கேள்வி:ஐயா வணக்கம்! நான் உங்கள் ஆன்மீக அரசு,ஆன்மீகக்கடல் வாசித்து வருகிறேன்.வளர்பிறை அஷ்டமி வழிபாடு பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?
பதில்: பைரவப் பெருமானின் அருள் கிட்டிட தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் வழிபாடு செய்வது நன்று.அதுவும்,அந்த நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணகார்ஷண பைரவரை வழிபாடு செய்தால் நமது பணம் சார்ந்த பிரச்னைகள் தீரும்;அப்படி நமது பணம் சார்ந்த பிரச்னைகள் தீர குறைந்தது 12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
எமது ஆன்மீக ஆலோசனைப்படி,ஆன்மீகக்கடல் வலைப்பூவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தேய்பிறை அஷ்டமியைப் பற்றி தொடர்ந்து பிரபலப்படுத்தியும் வருகிறோம். அதன்படி,தமிழ்நாடு முழுவதும் ஏராளமானவர்கள் தொடர்ந்து 12 தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் அவரவர் ஊர்களுக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ சன்னதிகளுக்குச் சென்று வழிபாடு செய்து தமது கடன் பிரச்னை,வராக்கடன்கள் வசூலாகுதல்,கொடுக்க வேண்டிய கடன்களைக் கொடுத்தல் போன்றவை தீர்ந்தும் வருகின்றன.அவ்வாறு பிரச்னைகள் தீர்ந்தவைகளைப் பற்றி தினமும் ஏராளமானவர்கள் எமக்கு போனில் தெரிவித்து நன்றி கூறியும் வருகின்றனர்.
இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல் என்னவெனில்,தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ராகு கால நேரத்தில் பல ஆலயங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்வதில்லை;
அதற்கு முதல் காரணம்: இது பற்றிய விழிப்புணர்வு இல்லாதது;
இரண்டாவது காரணம்: பெரும்பாலும் மதிய நேரத்தில் ராகு காலம் வருவது;
மூன்றாவது காரணம்: தேய்பிறை அஷ்டமியானது ஒரு முழு நாளில் வருவது குறைவு;ஒருநாள் மதியம் அல்லது மாலையில் துவங்கி மறுநாள் மதியம் அல்லது மாலை வரை அமைகிறது.இதனால்,பல ஆலயங்களில் முதல் நாளே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்து வருகின்றனர்.
வளர்பிறை அஷ்டமியைப் பொறுத்தவரையில் தொடர்ந்து ஆறே ஆறு வளர்பிறை அஷ்டமிகளுக்கு மட்டும் பைரவ வழிபாடு செய்தால் போதுமானது.நமது நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாகத் தீர்ந்துவிடும்.
மேலும் வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவ வழிபாடு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை;வளர்பிறை அஷ்டமி திதி அமைந்திருக்கும் ஒரு நாளில் எந்த நேரத்திலும் பைரவ வழிபாடு செய்யலாம்.
பைரவ வழிபாடு செய்வதற்கு உரிய பொருட்கள் பட்டியல் வருமாறு:
அத்தர்
புனுகு
ஜவ்வாது
சந்தனாதித்தைலம்
செவ்வரளிமாலை
பால்
அரகஜா
இவைகளைக்கொண்டு பைரவ வழிபாடு செய்ய வேண்டும்.
அபிஷேகம் செய்யும் போது நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற பிரார்த்தனை செய்ய வேண்டும்.
கேள்வி:மிக்க நன்றிகள் ஐயா,மிகவும் மகிழ்ச்சிகள் ஐயா! ஒரு சிறு சந்தேகம். . .கேட்கலாமா ஐயா?
பதில்:கேளுங்கள்
கேள்வி: வளர்பிறை அஷ்டமி நாளில் சொர்ண பைரவரைத்தான் வழிபட வேண்டுமா? இல்லை காலபைரவரை வழிபடலாமா?
பதில்:தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமிகளுக்கும் உங்கள் ஊரில் அமைந்திருக்கும் எந்த ஒரு பைரவப்பெருமானையும் வழிபடலாம்;ஆனால்,நீங்கள் முதல் வளர்பிறை அஷ்டமி நாளன்று எந்த பைரவப் பெருமானை வழிபடுவீர்களோ,அவரையே ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களும் வழிபட வேண்டும்.மாற்றக்கூடாது.
கேள்வி:அப்போ காலபைரவரை முதல் வளர்பிறை அஷ்டமியன்று வழிபாடு செய்தால் ஆறு வளர்பிறைக்கும் அவரையே தான் வழிபாடு செய்ய வேண்டுமா?
பதில்:ஆமாம்
கேள்வி: ஐயா(தலையைச் சொறிந்தவாறு) என் தம்பி காரைக்குடியில் வசித்து வருகிறான்.அவன் சொர்ண பைரவர் மீது ரொம்ப பாசத்தோடு இருக்கான்;அவனை இலுப்பைக்குடிக்கு தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமிக்குச் சென்று வழிபாடு செய்யச் சொல்லலாமா?
பதில்:அதுதான் சரி
கேள்வி: ஐயா! எங்க அண்ணனுக்கு துலாம் ராசி,விசாகம் நட்சத்திரம்.ஏழரைச்சனியால் ரொம்ப கஷ்டப்படுகிறார்.அவருக்கு ஏதாவது பைரவ பரிகாரம் சொன்னால் நல்லாயிருக்கும். . .
பதில்:அவரை அசைவம் சாப்பிடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு,ஆறு வளர்பிறை அஷ்டமிக்கு அவர் ஊரில் இருக்கும் பைரவப் பெருமானை வழிபாடு செய்யச் சொல்லுங்கள்;அவரது கஷ்டங்கள் பறந்தோடிவிடும்.
கேள்வி:ஐயா,கடைசியாக ஒரு சந்தேகம்?
பதில்:(புன்னகைத்தவாறு) கேளுங்க
கேள்வி:ஒருவரே வளர்பிறை அஷ்டமிக்கும்,தேய்பிறை அஷ்டமிக்கும் பைரவ வழிபாடு செய்யலாமா?
பதில்:வளர்பிறை அஷ்டமி வழிபாடு செய்பவர்கள் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது.உங்களுடைய அனைத்து கோரிக்கைகளும் வளர்பிறை அஷ்டமி வழிபாட்டிலேயே கிடைத்துவிடும்.வரும்.8.3.14 சனிக்கிழமை காலை 9.44 முதல் 9.3.14 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரை வளர்பிறை அஷ்டமி திதி அமைந்திருக்கிறது.
கேள்வி:ரொம்ப நன்றிங்கய்யா,எங்களை ஆசிர்வாதம் செய்யுங்க