Saturday, December 14, 2013

ஹஸ்த நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய அஷ்டமாசித்திகள் பெற்ற திருப்புத்தூர் யோக பைரவர்!!!


கொலை,கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒரு மனிதனை மகரிஷியாக்கியவர் இந்த யோக பைரவர் ஆவார்.அந்த மகரிஷியின் பெயர் வால்மீகி!!! 

கொன்றைமரங்கள் சூழ ஆதி காலத்தில் இந்த ஆலயம் இருந்ததால் இதற்கு கொன்றைவனம் என்றும்,வால்மீகி ஞானம் பெற்றதால் வால்மீகிபுரம் என்றும் பெயர் பெற்று விளங்கியது.தற்காலத்தில் இதன்பெயர் திருப்புத்தூர் ஆகும்.சிவகெங்கை மாவட்டத்தில் மதுரை டூ காரைக்குடி சாலை மார்க்கத்தில் அமைந்திருக்கிறது.சிவகாமசுந்தரி உடனுறை திருத்தளிநாதர் யோகபைரவர் ஆலயம் 10,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான ஆலயம் ஆகும்.
மதுரையில் இருந்து காரைக்குடி செல்பவர்கள் பேருந்துப் பயணத்தின் போதே இந்த யோக பைரவரை தரிசிக்கலாம்;

இங்குள்ள பைரவர் யோக பைரவர் பாதம் இரண்டையும் பிணைத்து பெருவிரல்களால் பூமியில் ஊன்றிய கோலத்தில் இரு கால் குதிகளையும் சகனத்தில் வைத்துள்ளார்.ஜடாமகுடமும்,நுதல்விழியில் அக்னியை ஒடுங்கி காதுகளில் சுருள்தோடும் உத்பலமும் கொண்டவராக காட்சியளித்துவருகிறார்.வக்கிர தந்தங்களும்,புன்னகையும் ஒளிர்கின்ற முகத்துடன் திகழும் இவரது வலது கையில் இடியைத் தாங்கியவாறு இருக்கிறார்;இடது கரத்தை வாமத் தொடையில் வைத்துள்லார்;கழுமுனை வழியாக அனலை எழுப்பி யோக நிலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்தக்கோலம் உடைய யோகபைரவரை உலகத்திலேயே இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.யோகபைரவருக்கு வாகனம் கிடையாது.

யோகபைரவருக்கு எதிராக மூன்றாம் பிரகாரத்தில் மகாமேரு பீடம் உள்ளது.இந்த மகாமேரு பீடமானது பைரவ எந்திரத்தைத் தாங்கியவாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்தலவரலாறு:

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு,நாம் வாழ்ந்து வரும் இந்த கர்ம உலகத்தில் அசுரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.அவர்கள் தமது மாயை சக்தியால் இருளை உருவாக்கினர்;பிரகராணர் என்ற முனிவர் அசுரர்களை வென்று உலகினைக் காக்க முடிவெடுத்தார்;தேவர்களையும்,முனிவர்களையும் அழைத்துக் கொண்டு காசி மாநகரத்திற்குச் சென்றார்.அங்கே கங்கைக் கரையில் உருத்திரரை குறித்து ஒரு மஹாவேள்வியை நடத்தினார்.
அவர்களுடைய வேள்விக்கு மனமிரங்கிய சதாசிவன்,தனது சக்தியில் ஒரு பகுதியை அந்த வேள்வியில் இட்டார்.அந்த வேள்வித்தீயில் இருந்து பைரவ மூர்த்தி கார்த்திகை மாதத்து தேய்பிறை அஷ்டமியும்,பரணி நட்சத்திரமும் கூடிய அபூர்வ தினத்தில் உருவானார்.அழகிய குழந்தை வடிவில் நின்ற அந்த பைரவ மூர்த்தியைக் கண்டு அதிசயித்து,அவரை வணங்கி,தம்மை அசுரர்களிடமிருந்து காத்தருளும்படி வேண்டினர்.
அவ்வாறு வேண்டிய மறுநொடியே அசுரர்களின் மாயை விலக்கி சூரிய,சந்திரர்களை முன்பு போலவே பிரகாசிக்கச் செய்தார்;அதை அறிந்த அசுரர்கள் பைரவப் பெருமான் மீது போர் தொடுத்தனர்;பைரவர் எட்டு பைரவர்களாகப் பிரிந்து இந்தப் போரை எதிர்கொண்டனர்;பூதங்களையும்,வேதாளங்களையும் தோற்றுவித்து அசுரர்கள் மீது ஏவினார்;அவர்கள் அசுரர்களை வென்றனர்;முனிவர்களும் தேவர்களும் பைரவரை போற்றினர்.
பைரவர் அசுரர்களை அழித்த பாவம் நீங்கிட,பல தலங்களுக்குப் பயணித்தார்;ஒவ்வொரு தலத்திலும் சிவவழிபாடு செய்தார்;இறுதியில் கொன்றைவனம் என்ற இன்றைய திருப்புத்தூர் வந்து யோகத்தில் வீற்றிருந்தார்;அவருடைய யோக வழிபாட்டினால் அகம் மகிழ்ந்த சிவகாமசுந்தரி உடனுறை திருத்தளிநாதர் பைரவப் பெருமானுக்கு ஏராளமான வரங்களைத் தந்து அருள் செய்தார்.இங்கேயே வீற்றிருந்து அருள்பாலித்து சிறப்புப் பூசனைகளைப் பெற அருளினார்.

சம்பக சஷ்டி தோன்றிய வரலாறு:

ஹிரண்யாட்சகன் என்ற அரக்கன் தீவிரமான சிவபக்தனாக இருந்தான்;இவன் குழந்தை வரம் வேண்டி தவம் புரிகிறான்.தாருகாவன அழிவிற்குப் பிறகு,ஈஸ்வரன் யோக நிஷ்டையில் இருக்கிறார்.ஈஸ்வரன் ஹிரண்யாட்சகனின் தவ ஆற்றலால் மனம் இரங்கி கண்கள் திறக்கிறார்.அவனைப்பார்க்கிறார்;ஹிரண்யாட்சகனுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன;அதில் ஒன்று கண்பார்வையின்றி வளர்கிறது.அதன் பெயர் அந்தகாசுரன்;இரண்டாவது குழந்தையின் பெயர் சம்பகாகரன்.இருவருமே அதிபராக்கிரமசாலிகளாக அப்பா ஹிரண்யாட்சகனின் தவ ஆற்றலின் விளைவாலும்,சிவனருளாலும் வளர்கிறார்கள்.இவர்கள் வானுலகத் தேவர்களோடு சண்டையிட்டு பல கொடிய இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்;இருவரின் செயல்களால் உலகில் தர்மத்துக்குச்  சோதனை வந்து,தீயச் செயல்கள் பெருகுகின்றன;
அசுரசகோதரர்களின் மாயச் செயல்களால் பூமாதேவியின் எடை அதிகரிக்கிறது.பூபாரத்தைக் குறைக்கவும்,தர்மத்தை நிலைநாட்டவும் தேவர்கள் சதாசிவனை வேண்டி வழிபாடு செய்தனர்;தாருகாபுரம் எரித்தப்பின்னர்,அவரது கோபம் அக்னி சாந்தமாகி சிவனின் நெஞ்சில் சிறு குழந்தையாக இருந்தது.அதை சக்கிதேவி தனது மகனாக எடுத்து வளர்த்து வந்தாள்;தேவர்களின் துயர் நீக்கவும்,பூமியில் தர்மத்தை நிலைநாட்டிடவும் அக்னிக்குஞ்சுக்கு ஈசன் ஆணையிட அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவரே பைரவப்பெருமான்!


முதலில் ஒரு பைரவர் எட்டு பைரவர்களாக உருமாறினார்;பிறகு அந்த எட்டு பைரவர்களும் 64 மூர்த்தங்களாக(சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் செய்தது போல) உருமாறி,64 சக்தி கணங்களுடன் செயல்பட்டு அந்தகாசுரனையும்,சம்பகாசுரனையும் குமார சஷ்டியன்று வதம் செய்கிறார்.பிறகு,இருவரையும் தனது பூதகணங்களில் சேர்த்துக் கொள்கிறார்.

அந்தகாசுரனும்,சம்பகாசுரனும் தீவிரசிவபக்தர்களாக இருந்தமையால்,சிவபக்தர்களை வதம் செய்த தோஷம் நீங்கிட தனது வலது கரத்தில் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டு பல லட்சம் வருடங்களாக பூஜை செய்து வருகிறார்.இடது கரத்தை தொடையில் வைத்தவாறு காட்சியளிக்கிறார்.

குமார வடிவம் கொண்டு அசுரர்களை வதம் செய்த நாளை குமார சஷ்டி என்றும்,சம்பக சஷ்டி என்றும் பல லட்சம் வருடங்களாக திருப்புத்தூரில் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு தமிழ் வருடமும் வரும் கார்த்திகை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதி வரும் நாளில் காப்பு கட்டும் விழாவுடன் சம்பகசஷ்டி துவங்கி,ஆறுநாட்கள் விரதம் இருந்து தினம் தோறும் அஷ்டபைரவர் ஹோமம் நடைபெறுகிறது.தினமும் அபிஷேகமும்,ஆராதனைகளும் அதிவிமரிசையாக நடைபெறுகின்றன;கொடிய துன்பங்கள் தீர்த்து நெடிய இன்பம் தந்த இந்த குமார சஷ்டி நாளில் விரதம் இருப்பவர்கள் பெறுவர்.குமார சஷ்டி நாளில் விரதம் இருந்து வழிபட எல்லா நன்மைகளையும் அள்ளித் தருவார் யோக பைரவர்!!!

ஜெயந்தன் விழா:

தேவேந்திரனின் புதல்வர்களில் ஒருவன் ஜெயந்தன்.இவன் ஒருமுறை பூவுலகிற்கு வந்தபோது ஒரு பெண்ணின் இசையால் கவரப்பட்டு அவளின் இருப்பிடம் வந்தடைந்தான்.அவளது அழகில் மயங்கி, அவளை அவளது சம்மதமின்றி தழுவ முயன்றான்.
அவளோ, ‘ஏ! இந்திர குமாரனே!! நான் ஒரு முனிவரின் மனைவி.உடனே இந்த இடத்தைவிட்டுப் போய்விடு” என்று கத்தினாள்.
மோகத்தால் கட்டுண்ட ஜெயந்தனோ, “அழகியே! அழகின் அழகே!! முனிவனால் உனக்கு என்ன பயன்? உனது அழகு வீணாகும்;நாம் கலந்திருப்போம்;வா!!” என்று பிதற்றியவாறு அவளை மீண்டும் கட்டியணைக்க முயன்றான்.அவளோ அவ்விடம் விட்டு ஓடினாள்.
இந்த சம்பவம் நிகழ்ந்த போது,அந்த பெண்ணின் கணவனாகிய முனிவர் அவ்விடத்துக்கு வந்தார்;ஜெயந்தனின் அட்டூழியத்தைக் கண்டு அவர் கோபசொரூபமானார்;அவனை பூதமாகும் படி சாபம் இட்டார்.
உடனே ஜெயந்தன் பூதமாகிவிட்டான்;இருந்தும் அவர் கோபம் தணியவில்லை;எனவே,ஒரு மலையை அந்த பூதத்தின்  தலைமீது வைத்து அதனைச் சுமந்து திரியும் படி செய்தார்.
அதனால் மோகம் நீங்கிய ஜெயந்தன் பூதவடிவில், “முனிவரே! எனது தவற்றை இப்போது உணர்ந்துவிட்டேன்;என்னை மன்னித்தருளுங்கள்” என்று அவரிடம் வேண்டினான்.

அவரது கோபம் தணிந்து,அவனது கெஞ்சலால் அவர் மனதில் இரக்கம் உண்டானது. ‘ஜெயந்தா! இந்த துன்பத்தை கொஞ்ச நாட்களாவது நீ அனுபவித்தே ஆகவேண்டும்;நீ தானாகவே யோகபைரவப் பெருமான் வீற்றிருக்கும் கொன்றைவனத்திற்கு(இன்றைய திருப்புத்தூர்)ச் செல்வாய்;அப்போது அவரது அருளால் இந்த சாபம் நீங்கி,நீ பழைய நிலையை அடைவாய்;இனியாவது பிறன் மனை நோக்க நினைக்காதே” என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன்படி ஜெயந்தன் பூதவடிவில் தலையில் மலையை சுமந்தவாறு பல தலங்களுக்குப் பயணித்தான்.இறுதியில் கொன்றைவனத்திற்கு வருகைதந்தான்.அவன் மனதில் இனம் புரியாத நிம்மதி உணர்வு பரவியது.தன்னையறியாமல் யோகபைரவரின் முன்பாகச் சென்றான்.பூதத்தின் தலையில் இருந்த மலை வெகுதொலைவில் போய்விழுந்தது;பூதத்தின்(ஜெயந்தனின் கையில் இருந்த இடி ஆயுதம் ஜெயந்தனின் கையில் இருந்து விடுபட்டு,யோக பைரவரின் கையில் பழ வடிவில் சென்று அமர்ந்தது;பூத வடிவம் நீங்கிட,மன நிம்மதியடைந்த ஜெயந்தன் யோக பைரவரைத் தொழுது ஆசி பெற்று தேவலோகம் சென்றடைந்தான்.

அவன் இவ்வாறு சாபம் நிவர்த்தி ஆனது சித்திரை மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமை ஆகும்.ஒவ்வொரு தமிழ்வருடமும் சித்திரை மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமையன்று இங்கே ஜெயந்தன் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாளில் யோகபைரவப் பெருமான் மாலை நேரத்தில் குதிரைவாகனத்தில் பவனி வருகிறார்.

கன்னி ராசி , ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கே தொடர்ந்து எட்டு ஹஸ்த நட்சத்திர நாளில் வருகை தந்து வழிபட்டு வந்தால்,அவர்களின் ஆத்மா கர்மவினைகள் முழுமையாக நீங்கி பரிசுத்தமடையும்;கடந்த காலத் தவறுகள்,பாவங்களிலிருந்து விலகி நிம்மதியைப் பெறுவார்கள்.
அத்தர்
புனுகு
ஜவ்வாது
சந்தனாதித்தைலம்
பால்
அரகஜா
செவ்வரளிமாலை
மரிக்கொழுந்து
செவ்வாழை போன்ற பொருட்களுடன் கோவில் நிர்வாகத்தின் அனுமதியோடு யோகபைரவரை அபிஷேகம் செய்து அருள்பெறலாம்.ஒன்றுக்கும் மேற்பட்ட ஹஸ்த நட்சத்திரக்காரர்கள் ஒன்று சேர்ந்தும் வழிபாடு செய்யலாம்.இவர்களுக்கு ஹஸ்த நட்சத்திரமும் தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்து வரும் நாளில் அளவற்ற அருளைப் பெறுவர்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ



No comments:

Post a Comment