Monday, October 7, 2013

பல்லாயிரம் கோடி வருடங்களாக வாழும் சிரஞ்ஜீவி ஸ்ரீகாகபுஜண்டசித்தர்பிரான்!!!




மந்திர உபதேசம்,தியானம் இரண்டுமே ஒரு குருவின் மூலமாக மட்டுமே பெறவேண்டும்;ஏன் எனில் இது நமது ஹிந்துப்பாரம்பரியம் மட்டுமல்ல;உலகின் ஆதிசமயமான சைவப்பாரம்பரியமும்கூட! தகுந்த ஆன்மீக குரு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறார்.நமது ஆன்மீகத்தகுதியை நாமே உயர்த்திக் கொண்டால் மட்டுமே அவரை நாம் இனம் காண முடியும்.நமது ஆன்மீகத் தகுதியை அதிகரிக்க நாம் செய்ய வேண்டியது என்னவெனில்,யாரிடமும் சொல்லாமலும்,யாரையும் அழைக்காமலும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களில் தனியாக அண்ணாமலைக்குச் சென்று திருவாதிரை வரும் இரவில் கிரிவலம் செல்ல வேண்டும்.ஆண் எனில் மஞ்சள் நிற வேட்டி மட்டும் அணிந்து,இரு கைகளிலும் தலா ஒரு ஐந்து முகருத்ராட்சத்தை வைத்துக் கொண்டு கிரிவலமந்திரத்தை ஜபித்துக் கொண்டே பயணிக்க வேண்டும்.இப்படி குறைந்தது 24 தடவை சென்று வந்தால் தகுந்த குருவை அடையாளம் காணக்கூடிய தகுதி நமக்குக் கிடைத்துவிடும்;ஒருவேளை திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் செல்லமுடியாவிடில்,அமாவாசை இரவுகளில் இவ்வாறு அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்.
தகுந்த குருவை ஏன் அடையாளம் காண வேண்டும்?
ஒரு கதையின் மூலமாக ரமணமகரிஷி இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
ஒரு அரசரும்,அமைச்சரும் பேசிக்கொண்டிருந்தனர்;அப்போது அந்த அமைச்சர் தான் தியானத்திற்குரிய தீட்சை பெற்றிருந்தார்;தனக்கும் அந்த தியானத்தைச் சொல்லித் தருமாறு அரசர்,அமைச்சரை பணித்தார்;அமைச்சரோ பணிவோடு அரசரிடம் மறுப்பு தெரிவித்தார்.
அரசே! ஒரு குருவின் வழியாகத்தான் நீங்கள் தீட்சை பெற வேண்டும்
அதற்கு அரசர்,
நீங்கள் கற்றுக்கொண்டீர்களே! அதையேதான் குருவும் கற்றுத் தரப்போகிறார்.யார் கற்றுத் தந்தாலென்ன?
என்றார்.
அமைச்சர் சுற்றும் முற்றும் பார்த்தார்.அங்கே தூரத்தில் ஒரு காவலர் நின்று கொண்டிருந்தார்.அந்த காவலரை அமைச்சர் அழைத்து,
காவலனே! நீ அரசரின் கைகளைப்பற்றி கைகுலுக்கு
என்று ஆணையிட்டார்.அந்தக் காவலர்,நான் மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
மன்னரிடம் அமைச்சர், “அரசே,நீங்கள் சொல்லுங்கள்”என்று கேட்டுக்கொண்டார்.
அரசர் சொன்ன மறுவிநாடியே அவர் கைகளைப்பற்றிக்குலுக்குகிறார் அந்தக் காவலர்.
“பார்த்தீர்களா! ஒரே கட்டளைதான்.நீங்கள் சொன்னால் கேட்கிறார்கள்.ஒரு கட்டளையே இப்படியென்றால், தியானம்,மந்திர உபதேசம் போன்றவற்றை ஞானிகளிடம் இருந்து பெற்றால்தானே பலன் இருக்கும்” என்று மடக்கினார் அமைச்சர்.
ஆன்மீகத் தேடலில் நாட்டமென்றாலும் சரி,பொருளாதாரச் சுயச்சார்பை எட்டவேண்டியிருந்தாலும் சரி,மனக்கட்டுப்பாடு மிகவும் அவசியம்.பேச்சையும் எப்போதும் அளந்தே பேசவேண்டும்; ‘சினமடக்கக்கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனமடக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே’ என்பது ஆன்றோர் வாக்கும்.
மனிதன் பூமியில் திரும்பத் திரும்ப பிறப்பதற்குக் காரணம் அவன் செய்யும் தீவினைகள் மட்டுமல்ல;நல்வினைகளுமே பிறவிகளின் தொடர்ச்சிக்குக் காரணமாகிவிடுகின்றன.அகப்பற்றோடு செய்யப்படும் எந்தப்பணியும் கர்மவினையாக நம் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.நல்வினை=தீவினை இரண்டுமே பிறவிக்கு வழிவகுப்பதால் தான்,அவற்றை ‘இருள்சேர் இருவினை’ என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
நாம் செய்யும் செயல்கள் மீது பற்றுவைக்காமல் இருக்க வேண்டும்;அப்படி பற்றுவைக்காமல் இருக்கப் பழக சுவாமி விவேகானந்தரின் ‘கர்ம யோகம்’ என்ற புத்தகத்தின் கருத்துக்களை திரும்பத் திரும்ப வாசித்து,நமது மனதுக்குள் பதிய வைக்க வேண்டும்.
உலகில் மொத்தம் 118 தியானமுறைகள் இருக்கின்றன;அவை ஒவ்வொன்றும் ஞானிகளின் அருள் நோக்கத்திற்கு ஏற்ப அவரவர் தியான முறைகள் மாறுபடும் என்றும் யோகநெறி சொல்கிறது.
