எழிலும்
எழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்
இளமை காட்டும் வாலிபமும்
மணி ஓசை தரும் கிண்கிணியும்
கையிலே கபாலமும் சூலமும்
தோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்
ஏற்றம் தரும் தோற்றமாய்
பத்தினிப் பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்
பரவசம் தர வருகவே வருகவே
மெய் உணவு கேட்ட மெய்யடியாரே
உய்ய வழிகாட்டும் உத்தமரே
பொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே
சேய் மகிழ விரைந்து வருவீரே
ஆணவ பிரமன் ஆர்ப்பரிக்க
அன்னை பார்வதி மனம் நொந்திடவே
ஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிகிளம்பி
அச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்
தலையொன்றை துண்டான பிரமனும் சாபமிட்டான்
தாயுமானவன் சிரித்தபடி ஏற்றான்
கையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றடவே
பூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே
கற்றவர் போற்றும் காசியாம்
பாவம் போக்கும் பத்ரிநாத்தாம்
எங்கும் திரிந்தான் பரமன்
காசியிலே கபாலம் கையை விட்டுபோனதே
மூலப்பொருள் யாரென ஓர் தேடல் நடந்திட்ட வேளையிலே
ஜீவப் பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே
பொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்
கிள்ளியெடுத்திட்டான் அத்தலைதனை
வீடு தேடியொரு வேளையிலே
பிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே
ஐந்தில் ஒருதலையே தூற்றியதாம்
தூற்றிய துஷ்டதலையினை கிள்ளிட்டான் ஈசனுமே
எத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்
அகங்காரம் கொண்டோர் ஆணவமுள்ளோர்
அழிந்திடத் தான் வேண்டுமென்றே
பிரம சிரம் துண்டித்தான் எம்பிரானே
பத்ரிநாத்திலே பிரம்மகபாலம் தெறித்துவிழுந்ததாம்
காசியிலே கபாலம் கையைவிட்டகன்றதாம்
கண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்ததாம்
மலையனூரில் பரமேஸ்வரின் காலில் மிதிபட்டதாம்
எல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிட்டார் பைரவர்
முனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்
அன்னமளப்பவனுக்கே அன்னமிட்டாள் அன்னபூரணி
ஆண்டியாய் அகிலமெலாம் சுற்றிவந்தார் பரமனே
இரத்தபிட்சை பெற்றிட வைகுண்டமேகினார்
இடையே வந்த விஸ்வக்சேனர் சூலத்தில் சிக்கிட்டார்
விஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்
கபாலமே நிறையவில்லை மயங்கிட்டார் மகாவிஷ்ணு
கண்ணான கணவன் மயங்கிவிழவே
கதறி அழுதிட்டாள் மகாலட்சுமி
கணவனுயிரை தருமாறு சாவித்திரியானாள்
மணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ
மாண்டவர் மீண்டால் மகிழ்வாரன்றோ
மாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்
பத்து அவதாரமெடுத்து பகைவரையழித்தே
இரத்த மளித்து கபாலம் நிரப்பிடுவேன் என்றார்.
அந்தகாசுரனென்னும் புதல்வனும் அசுரனானான்
அகிலத்தையே ஆட்டி படைத்தான்
அன்னையுருவு கண்டு ஆசைப்பட்டான்
அவனை அழித்து அல்லல் அகற்றினார்
மணிமல்லர்கள் செய்திட்ட கொடுமை அதிகம்
இனியொரு விதி செய்தே மக்களை காக்க
கனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே
மதிகெட்டவர்களை அழித்திட்டார்.
முண்டகன் என்றொரு கொடியவன்
கண்டபடி தந்தான் துன்பங்களை
அண்டம் நடுங்க ஆட்டிப்படைத்தான்
பிண்டமாய் வீழ்த்தினார் பைரவரே
எண்ணங்களிலே மாற்றம் தரும்
இதயத்திலே எழுச்சி தரும்
அடியவருக்கு அருள்புரியும்
பைரவ புராணத்தை பாடிடுவோம்
காலத்தின் நாயகன் கால பைரவனென்றே
ஜோதிடமும் ஆன்மீகமும் கூறிடுமே
விதியும் அவனே வெற்றியும் அவனே
வேதமும் அவனே வேதநாயகனும் அவனே
அட்டவீரட்ட தலங்கள் அற்புதத்தலங்கள்
ஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்
அம்பலவாணன் பைரவரூபமான இடங்கள்
அகிலத்தோரை காத்திட தலங்கள்
தெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்
ஐந்துமுக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்
எத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரோ தெய்வம்
அத்துணை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே
எங்கும் பைரவர் எதிலும் பைரவர்
என்றோதி மகிழும் நெஞ்சோர் வாழ்க
ஐந்து தலையரசே ஆகாசபைரவரே
அல்லல் நீங்கிட வருவீரே
தலைதனை தராபாலன பைரவர் காக்க
கேசந்தனை கேசர பைரவர் காக்க
நெற்றிதனை நிர்பய பைரவர் காக்க
கண்ணிரெண்டும் கதாதர பைரவர் காக்க
செவிதனை ஸ்வஸ்கந்த பைரவர் காக்க
நாசிதனை நர்த்தன பைரவர் காக்க
வாய்தனை வஜ்ர அத்த பைரவர் காக்க
நாக்கினை நானாரூப பைரவர் காக்க
கழுத்தினை கராள பைரவர் காக்க
தோள்தனை திரிநேத்ர பைரவர் காக்க
கைகளிரெண்டும் கபாலபூடண பைரவர் காக்க
மார்பினை மந்திரநாயக பைரவர் காக்க
விலாவினை விருபாச பைரவர் காக்க
வயிறுதனை விஷ்ணு பைரவர் காக்க
இடுப்பினை இரத்தபிட்சா பைரவர் காக்க
மறைவுப் பகுதிதனை மங்கள பைரவர் காக்க
தொடைகளிரெண்டும் திரிபுராந்தக பைரவர் காக்க
முழுங்கால்களை முத்தலைவேல் பைரவர் காக்க
பாதமிரண்டும் பரம பைரவர் காக்க
விரல்களைத்தும் விஜய பைரவர் காக்க
இன்னல்தரும் இதயநோய் போக்குவாய் போற்றி
சங்கடம் தரும் சர்க்கரைநோய் போக்குவாய் போற்றி
சீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய் போற்றி
உயிர்க்கொல்லி நோய் போக்குவாய் போற்றி
உன்மத்தம் போக்குவாய் போற்றி
குருட்டை நீக்குவாய் போற்றி
கர்ப்பதோஷம் போக்குவாய் போற்றி
உஷ்ணரோகம் போக்குவாய் போற்றி
ஒவ்வாமை அகற்றுவாய் போற்றி
இளைப்பு நோய் நீக்குவாய் போற்றி
சளித்தொல்லை போக்குவாய் போற்றி
சருமத்தொல்லை நீக்குவாய் போற்றி
விஷபயம் போக்குவாய் போற்றி
பொய்சூது பொல்லாங்கு நீக்குவாய் போற்றி
விலங்குகள் தொல்லை போக்குவாய் போற்றி
பகைமையை அழிப்பாய் போற்றி
உடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய் போற்றி
அன்னையின் அகம் மகிழ்விப்பாய் போற்றி
தந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய் போற்றி
முன்னோர்க்கும் நலம்தருவாய் போற்றி
நல்லதொரு துணைதருவாய் போற்றி
துணையின் துன்பம் களைவாய் போற்றி
சந்தானபாக்கியம் தருவாய் போற்றி
புத்திரதோஷம் போக்குவாய் போற்றி
கடன் தொல்லை நீக்குவாய் போற்றி
களிப்புடன் வாழ்விப்பாய் போற்றி
என்றும் புகழ் தருவாய் போற்றி
ஏற்றம் பெற செல்வம் தருவாய் போற்றி
பொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய் போற்றி
பில்லி சூன்யக் கொடுமை போக்குவாய் போற்றி
கெட்டவர் சதித்திட்டம் அழிப்பாய் போற்றி
பேய்,பிசாசு கொடுமை தீர்ப்பாய் போற்றி
சேட்டைகள் போக்கும் சேத்திர பாலனே வருக
பாசமிகு பைரவமூர்த்தியே வருக
காலனைவிரட்டும் கால பைரவா வருக
ஸமயோசித புத்தி தரும் ஸமயபைரவா வருக
கயவர்களுக்கு காலனாகும் காலாக்கினிபைரவா வருக
பாவிகளையழிக்கும் பாதாள பைரவா வருக
சுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவா வருக
சந்ததிதரும் சந்தான பைரவா வருக
ஆபத்தை நீக்கும் ஆதிபைரவா வருக
சிவபக்தியூட்டும் சிவஞான பைரவா வருக
வெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவா வருக
நிராயுதபாணிக்கும் நிம்மதிதரும் சூலாயுதபாணி பைரவா வருக
சுற்றம் காக்கும் சுவேட்சர பைரவா வருக
தடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவா வருக
விசாலமனம் தரும் விசாலாக்ஷ பைரவா வருக
ஸம்ஸார வாழ்வுதரும் சம்ஸார பைரவா வருக
குறைவிலா செல்வம் தரும் குபேர பைரவா வருக
கல்வி உயர்வு தரும் கபால பைரவா வருக
மேன்மை தரும் மேகநாத பைரவா வருக
சோதனை நீக்கும் சோமசுந்தர பைரவா வருக
கற்பனை வளம் தரும் மனோவேக பைரவா வருக
அவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவா வருக
சங்கடம் நீக்கும் சசிவாகன பைரவா வருக
பூதபைசாசத்தினை விரட்டும் சர்பூத பைரவா வருக
தண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக
காதலில் வெற்றிதரும் காமராஜ பைரவா வருக
லாபம் தரும் லோகபால பைரவா வருக
பூமிசெல்வம் தரும் பூமிபால பைரவா வருக
ஆற்றல் தரும் ஆகர்ஷண பைரவா வருக
கண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்டபைரவா வருக
அந்தகரையும் காக்கும் அந்தக பைரவா வருக
தட்சணை பெறுவோர்க்குமருளும் தட்சிணபித்தித பைரவா வருக
வித்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவா வருக
அதிர்ஷ்டம் தரும் அதிஷ்ட பைரவா வருக
பிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக
குலம் காக்கும் குல பைரவா வருக
சர்வமும் தரும் சர்வக்ஞ பைரவா வருக
ஈனனையும் காக்கும் ஈசான பைரவா வருக
சிம்மமாய் வாழ்விக்கும் சிவராஜ பைரவா வருக
சீறிய சிந்தனைதரும் ஸீதாபாத்ர பைரவா வருக
கர்மவினை போக்கும் காலநிர்ணய பைரவா வருக
குற்றம் களையும் குலபால பைரவா வருக
சடுதியில் காத்திடும் வடுகநாத பைரவா வருக
கோரவடிவு மாற்றும் கோரநாத பைரவா வருக
புத்திதரும் புத்திமுக்தி பலப்ரத பைரவா வருக
லட்சுமி கடாட்சம் தரும் லலித ராஜபைரவா வருக
நிறைவான வாழ்வுதரும் நீலகண்ட பைரவா வருக
சிக்கல் தீர்க்கும் சீரிட பைரவா வருக
கஷ்டத்தில் காத்திடும் காலராஜ பைரவா வருக
பிதுர்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக
மண்டலம் போற்றும் ருண்டமால பைரவா வருக
விருப்பமானவற்றை தரும் விஸ்வரூப பைரவா வருக
சலியாத வாழ்வுதரும் பிரளய பைரவா வருக
கத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ரபைரவா வருக
பட்டினிபோக்கும் பயங்கர பைரவா வருக
எதிர்ப்பழிக்கும் மகாரவுத்திர பைரவா வருக
சோபித வாழ்வுதரும் சோமராஜ பைரவா வருக
பீடுநடைபோட வைக்கும் பிரேசத பைரவா வருக
பூர்வீக சிறப்புதரும் பூதவேதாள பைரவா வருக
ரத்தபாசம் தரும் ரத்தாங்க பைரவா வருக
பசிக்குணவு தரும் பராக்கிரம பைரவா வருக
வினைகள் தீர்க்கும் விக்னராஜ பைரவா வருக
நிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாணபைரவா வருக
சக்திக்கும்  பாதியுடல் தந்த சச்சிதானந்த பைரவா வருக
அட்டமாசித்தி தரும் ஓங்கார பைரவா வருக
பைரவப்ரியர் போற்றும் சிவபைரவா வருக
பண்ணாரிதாசனும் போற்றும் பாலபைரவா வருக
ராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜபைரவா வருக
முந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவா வருக
பார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்
பக்தரைக் காக்கும் நல்லதொரு கவசம்
சண்முகசுந்தரம் பாடிய கவசம்
நவபைரவர் அருளும் நற்கவசம்
பைரவ சஷ்டி கவசம் இதனை
செப்பிடுவோர் ஜெகமாள்வர்
ஓதுவோர் ஓங்குபுகழ் பெறுவர்
கூறுவோர் கூற்றனை வெல்வர்
வாசிப்போர் வாழ்வுதனை பெறுவர்
பாடுவோர் பார்போற்ற பவனி வருவர்
சொல்வோர் சொத்துக்களை பெறுவர்
கேட்போர் கேடான நோய் நீங்கிடுவர்
சரணம் சரணம் பைரவா சரணம்
சரணம் சரணம் ஸ்ம்ஹார சரணம்
சரணம் சரணம் திருவடி சரணம்

இயற்றியவர்:பண்ணாரிதாசன் என்ற சோம.சண்முகசுந்தரம்,சேலம்

ஓம்சிவசிவஓம்

ஸ்ரீ பைரவர் 108 போற்றி



தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.

ஓம் பைரவனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் அஷ்டரூபனே போற்றி
ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
ஓம் அயன்குருவே போற்றி
ஓம் அறக்காவலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் ஆலயக்காவலனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
ஓம் உக்ர பைரவனே போற்றி
ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
ஓம் எல்லை தேவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் கபாலதாரியே போற்றி
ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
ஓம் கர்வ பங்கனே போற்றி
ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
ஓம் கருமேக நிறனே போற்றி
ஓம் கட்வாங்க தாரியே போற்றி
ஓம் களவைக் குலைப்போனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கால பைரவனே போற்றி
ஓம் காபாலிகர் தேவனே போற்றி
ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
ஓம் காசிநாதனே போற்றி
ஓம் காவல்தெய்வமே போற்றி
ஓம் கிரோத பைரவனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
ஓம் சண்ட பைரவனே போற்றி
ஓம் சட்டை நாதனே போற்றி
ஓம் சம்ஹார பைரவனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் சிவத்தோன்றலே போற்றி
ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
ஓம் சிக்ஷகனே போற்றி
ஓம் சீர்காழித்தேவனே போற்றி
ஓம் சுடர்ச்சடையனே போற்றி
ஓம் சுதந்திர பைரவனே போற்றி
ஓம் சிவ அம்சனே போற்றி
ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்வினை அறுப்பவனே
போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் ÷க்ஷத்ரபாலனே போற்றி
ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
ஓம் தலங்களின் காவலனே போற்றி
ஓம் தீது அழிப்பவனே போற்றி
ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் நவரச ரூபனே போற்றி
ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்வோனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிர்வாணனே போற்றி
ஓம் நிறைவளிப்பவனே போற்றி
ஓம் நின்றருள்வோனே போற்றி
ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
ஓம் பகையளிப்பவனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
ஓம் பால பைரவனே போற்றி
ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
ஓம் பிரளயகாலனே போற்றி
ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
ஓம் பூஷண பைரவனே போற்றி
ஓம் பூதங்களின் நாதனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பைராகியர் நாதனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மகோதரனே போற்றி
ஓம் மகா பைரவனே போற்றி
ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
ஓம் மகா குண்டலனே போற்றி
ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முக்தியருள்வோனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலமூர்த்தியே போற்றி
ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
ஓம் வடுக பைரவனே போற்றி
ஓம் வடுகூர் நாதனே போற்றி
ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
ஓம் வாரணாசி வேந்தே போற்றி
ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
ஓம் விபீஷண பைரவனே போற்றி
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!



சொர்ண ஆகர்ஷணபைரவர் படமும் வழிபாட்டுமுறையும்






சிவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும்;மகாலட்சுமி அல்லது குபேரன் அல்லது பெருமாளை வழிபட்டால் செல்வம் பெருகும்.ஆனால்,இந்த இரண்டுமே ஒரே நேரத்தில் நடைபெற வேண்டுமெனில்,நாம் பைரவர்களில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வேண்டும்.



ஒரே நேரத்தில் நமது பாவங்கள் எனப்படும் கர்மங்கள் நீங்கும்;அதே சமயம் நமது வேலை அல்லது தொழில் மூலமாக வருமானம் பெருகிக் கொண்டே செல்லும்.நேற்று தேய்பிறை அஷ்டமிநாள்.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் எட்டாவது கிலோ மீட்டர் தூரத்தில் தாடிக்கொம்புகிராமம் அமைந்திருக்கிறது.இங்கே அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவில் இருக்கிறது.இந்த கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.காலை 9.30,11.30 மாலை 3.30,5.30 மற்றும் இரவு 7.30க்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேகம் சொர்ண ஆகர்ஷணபைரவருக்கு நடைபெறுகிறது.இதில் கலந்து கொண்டாலே நமது வருமானம் பெருகும்;பாவங்கள் குறைந்து கொண்டே வரும்.



கொடுத்த கடன் திரும்பிவராமல் தவிப்போர்கள்,தொழிலில் கொடிகட்டிப் பறந்துதிடீரென வீழ்ச்சியை நோக்கிப் பயணிப்போர்கள்,வாங்கிய கடனை திருப்பித் தரமுடியாமல் தவிப்பவர்கள்,அரசியலில் மாபெரும் சாதனை செய்ய விரும்புவோர்,முன் ஜன்ம வினைகளால் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்துவிட்டவர்கள் சொர்ண ஆகர்ஷணபைரவரை தொடர்ந்து எட்டுதேய்பிறை அஷ்டமிகளுக்கு இங்கு வந்து வழிபட வேண்டும்.ஒருமுறை வந்ததுமே மாபெரும் முன்னேற்றம் அடைவதை உணரலாம்.



இதைச் செய்ய முடியாதவர்கள் ஆன்மீகக்கடல் முகவரிக்கு  மணி ஆர்டர் அனுப்பி சொர்ண ஆகர்ஷண பைரவரின் ஒரிஜினல் போட்டோவையும் வீட்டிலேயே வழிபடும் முறையையும் பெற்று தினமு 20 நிமிடம் வழிபாடு செய்யலாம்.

ஓம்ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

பதவி, புகழ் தரும் பைரவ தரிசனம்




பதவி, புகழளிக்கும் பைரவ தரிசனம்!குலதெய்வ கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செலுத்த முடியாதவர்களை, ஏதேனும் காரணத்தினால் தீர்த்த யாத்திரை, விரதம் போன்ற அனுஷ்டானங்களை கடைபிடிக்க முடியாதவர்களை, பித்ருக்களுக்கு உரிய நீத்தார் கடனை நிறைவேற்ற இயலாதவர்களை சில தோஷங்கள் பீடிக்கும் என்பார்கள். இதற்குப் பரிகாரமாக சித்தர்கள் சில வழிமுறைகளை நாடியில் கூறியுள்ளனர். அந்த வகையில், அகத்தியர், ‘‘சிதைந்திட்ட சிரார் தமது பெரும் பிணியீயுமப்பா & பிண்டமதனை காலத்தீயாது விடின் வரும் வாட்டம் வம்சத்தையும் அழிக்குமாதலின் ஆதிச் சிவனவன் பைரவ வடிவேந்தி விளங்க யவரை யுரிய காலத்திலாராதித்து விமோசனங் காண்பீரே’’ என்கிறார்.

பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு என்று சொன்ன அகத்தியர் அந்த பைரவர் கோயில் கொண்டிருக்கும் தலங்களையும் விவரிக்கிறார். ‘‘அஞ்சருவிச் சலத்தருகு யடுத்தே வரகலூராம் & காரையான் பட்டியிலுமே நின்ற சோழ மண்டலத்துக் கோட்டைச் செங்கனூராம் முழு மண்டலமே. தோணியப்பனருள் கொண்ட விக்கிரமனும் சுங்காஸ்தமனத்தில் வந்திருந்து அருள் செய்ய சித்தங் கண்டோமே. ஈலுக்குடிவடம் பின்னே சட்டநாதனை கண்டோமே: குறுங்குடி பைரவனை அயனுந்தொழப் பார்த்தோமிது சத்தியமே’’ என்கிறார்.

இப்பாடலின் பொருள்: குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள். காரைக்குடியில் பைரவர். சோழ
புரத்தில் பைரவச்சேசுவரர். அதியமான் கோட்டையில் கால பைரவர். திருச்செங்கோட்டில் பைரவ நாத மூர்த்தி, இலுப்பை குடியில் பைரவ மூர்த்தி, குண்டடத்தில் கொங்கு வடுகநாதன், சீர்காழியில் சட்டநாதர் என்று பக்தர்களுக்கு அருள்பரிபாலிக்கிறார் பைரவ மூர்த்தி. திருக்குறுங்குடி பைரவரை விஷ்ணுவும் பிரம்மனும் இந்திரனும் மற்றும் நவகோள் நாயகர்களும் பூஜித்து வருகின்றனர். அனுதினமும் & கலியுகம் முற்றும் காலம் வரையிலும் வாயுபகவான் இந்த திருக்குறுங்குடி பைரவரை உபாசனை செய்து வருவார் என்கிறது சித்தர் வாக்கு.

வெள்ளிக்கிழமை இரவு பைரவரை தொழுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் சீர்காழியில், ஆடி வெள்ளி இரவு பைரவரை தொழுதால் பில்லி, சூனிய, ஏவல் பாதிப்புகள் அகலும்; தீராத பிணி போகும் என்கிறார் சிவவாக்கியர்.

‘‘கடக மஸ்தமன பொழுததனிலே சுங்கனிருக்க பைரவனை & விக்ரமனை & சட்டமுனியை கை தொழுதக்கால் ஏவலுஞ்சுன்யமும் விலக காணீரே & பெருஞ்செல்வஞ் சேரப்பாரீரே & தீராப் பிணி மடிய நிற்பீரே & மடிந்தார் தமக்காற்று திதிபிண்ட தோஷமுமொருசேர நீங்கி நீடு வாழ்வீரே யல்லால் நீத்தார் தாமுந் நல்லாசி யீவாரே’’ என்கிறார்.
பைரவ பூஜை மகத்தானது. மகிமை வாய்ந்தது. பெரிய பதவிகளையும் புகழையும் அளிக்கவல்லது. செவ்வரளி அல்லது சிவப்பு நிற பூக்களினால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களில் பைரவரை ஆராதனை செய்வதும் பைரவருக்குப் பிடித்த கோதுமை பாயசம் படைத்து, வினியோகம் செய்வதும், இழந்த பொருளை மீட்டுத்தரும் என்கிறது அகத்தியர் நாடி.‘‘போன பொருள் கை கூடும். பகையான உறவும் நட்பாகும். ஆபரணமொடு பேரானந்தமுஞ் சேருமப் பானு வஸ்தமனப்போது பாயஸன்னம் நாட் பண்டத்து படைப்போர்க்கே’’
& பானு வாரம் என்றால் ஞாயிற்றுக்கிழமை; நாட் பண்டம் என்றால், ஞாயிறுக்கு உற்ற தானியம் & கோதுமை.
பைரவர் படத்தை வீட்டில் வடக்குப்புறம் வைத்தால் & வாஸ்து தோஷத்தினால் வரக்கூடிய பீடை அகலும் என்கிறார் காக புஜண்டர்: ‘‘மனையடி யளவிலே யுண்டாகுங் குறையும் பஸ்மமாகுமே & சத் சந்தானங்கூடுமே. குலத் தொல்லை நாசமாகுமே & வைரியரும் விலகியோட வயிரவனை யுத்திரத்திலிடுவீரே.’’ பைரவ பெருமானை தொழுவோம்; பார் புகழ வாழ்வோம்

பைரவர் வழிபாடுகளும்,கிடைக்கும் நன்மைகளும்



வழக்குகளில் வெற்றிபெற உதவும் பைரவர் வழிபாடு



சனிப்பிரதோஷநாட்களில்,பிரதோஷம் நிறைவடைந்ததும்,சிவாலயங்களில் இருக்கும் காலபைரவருக்கு தயிர் அன்னம் படைத்து,தம் பெயருக்கு(வழக்கு இருப்பவரின் பெயருக்கு)அர்ச்சனை செய்ய வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,தயிர்ச்சாதத்தை பிரதோஷத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்குக் கொடுக்க வேண்டும்.வழக்கு முடியும் வரையிலும் இப்படி செய்ய வேண்டும்.(ஆனால்,ஓராண்டு இரண்டு அல்லது மூன்று சனிப்பிரதோஷம் தான் வருமே!)



திருமணத்தடை அகல உதவும் பைரவர் வழிபாடு



வெள்ளிக்கிழமைகளில் வரும் இராகுகாலத்தில் (காலை 10.30 முதல் 12) பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து,புனுகு பூசி,தாமரை மலர் அணிவித்து,அவல் கேசரி,பானகம்,சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு 8 அல்லது 17 அல்லது 26 வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து (சில காரணங்களால் ஓரிரு வெள்ளிக்கிழமைகளில் விடுபட்டாலும்) செய்துவர,மனதுக்குப் பிடித்த (காதலித்திருந்தாலும்) வாழ்க்கைத்துணை அமையும்.



கணவன் மனைவி பிரிவினை தீர உதவும் பைரவர் வழிபாடு



புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6 முதல் 7க்குள் அல்லது மதியம் 1 முதல் 2க்குள் அல்லது இரவு 8 முதல் 9க்குள் பைரவருக்கு வில்வமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வர வேண்டும்.பிரிவினை தீர்ந்து ஒன்றுசேரும் வரையிலும் இவ்வாறு செய்து வரவேண்டும்.



இழந்த சொத்துக்களை/பொருட்களை திரும்பப் பெற உதவும் பைரவர் வழிபாடு



பைரவர் திருமேனியின் முன்பாக,27 மிளகை சிறுதுணியில் சிறு மூட்டையாகக் கட்டி,அகல் விளக்(மண் விளக்கு)கில் வைத்து,நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ,தனது பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வர இழந்த சொத்துக்கள்/பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.



செல்வச் செழிப்பு உண்டாகவும் நீண்டகாலக் கடன் தீரவும் உதவும் பைரவர் வழிபாடு



ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி(இராகு காலத்தில்) பைரவருக்கு உளுந்து வடை,பூசணிக்காய் சமைத்து வீட்டிலேயே பூசிக்கலாம்.(வீட்டில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை மட்டுமே வழிபட வேண்டும்.படம் வேண்டுவோர் ஆன்மீகக்கடல் மின் அஞ்சலைத் தொடர்புகொள்ளவும்)ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை 330 முறை வீதம் ஒராண்டு வரை (52 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு) ஜபித்துவரவேண்டும்.அனுபவத்தில் மூன்று மாதங்கள் ஆனதுமே ,செல்வ வளம் உருவாக ஆரம்பிக்கிறது.

அஷ்ட பைரவர்களும் - அவர்களின் வாகனங்களும்






அஷ்ட பைரவர்கள்:

1.   அசிதாங்க பைரவர்
2.   ருரு பைரவர்
3.   சண்ட பைரவர்
4.   குரோத பைரவர்
5.   உன்மத்த பைரவர்
6.   கபால பைரவர்
7.   பீஷண பைரவர்
8.   சம்ஹார பைரவர்

மேலும், வடுக பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என இரு நிலைகளும் உள்ளன.  வடு பைரவரின் உருவங்களை நான்கு கரங்களுடனும், எட்டு கரங்களுடனும் காணலாம்.


எட்டு பைரவர்களின் வாகனங்கள்:

1.   அசிதாங்க பைரவர் -  அன்ன வாகனம்
2.   ருரு பைரவர் காளை வாகனம்
3.   சண்ட பைரவர் மயில் வாகனம்
4.   குரோத பைரவர் -  கருட வாகனம்
5.   உன்மத்தபைரவர் -  குதிரை வாகனம்
6.   கபால பைரவர் -  யானை வாகனம்
7.   பீஷண பைரவர் -  சிம்ம வாகனம்
8.   சம்ஹார பைரவர் -  நாய் வாகனம்
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

பைரவப் பெருமான் ஒரு அறிமுகம்!!!



உலகத்தில் ஏராளமான மதங்களும்,வழிபாட்டுமுறைகளும் இருக்கின்றன;ஆனால்,ஒவ்வொரு மதத்திலும் ஒரே ஒரு கடவுள்,ஒரே ஒரு மதப் புத்தகம்,ஒரே ஒரு வழிபாட்டுமுறை என்று மட்டுமே இருக்கிறது;நமது இந்து தர்மத்தைத் தவிர!
நமது இந்து தர்மத்தை நமது முன்னோர்கள் ஷண்மத வழிபாடு என்று வகுத்துள்ளனர்.ஆறு விதமான இறைவழிபாட்டுமுறைகளின் தொகுப்பே நமது இந்து தர்மம் என்பது இதற்கான சரியான விளக்கம் ஆகும்.
விநாயகரை வழிபடுபவர்களைக் கொண்ட வழிபாட்டுமுறைக்கு காணபத்தியம் என்று பெயர்;
முருகக்கடவுளை வழிபடுபவர்களை உடைய வழிபாட்டுமுறையை கவுமாரம் என்று அழைக்கிறோம்.
அம்மனை வழிபடும் முறைகளின் தொகுப்பே சாக்தம் ஆகும்.
சூரியனை வழிபடும் வழிபாட்டை சவுரம் என்கிறோம்.
விஷ்ணுவை வழிபடும் முறையை வைஷ்ணவம் என்கிறோம்.

சிவனை வழிபடும் வழிபாட்டுமுறைக்கு சைவம் என்று பெயர்.இந்த வழிபாட்டுமுறையானது உலகில் மனித இனம் நாகரீகமடைந்ததில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது.இன்று மற்ற மதங்களின் தலைமை பீடங்கள் இருக்கும் இடங்களில் கூட இந்த வழிபாடு இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.இதையே கடந்த 20,00,000 ஆண்டுகளாக நமது சிவாலயங்களில் தென்னாடுடைய சிவனே போற்றி;எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடி வருகிறோம்.

இந்த சிவவழிபாட்டின் ஒரு உட்பிரிவே பைரவ வழிபாடு ஆகும்.இந்த பைரவ வழிபாடு ஐந்து பெரும்பிரிவுகளைக் கொண்டிருந்தது.இந்த ஐந்து பெரும்பிரிவுகளில் நான்கு இன்றும் நமது பாரத தேசத்தில் ஆங்காங்கே வழிபாட்டுமுறையாக இருக்கின்றன.அவைகளை நம்மால் பின்பற்ற இயலாது;அவை:மாவிரதம்,காளாமுகம்,காபாலம்,பாசுபதம்,ஐக்கியவாத சைவம்.
இவைகள் பல கடுமையான கட்டுப்பாடுகளை நமது ஒரு பிறவி முழுவதும் பின்பற்ற வேண்டும்.சிறிது பின்பற்றுவதிலிருந்து நழுவினாலும்,இந்த வழிபாட்டுமுறையிலிருந்து நாமே விலகிவிடுவோம்.
பழமையான ரிக் வேதம்,அதர்வண வேதம்;உத்திர காரணாகமம்,பூர்வகாரணாகமம்,அஜிதாகமம்,சுப்ரபேதாகமம், அம்சுத்வேதாகமம்,மகுடாகமம்,ரெளரவாகமம் போன்ற ஆகமங்களிலும்,பல சாஸ்திர நூல்களிலும் பைரவ வரலாறு விரிவாக கூறப்பட்டுள்ளது.(ஆகமம் என்றால் சிவ வழிபாட்டுமுறைகளை எளிமையாகத் தெரிவிக்கும் புராதன நூல் என்று பெயர்;இதில் சிவாலயம் கட்டும் முறைகள்,வழிமுறைகளும் இருக்கும்)
ஜைன சமயத்தில் விஜயபத்ரர்,வீரபத்ரர்,மணி பத்ரர்,ஸ்ரீபைரவர்,அபராஜிதர் என்ற பெயர்களில் க்ஷேத்ரபாலகராக வழிபட்டனர்.96 வகையான பைரவர்கள் ஜைன சமயத்தில் உள்ளனர்.பவுத்த சமயத்தில் 84 வகையான வயிரவர்களும்,வாமம் அல்லது சாக்தத்தில் 64 வகை வைரவர்களும்,வைஷ்ணவத்தில் சக்கரத்தாழ்வார் உருவில் பைரவரையும்,கிருஸ்துவ சமயத்தில் நோவாஸ் ஆர்க் எனப்படுவது பிரளய காலத்தில்,க்ஷேத்திரபாலகரின் தோணியை ஒத்துள்ளது.செயிண்ட் மைக்கேல்,செயிண்ட் ஜார்ஜ் என கிருஸ்துவர்கள் வழிபடுவது ஸ்ரீபைரவருடன் ஒப்பிடக் கூடியவர்கள்.
சக்திகள்,தேவர்கள்,யோகினிகள்,சநகாதி முனிவர்கள்,கிங்கரர்கள்,சித்தர்கள் என அனனத்துத் தரப்பினரும் வழிபடும் தெய்வம் ஸ்ரீகால பைரவப் பெருமான் ஆவார்.
எங்கும் எதிலும்,நீக்கமற நிறைந்து நின்று,இந்த பிரபஞ்சத்தையும்,பஞ்சபூதங்களையும் சிருஷ்டித்து,உருவின்றி ஜோதியாக நிற்கும் சர்வேஸ்வரனின் முதல் மூர்த்தமே ஸ்ரீபைரவப் பெருமான்!!!
நம் குலதெய்வம்,நமது இஷ்ட தெய்வம்,நமது ஜாதகப்படி நமக்கு தற்போது நடைபெறும் திசை புக்தி அந்தரத்துக்குரிய தெய்வம் என்று எந்தக் கடவுளையும் நாம் வழிபட்டாலும்,அந்தக் கடவுள்களுக்கும்,ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடுவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு.
நாம் எந்தக் கடவுளை வழிபட்டாலும்,அந்தக் கடவுளிடம் நாம் திரும்பத் திரும்ப வேண்டும் கோரிக்கை மட்டுமே நிறைவேறும்.
ஆனால்,ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபட்டால்,நமக்கு என்னென்ன குறைகள் உண்டோ அத்தனைக் குறைகளையும் தானாகவே நிறைவேறும்.நாம் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடும்போது அவரிடம் மறந்து போய் எதையாவது வேண்டிய மறந்து போனாலும்,அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை;மேலும்,முற்பிறவி வரையிலும் நாம் பழுத்த சிவனடியாராக இருந்தால் அல்லது ஏதாவது ஒரு சித்தரின் நேரடி சீடராக இருந்தால் மட்டுமே இப்பிறவியில் தொடர்ந்து ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்.
ஸ்ரீகால பைரவரும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவரும் ஒருவரே!
உங்களுக்கு கடுமையான சோகங்கள்,வேதனைகள்,சிக்கல்கள்,சிரமங்கள் இருந்தால் நீங்கள் முதலில் வழிபட வேண்டியது ஸ்ரீகால பைரவப் பெருமானையே! சில வருடங்கள்/மாதங்கள் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட்டப் பின்னர்,நீங்களாகவே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாட்டிற்கு நகர்ந்துவிடுவீர்கள்.
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