இந்த உலகம் ஆறுமுறை அழிக்கப்பட்டிருக்கிறது;ஒவ்வொரு முறையும் இவ்வுலகை காக்க ஒவ்வொரு காரணகர்த்தாக்களை அனுப்பிவைத்தார்கள்.இம்முறை கொடூரங்கள் நிறைந்த இவ்வுலகை காக்க,இதுவரை ஒவ்வொரு காரணகர்த்தாக்களை அனுப்பிவைத்த அந்த ‘வேதத் தாய்’ வந்திருக்கிறாள் என்று அந்த புத்தகத்தில் இருந்தது.
ஏராளமான சித்தர்கள் தமது தவப்பயிற்சியைச் செய்யும் இடம் சுருளிமலைப்பகுதி ஆகும்.இங்கே மனிதர்களால் நெருங்கவே முடியாத ஒரு புண்ணியத் தீர்த்தம் இருக்கிறது.சுருளிமலையின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் அந்த புண்ணியத் தீர்த்தத்தின் பெயர் கர்மதா தீர்த்தம்.அது சப்த கன்னியர்கள் நீராடுகிற இடம் என்று சொல்லப்படுகிறது.அந்தத் தீர்த்தத்தில் நீராடிய மறுநிமிடமே நமது அனைத்து பிறவிகளிலும் செய்த கர்மங்கள் நீங்கும்;ஆனால்,மனிதர்கள் அந்தத் தீர்த்தத்தை நெருங்கவே முடியாது;ஒரு புல்வெளியைக் கடந்தே அந்தத் தீர்த்தத்தை அடைய முடியும்.
யாராவது அந்தப்புல்வெளியை மிதித்தால்,மனம் உடனே தடுமாறிவிடும்;அந்தத் தடுமாற்றத்தால் திரும்பிவிடுவார்கள்;அந்தப்புல்லுக்கு ‘மதி கெட்டான் புல்’ என்று பெயர்!
சாதாரண மனிதர்களே சித்தர்களைத் தரிசிக்க விரும்புவர்;சித்தர் பரம்பரையில் பிறந்தவர்கள் இப்பிறவி முழுவதுமே ஸ்ரீகால பைரவ வழிபாட்டையும்,ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர்+ஸ்ரீபகுளாதேவி வழிபாட்டையும் தொடர்ந்து பின்பற்றுவர்;இந்த பூமி அழிந்தாலும்,அழிந்தப்பின்னர் மீண்டும் இந்த பூமி உருவாகும் போதும் அழியாமல் இருப்பவர் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஒருவரே! அவரது வாழ்க்கை வரலாறு பூர்வபுண்ணியம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று நினைக்காதீர்கள்;இப்பிறவியிலேயே சித்தராக விரும்புவோர்,இப்பிறவியிலேயே ஸ்ரீகாலபைரவப் பெருமானைச் சரணடையத் துடிப்பவர்களுக்கு மட்டுமே அவரது வாழ்க்கை வரலாறு தானாகவே தேடி வரும்.
பல ஜன்மங்களாக ஸ்ரீகால பைரவ உபாசனை அல்லது வழிபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்ரீகாகபுஜண்டரின் அருளாசி கிட்டும்;மற்றவர்கள் அவரை உபாசனை செய்பவர்களை சந்தித்து ஆசி வாங்கிக் கொண்டு சராசரி வாழ்க்கை வாழ வேண்டியதுதான்.
நன்றி:மந்திர மழை
ஆன்மீகக்கடலின் விளக்கம்:இன்று ஒரு ஜிமெயில் ஐடி இருந்தாலே யார் வேண்டுமானாலும் ஒரு வலைப்பூ துவங்கி,எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாம்;எழுதித் தள்ளலாம்;இதனால்,பலர் தமது வீட்டில் இருக்கும் பழமையான நூல்களில் இருக்கும் எல்லாவிதமான மந்திரங்களையும் அதை ஜபிக்கும் முறைகளையும் எழுதி வெளியிட்டுவிடுகின்றனர்;அது மிகவும் தவறு;
நமக்கு பூர்வஜன்ம புண்ணியம் இருப்பதால் இப்படிப்பட்ட பழமையான நூல்கள் நம்மிடம் இருக்கின்றன;நம்மைத் தேடி வருகின்றன;இந்த மந்திர உபதேசத்தை யார் வேண்டுமானாலும்,யாருக்கு வேண்டுமானாலும் உபதேசம் செய்வது (உபதேசம் செய்பவருக்கு) உடல்நலக்குறைவை உண்டாக்கும்;மந்திரம் என்றாலே ரகசியமாக உபதேசிக்கக்கூடிய வார்த்தைகளின் தொகுப்பு என்று ஒரு அர்த்தம் உண்டு;
தகுந்த குருவின் மூலமாக நமது தகுதிகளை வளர்த்துக் கொண்டு,சில பல ஆண்டுகளுக்குப் பிறகு நாமே குருவானப் பின்னர்,தகுதி வாய்ந்த சீடர்களைக் கண்டுணர்ந்தப் பின்னர்,அவர்களின் தராதரத்தை உயர்த்திவிட்டு,சந்தர்ப்பமும் தகுந்த நேரமும்(நட்சத்திரமும்,திதியும் சேர்ந்து வரும்) வரும் போது மட்டுமே மந்திர உபதேசத்தைச் செய்ய வேண்டும்.இல்லாவிடில்,(கிடைக்கும் மந்திரங்களை எல்லாம் இணையத்தில் எழுதி வெளியிடுவதால் வேறுவிதமான சாபங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்)
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment